About Ram Thangam – Tamil

A

 

தமிழின் குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளரான ராம் தங்கம்  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். 2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதினை தன்னுடைய ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்புக்காக பெற்றவர்.

 28-2-1988 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி பிறந்த ராம் தங்கம், பள்ளிக்கல்வியை சமாதானபுரம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் கற்றவர். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் இளங்கலை வரலாறு பட்டமும், டிப்ளமோ இன் மீடியா ஆர்ட் பட்டமும் பெற்றவர். சிறுவயதிலிருந்தே தொடங்கிய வாசிப்பின் ஆர்வமாக எழுதத் தொடங்கிய இவர் தினகரன், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றி தற்போது இலக்கியம், சினிமா என முழுநேர எழுத்தாளராக தனது எழுத்துப் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி இவரது முதல் புத்தகமான ‘காந்திராமன்’ வெளிவந்தது.  அதனை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன்  அவர்கள் நாகர்கோவிலில் வெளியிட்டார். காந்திராமன்  ஓர் சுதந்திர போராட்ட வீரர். வைக்கம், சுசீந்திரம் கோவில் நுழைவு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு போராடியவர். தெற்கெல்லை போராட்டத்தின் முக்கியமான தளபதி. அவருடைய வாழ்க்கை வரலாறான அந்தப் புத்தகத்திற்குச் சிறந்த வரலாற்றுப் புத்தகத்திற்கான ‘தெற்கு எழுத்தாளர் இயக்க விருது’ கிடைத்தது. 

 கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு மற்றும் அந்தப் பகுதியில் வாழ்ந்த தியாகிகள், எழுத்தாளர்கள் பற்றி பயணம் சார்ந்த  கதை சொல்லல் முறையில் எழுதப்பட்ட ‘ஊர்சுற்றிப் பறவை’  புத்தகம் ஜெ.இ. பதிப்பகம் மூலம்  2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி  வெளிவந்தது. அதனை காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் அவர்கள் நாகர்கோவிலில் வெளியிட்டார். தற்போது  ‘ஊர்சுற்றிப் பறவை’ புத்தம் வானவில் புத்தகாலயம் வெளியீடாக மறுபதிப்பு கண்டுள்ளது.

 நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா பெருமாள் அவர்களோடு ஏற்பட்ட தொடர்பு இவரை வரலாற்றுப் பக்கம் திருப்பியது. அவர் சொன்ன ஒரு நாட்டார் வழக்காற்று பாடலில் இருந்து இவரது அடுத்தப் புத்தகமான ‘மீனவ வீரனுக்கு ஒரு கோவில்’ உருவானது.  ஜெ. இ. பதிப்பகம் மூலம் வெளிவந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு நூலான அது   2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்களால் நாகர்கோவிலில் வெளியிடப்பட்டது.   ராம் தங்கத்தின் முதல் மூன்று புத்தகங்களுக்கு வரலாற்று ஆய்வாளர் அ.கா. பெருமாள் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார்.

தன் நண்பர்களுடன் இணைந்து ‘திரிவேணி இலக்கியச் சங்கமம்’ என்கிற அமைப்பை 2016-17 காலக்கட்டத்தில் நடத்தி வந்த ராம் தங்கம் அதன் மூலம் புத்தக அறிமுகங்கள் என பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். மக்கள் வாசிப்பு இயக்கத்தோடு இணைந்து திரிவேணி இலக்கியச் சங்கமமும் மூன்று முறை நாகர்கோவிலில் புத்தகக் கண்காட்சியினை ஒருங்கிணைத்து நடத்தியது.

 சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ ஆகியோரின் உந்துதலின் மூலம் ராம் தங்கம் கதைகள் எழுதத் தொடங்கினார். 2017 நவம்பர் மாதம் 30ஆம் தேதி ஆனந்தவிகடனில் இவரது ‘திருக்கார்த்தியல்’ என்கிற முதல் சிறுகதை வெளிவந்தது. அது தமிழ் இலக்கியப் பரப்பில் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்தச் சிறுகதைக்கு ஞானியின் கோலம் அறக்கட்டளையின்  ‘அசோகமித்திரன்’ விருது கிடைத்தது.  2018ஆம் ஆண்டு டிசம்பரில் ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்பு வம்சி புக்ஸ் வெளியீடாக வெளிவந்தது. அது ஊடகவியலாளர் ப. திருமாவேலன் அவர்களால் சென்னையில் வெளியிடப்பட்டது.

 திருக்கார்த்தியல் தமிழ் இலக்கியப் பரப்பில் ராம் தங்கத்துக்கு தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தத் தொகுப்பு 2019ஆம் ஆண்டுக்கான ‘சுஜாதா விருது, வடசென்னை தமிழ் இலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, படைப்பு இலக்கிய விருது, அன்றில் இலக்கிய விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றது.

2019ஆம் ஆண்டு நவம்பர் 15-16  தேதிகளில் நாகர்கோவிலில் தமிழின் மூத்த எழுத்தாளரான பொன்னீலன் அவர்களுக்கு பொன்னீலன்-80 விழாவைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள், வாசகர்கள் என அனைவரையும் அழைத்து பெரும்விழாவாகக் கொண்டாடியவர் ராம் தங்கம். அன்று வெளியிடப்பட்ட பொன்னீலன்-80 புத்தகத்தின் தொகுப்பாசிரியரும் இவர்தான்.

2020ஆம் ஆண்டு சிங்கப்பூர் ‘மாயா இலக்கிய வட்டம்’ நடத்திய குறுநாவல் போட்டியில் ராம் தங்கத்தின் ‘ராஜவனம்’ குறுநாவலை முதல் பரிசுக்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா தேர்ந்தெடுத்தார். அந்தப் புத்தகம் வம்சி வெளியீடாக வெளிவந்தது. அதற்கு படைப்பு இலக்கிய விருதும், விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கவிஞர் மீரா விருதும் கிடைத்தது.

‘எனக்குள்ளே இருக்கும் தேடலும் ஆர்வமும் தான் நிறைய புத்தகங்களை  வாசிக்க வைக்கிறது.  எழுத வைக்கிறது. பயணம் செய்ய வைக்கிறது. இந்த மூன்றும் சேரும்போது அவை எல்லாமே படைப்புகளிலும் நிறைந்து நிற்கிறது’  என தன் எழுத்தின் மீது மதிப்பீடு கொண்ட இவரின்  இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘புலிக்குத்தி’ வம்சி புக்ஸ் வெளியீடாக 2021ஆம் ஆண்டு டிசம்பரில் வெளிவந்தது. அது 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சௌமா இலக்கிய விருதையும், படைப்பு இலக்கிய விருதையும் பெற்றது.

 ‘பயணம் பலவித மாற்றங்களை நம்மில் உருவாக்கும். புதிய நிலப்பரப்பு, புதிய மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை முறைகள் என அனைத்தையும் கற்றுக்கொள்ள செய்யும். இலக்கியங்களைப் போல மனிதனை பயணங்கள் செழுமையாக்கும்’ என்கிற ராம் தங்கம் பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், தான் சென்று வந்த பயண அனுபவங்களை ‘கடவுளின் தேசத்தில்’ என வானவில் புத்தகாலயம் மூலம்  புத்தகமாக கொண்டு வந்துள்ளார். அதற்கு படைப்பு இலக்கியக் குழுமத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த கட்டுரை நூலுக்கான விருது கிடைத்தது.

நேஷனல் புக் ட்ரஸ்ட்டுக்காக ‘சூரியனை எட்ட ஏழு படிகள்’ ,  ‘காட்டிலே ஆனந்தம்’,  ‘ஒரு சுண்டெலியின் கதை ஆகிய சிறுவர் கதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார்.   இவர் எழுதிய குமரிமாவட்டம் சார்ந்த வரலாற்றுக் கட்டுரைகள் ‘சிதறால்’ என்று அமேசான் கிண்டிலில் மின்நூலாக வெளிவந்துள்ளது. ராம் தங்கத்தின் புத்தகங்களை பல கல்லூரி மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

‘என்னுடைய நிலம் தான் என்னுடைய களம். நிலம் சார்ந்த மனிதர்களுடைய வாழ்க்கையை எழுதுவது எனக்கு இலகுவாகவும் இருக்கிறது’ என தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வியலை, வரலாறை, தொன்மத்தை எழுதிக் கொண்டிருக்கும் ராம் தங்கத்தின் திருக்கார்த்தியல் தொகுப்பில் உள்ள ‘வெளிச்சம்’ சிறுகதை நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது.

சாகித்ய அகாடமி வெளியீடாக எழுத்தாளர் பாரதிபாலன் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள தமிழ்ச்சிறுகதைகள் 2000-2020 தொகுப்புக்கு ‘திருக்கார்த்தியல்’ தொகுப்பில் உள்ள ‘கடந்து போகும்’ சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கதை மொழிபெயர்ப்பாளர் ரகுராம் மஞ்சேரி அவர்களால் ‘கடந்நு போகும்’ என்கிற தலைப்பில் மலையாளத்தில்  மொழிபெயர்க்கபட்டு தேசாபிமணி  வார இதழில் 2023 ஜூன் மாதம் வெளியானது.

 ஆத்மா ஆன்லைன் மலையாள இணையதளத்தின் ஆர்டிரியா வார மின்னிதழில் திருக்கார்த்தியல் குறித்த நேர்காணல் 2023 ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து 2023 செப்டம்பர் 11ஆம் தேதி வெளியான ‘மாத்யமம்’ மலையாள வார இதழின் கவர் ஸ்டோரியாக ராம் தங்கத்தின் நேர்காணல் வெளிவந்தது. அதே இதழில் ‘திருக்கார்த்தியல்’ சிறுகதை, ஷாபி செறுமாவிளையால் மொழிபெயர்க்கப்பட்டு ‘திருக்கார்த்திகா’ என்கிற தலைப்பில் வெளியானது. 2023ஆம் ஆண்டு டிசம்பரில் வம்சி புக்ஸ் வெளியீடாக வாரணம் நாவல் வெளிவந்தது.