‘புலிக்குத்தி’ அணிந்துரை – உமா ஷக்தி

கண்ணீரும் புன்னகையும் ஒருசேர வாசிப்புக்கு உள்ளாக்கிய கதைகள் அடங்கிய தொகுப்பு ‘புலிக்குத்தி’. ராம் தங்கத்தின் முதல் தொகுப்பான திருக்கார்த்தியல் புதிய எழுத்தாளர் ஒருவரின் தேர்ந்த எழுத்து வன்மையை வாசகருக்கு அறிமுகப்படுத்தியது. நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளராக அவர் வாசகப் பரப்பிலும், எழுத்தாளர்களின் மத்தியிலும் அறியப்பட்டு அத்தொகுப்பிற்காகப் பல விருதுகளையும் வாங்கினார். அடுத்து வெளியான அவரது ராஜவனம் குறுநாவல் முற்றிலும் வேறான கதைக்களத்தில் பயணித்து அவரை ஒரே பாய்ச்சலில் வேறொரு தளத்திற்கு உயர்த்தியது. முந்தைய இரண்டு படைப்புகளையும்விட ‘புலிக்குத்தி’ முற்றிலும் வித்தியாசமானதாகவும், அதே சமயம் எழுத்தாளரின் பலமாகத் திகழும் வட்டாரமொழி வழக்கிலும் எழுதப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் மொத்தம் ஒன்பது கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு வாழ்வியலை, ஒரு துயரை, ஒரு வரலாற்றை, ஒரு சிறுவனின் ஆன்மாவை என வெவ்வேறு களங்களைக் கொண்டுள்ளது. நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கும், கதைகளின் தீவிரப் போக்கும், இக்கதைகளைப் படிப்பவரின் கவனத்தை முழுக்கமுழுக்க தக்க வைக்கும் திறன் கொண்டவை. அதிலும் குறிப்பாக தலைப்புக் கதையான புலிக்குத்தி. கதையின் ஆரம்பத்திலேயே ஒரு கொலையுடன் தொடங்கி, ஒரு மர்மக் கதைக்கான பரபரப்புடன் விவரிக்கப்பட்டு, இறுதியில் மனதை கனக்கச் செய்யும் சம்பவத்துடன் முடியும்.

ஆசிரியருக்கு அணுக்கமான கதைகள் பால்யம் பற்றியவை என்பது அவரது வாசகர் அறிந்ததே. பஞ்சுமிட்டாயும் பால்ராஜ் அண்ணனும் கதையில் வரும் சிறுவனாகட்டும், அந்நியம் கதையில் வரும் செந்தில் கதாபாத்திரமாகட்டும், வாசம் கதையில் வரும் ரமேஷ் மற்றும் அடைக்கலபுரத்தில் இயேசு கதையில் வரும் ராஜா இவர்களை எளிதில் யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. ஒவ்வொரு சிறுவனின் உலகமும் வலியாலும், துயராலும், சிறு பிராயத்துச் சிக்கல்கள், சின்னச்சின்ன ஆசைகள், பிரிவு அல்லது மரணம் மற்றும் வறுமை ஆகியவற்றுடன் சேர்த்து அவர்களது உலகில் நம்மைக் கையறு நிலையில் அலைவுற வைத்திருக்கும்.

சிறுவர்களின் உலகம் விளையாட்டுகளால் மட்டுமல்ல விதவிதமான தின்பண்டங்களாலும் ஆனது. வாசம் மிகுந்த உண்ணத் தகுந்த எதுவும் அவர்களின் உமிழ்நீரை சுரந்துவிடக் கூடியது. அடைக்கலாபுரத்தில் இயேசு என்ற கதையும், வாசம் கதையும் வெகு நாட்கள் மனதை விட்டு நீங்காது என்பது உறுதி. அடைக்கலாபுரத்தில் இயேசு கதை ஓர்மையுடனும் கூர்மையான அங்கதத்துடனும் புனையப்பட்டிருக்கும். கதையினுடே அவ்வூரின் வரைபடம் நம் கண்முன்னே காட்சிப்படுத்தப்படுவதுடன், அங்கு வாழும் மக்களின் பிரச்னைகளும் தென்படும். இக்கதை ஒரு முழுநீளத் படத்துக்கான திரைக்கதையை உள்ளடக்கியுள்ளது.

காத்திருப்பு கதை பிரிவை, அதன் தீராத் துயரைச் சொல்லும் கதை. கதைகளில் பொதுவாக, எப்போதும் மகனின் பிரிவு என்பதைத் தாயின் கோணத்திலிருந்துதான் சொல்லப்பட்டிருக்கும். இந்தக் கதை சற்று வித்தியாசமாக ஒரு தந்தையின் பார்வையிலிருந்து கூறப்பட்டிருக்கிறது. வழக்கம் போலவே இக்கதையை தன் பாணியில் மிக ஆழமாக விவரித்துள்ளார் கதாசிரியர்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள எல்லாக் கதைகளையும் இணைக்கும் புள்ளி பாடுகள்தான். மானுட வலியும், எதிர்ப்பார்ப்பும், ஏமாற்றமும், வாழ்வின் போதாமைகளும், ஏதுமறியாக் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் அதிர்ச்சிகளும், அவற்றை எதிர்கொள்ளும் மனங்களும்தான் இக்கதையின் போக்குகளை தீர்மானிப்பவைகள். பனங்காட்டு இசக்கி என்ற கதை இத்தொகுப்பில் தனித்த குரலில் பேசும் ஒரு யட்சியின் கதை. சற்று அமானுஷ்யமாக இருந்தாலும், புலிக்குத்தி கதையில் வரும் வானவியும், இக்கதையில் வரும் உடையாளும் பெண்ணாகப் பிறந்து மானத்துக்காக உயிர் நீத்த அல்லது அநீதியாகக் கொல்லப்பட, எந்தப் பாவமும் அறியாத அவர்களின் கொடூர மரணம், மக்களின் குற்றவுணர்வாலும், அன்பினாலும், அதீத பயத்தினாலும் இசக்கியாக மாறி என்றென்றும் அவர்களுக்கே அருள் புரிகிறார்கள்.

புலிக்குத்தி தொகுப்பில் இடம்பெற்றுள்ள சாதி வாக்கு மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கதைகள் மிக முக்கியமானவை. சமகால சாதிய அரசியலை மிக அழுத்தமாக சாடும் சாதி வாக்கு ஒவ்வொரு வரியும் நிஜம் பேசுகிறது. கம்யூனிஸ்ட் கதை கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலகட்டத்தையும், எல்லாவற்றையும் மீறி அதன் வளர்ச்சியையும் படம்பிடித்துக் காட்டுகிறது. இக்கதையில் கூறப்பட்டிருக்கும் துல்லியமான விவரணைகள், செய்திகளைக் காலவரிசை மாறாமல் கூறிய நேர்த்தி ஆகியவை மிக முக்கியமானது. மேலும் இக்கதை மலையாளத்தைக் கூறுமொழியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது மிகச் சிறப்பு. இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கதையென இக்கதையைக் கூறலாம். காரணம் வரலாற்றை மிகவும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.

தற்காலத்தில் சில எழுத்தாளர்கள் மேலோட்டமாகவும், புரியாத இசங்களை உள்ளடக்கியும், மொழிபெயர்ப்பு கதைகளின் சாயலிலும் போலச் செய்து எழுதி வருகிறார்கள். நம் மண்ணின் கதைகளையும், அதன் சாரத்தை, உயிரோட்டத்தை உள்ளவாறே வெகுசில எழுத்தாளர்கள்தான் பதிவு செய்கிறார்கள். அத்தகைய எழுத்துகள்தான் அசலானவை; உயிர்ப்பானவையும்கூட. அத்தகைய செறிவான கதைகளைப் புனைவதில் ராம் தங்கம் பிரதானமானவர். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் உள்ளடக்கம், வடிவ நேர்த்தி, விவரணைகள், கட்டுக்கோப்பு மற்றும் அழகியலுடனான மொழிநடையுமே அதற்குச் சாட்சி. கதைகளை நேசிக்கும் வாசகர்களுக்கு மிகுந்த ஈர்ப்பினை இத்தொகுப்பு உருவாக்கிவிடும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

உக்கிரமான படைப்புலகில் தன்னை ஒப்புக்கொடுத்த ஒருவனால் மட்டுமே இத்தகைய வலிமையான கதைகளையும், கதாபாத்திரங்களையும் உயிரோட்டமான சூழல்களையும் உருவாக்க முடியும். தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தையும், அதன் மதீப்பிடுகளையும், சாதியத்தையும், தன் எழுத்துகளில் பிரதிபலிக்க வைத்திருக்கும் ராம் தங்கம் ஆகச் சிறந்த கதைசொல்லியாக நம் கண்முன் நிற்கிறார். அவர் தன் கதைகள் மூலம் நமக்குக் காண்பித்த உலகம் உன்னதமானவர்களால் மட்டும் ஆனதல்ல. பிழை செய்தும், வஞ்சிக்கப்பட்டும், களவு செய்தும், தனிமைப்பட்டும், கொல்லப்பட்டும் என வாழ்வின் பல்சக்கரத்தால் நித்தம் நசுக்கப்படுகிறவர்கள். வீழ்ச்சியையும், வளர்ச்சியையும், அதே சமயம் வாழ்தலின் ருசியையும் அறிந்தவர்கள். மெல்ல இந்த உலகைத் தன் பாடுகள் மூலமே கடந்துபோகக் கூடிய வலிமை மிக்கவர்கள். அவர்கள் கோருவது நமது இரக்கத்தையோ விசாரிப்பையோ அல்ல. அவர்களுக்கேயான அந்த சின்னஞ்சிறு வாழ்க்கையைத்தான்.

வாழ்த்துகள் ராம் தங்கம்.

உமா ஷக்தி

About the author

ramthangam

Add comment

By ramthangam