புலிக்குத்தி! – புன்னகையை தொலைக்க செய்த அதிகாரம்!
“திருக்கார்த்தியல்” சிறுகதை தொகுப்பை தொடர்ந்து எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய “புலிக்குத்தி” சிறுகதை தொகுப்பு மொத்தம் ஒன்பது சிறுகதைகளை கொண்டுள்ளன. ஒன்பது சிறுகதைகளுமே இச்சமூகத்தில் அதிகாரம் தவறாக கையாளப்படுவதால் புன்னகையை தொலைத்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை பேசுகிறது.
அம்மாவோ அல்லது அப்பாவோ இல்லாத விளிம்புநிலை சிறுவர்களின் வாழ்வியலை பேசுவதில் ராம் தங்கம் மிகுந்த கவனம் செலுத்துகிறார். “பஞ்சுமிட்டாயும் பால்ராஜ் அண்ணனும்” கதையில் வரும் ஜீவா அம்மாவை இழந்தவன். “அந்நியம்” சிறுகதையில் வரும் செந்தில் அப்பாவை இழந்தவன். “பனங்காட்டு இசக்கி” சிறுகதையில் வரும் சங்கர் அம்மா அப்பா இருவரையும் இழந்தவன். “வாசம்” சிறுகதையில் வரும் ரமேஷ் விபத்தொன்றில் அப்பாவை இழந்தவன், தற்கொலையால் அம்மாவை இழந்தவன். அம்மாவோ அப்பாவோ அல்லது இருவருமோ உயிரிழந்த நிலையில், குறிப்பாக அவர்கள் படிக்காதவர்கள் என்ற சூழலில் அவ்வீட்டு சிறுவர்களின் வாழ்வு எப்படியெல்லாம் சிக்கலுக்குள்ளாகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்கின்றன இக்கதைகள்.
“பால்ராஜ்” கதையில், 12 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்ற பால்ராஜ் அண்ணன், தன்னிடம் பஞ்சுமிட்டாய் இழுக்க வர ஆர்வப்படும் சிறுவர்களில் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் அதாவது 14 வயதிற்கு மேற்பட்டவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அன்பாக வேலைவாங்கி அவர்களின் உழைப்புக்கேற்றதை கூலியாக தருகிறார். “அடைக்கலப்புரம்” டீக்கடை சோமு தன் தெருவில் உள்ள தியேட்டர் A பட தியேட்டராக மாறியதும் அதில் தன் தெரு ஆண்கள் உள்ளே நுழைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரது கடையில் டீ வாங்கிய சிறுவன் ராஜா ஒருநாள் சட்டென்று அந்த தியேட்டருக்குள் ஓட பதறிப்போகிறார் டீக்கடை சோமு. பால்ராஜ் அண்ணனும் டீக்கடை சோமுவும் தன் பகுதியில் உள்ள அடுத்த தலைமுறை இளைஞர்கள் தடம் மாறிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
அதேபோல, “காத்திருப்பு” சிறுகதையில் வரும் சத்துணவு ஆயா குழந்தைகளை பொறுப்பாகவும் அன்பாகவும் கவனித்துக்கொள்வதும், “அடைக்கலபுரம்” சிறுகதையில் அனைத்து ஆசிரியர்களாலும் வகுப்பை விட்டு வெளியே துரத்தப்பட்ட சேட்டை சிறுவன் ராஜா வெளியே வந்ததும் அன்பான சத்துணவு அக்காக்களை தேடி வந்து இணைந்து அவர்களுடன் சிறுசிறு வேலைகள் செய்வதும், “சாதிவாக்கு” கதையில் சத்துணவு அம்மாவுக்குப் பிறந்த சித்தார்த் நேர்மையான இளைஞனாக வளர்ந்து நிற்பதும் எளிய மக்களின் அன்பு தான் இச்சமூகத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதற்கு சான்றாக அமைகின்றன.
“பால்ராஜ்” கதையில், அப்பாவின் தலையணையில் முகம் பதித்து அழும் சிறுவன் ஜீவா அதில் படிந்திருக்கும் அப்பாவின் வியர்வை வாசத்தை முகர்கிறான். “அந்நியம்” கதையில் அம்மா, ரேணு பாப்பாவை தவிர மூன்றாவதாக வீட்டிற்குள் ஒரு ஆள் உலாவுதன் வாசத்தை உணர்கிறான் செந்தில். “வாசம்” சிறுகதையில் அம்மா வாங்கித் தந்த கேக்கை போலவே இன்னொரு கேக்கை பார்த்ததும் அதில் அம்மாவின் வாசத்தை உணர்கிறான் ரமேஷ். மனிதர்களின் வாசத்தை உணரும் நுட்பமான தருணங்களும், கள்ளர் குளம், பரளியாறு, செம்மாங்குளம் போன்ற இயற்கை நீரூற்றுகளின் வரலாறு, அதனை சார்ந்திருக்கும் மனிதர்கள் மற்றும் சக ஜீவன்களின் வாழ்வியலை விளக்கும் தருணங்களும், குயில், மயில், பருந்து போன்றவற்றின் குரலை எழுப்பி தங்களுக்குள் சமிஞ்கைகளாக வைத்திருக்கும் புலியிறிங்கி ஊரை சார்ந்த காவலாளிகள் மற்றும் வெள்ளைப்புறாவை கொள்ளையடிக்கும் இடங்களில் நல்ல சகுனங்களாக பயன்படுத்தும் சேதுபதியூர் கொள்ளையர்கள், தேவாலய இசைக்கருவி தரும் இசையைவிட அக்கட்டிடத்தின் மேலே திரியும் புறாக்களின் சப்தத்தை தேனிசையாக உணரும் ரமேஷ் என்று நெஞ்சை வருடும் அழகியல் தருணங்களும், இச்சிறுகதைகளை மேலும் பலமாக்குகின்றன. பஞ்சுமிட்டாய் செய்முறையையும், சோற்றுக் கற்றாழை சோறு செய்முறையையும் விவரிக்கும் வரிகளை படிக்கும்போது நாக்கில் எச்சில் ஊறுகிறது.
“பால்ராஜ்” கதையில், பக்கத்து வீட்டு கல்லூரி வயது யுவதி பார்வதியை ஒருதலைக்காதலனின் அரிவாளில் இருந்து காக்கும்பொருட்டு குறுக்கே மறித்து நின்று ஆறுமாத கருவை சுமந்த நிலையிலும் கழுத்தில் வெட்டுப்பட்டு இறந்த ஜீவாவின் அம்மா ஜெயா, ஊர்க்காரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டு கருகி இறந்துபோன “புலிக்குத்தி” வானவி, கணவனின் இழப்பால் தடம்மாறி பயணித்து மகன் வீசிய குழவிக்கல்லால் அடிபட்டு மாய்ந்த “அந்நியம்” கோமதி, துரைசாமி நாடான் எனும் அதிகார வர்க்க வக்கிர புத்திக்கொண்டவனால் பனங்கருக்கு மட்டையால் குழந்தையின் கழுத்தையும் தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட பனையேறியின் மனைவி “பனங்காட்டு இசக்கி” உடையாள், மகனை பற்றி நினைக்காமல் திடீரென ஒருநாள் தூக்குப்போட்டு இறந்துபோன “வாசம்” ரமேஷின் அம்மா என்று உழைத்து உழைத்து ஏமார்ந்து தேய்ந்து மாய்ந்துபோன நம் அடக்குமுறை சமூகத்து பெண்களின் பிரதிநிதிகளாக இவர்கள் நம் மனதை கனமாக்குகிறார்கள்.
“பால்ராஜ்” சிறுகதையில் இரண்டு ரூபாய் நாணயத்தை தவறவிட்ட சிறுவனின் முகம் வாடிப்போக கூடாதென்று மாறாத குணம் கொண்ட பால்ராஜ் அண்ணன் நிலக்கடலைகளை அவனுக்கு வழங்குகிறார். ஆனால் “வாசம்” சிறுகதையில் ஐந்து ரூபாய் நாணயத்தை தவறவிட்ட சிறுவன் ரமேஷ்க்கு அந்த மாதிரியான மனிதர் அமையவில்லை. மாறாக, அரசுப்பேருந்தில் இருந்து இறக்கிவிடப்படுகிறான். அப்போது, கண்ணெதிரே முதியவர் யாசகம் கேட்பதை பார்த்து அவனும் பேருந்து நிறுத்தத்தில் உள்ளவர்களிடம் கையேந்துகிறான். அப்போது கூட்டத்தில் ஒருத்தர் அவனுக்கு சில்லரை வழங்குவது போல சட்டை பாக்கெட்டுக்குள் கைவிட்டு, சிகரெட் துண்டை வெளியே எடுக்க பெருத்த ஏமாற்றமடைகிறான் ரமேஷ். சிறுவர்களிடம் நன்றியை எதிர்பார்க்காத பால்ராஜ் அண்ணனை போலவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களின் நலனுக்காகவே ஒரு கட்சியில் தொண்டனாக இணைந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறான் “சாதிவாக்கு” சித்தார்த்.
ஆனால் அவனுடைய உழைப்பையும் நம்பிக்கையையும் வீணடிக்கிறது மக்கள் மனதில் விரவிக்கிடக்கும் சாதி நஞ்சு. இறுதியில் யாருக்காக ஓடிஓடி உழைத்தானோ அவரும் சாதிப்பற்றுடன் தான் இருக்கிறார் என்றதும் ஏமார்ந்து போய் இச்சமூகத்தை வெறுமையுடன் பார்க்கிறான் சித்தார்த். “காத்திருப்பு” சிறுகதையில், திருவிழாவில் காணாமல் போனவன் வளர்ந்து ஆளாகி திடீரென ஒருநாள் இளைஞனாக அம்மா அப்பாவை தேடி வர அவனது முகத்தை முற்றிலும் மறந்து போயிருக்கிறார்கள் பெற்றோர்கள். அவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் மீண்டும் அக்குடும்பத்திடமிடருந்து விடைபெற்று வழியில் கண்ட ஆழ்வார் சாமியாரை பார்த்து மெலிதாக புன்னகைத்துவிட்டு செல்கிறான். அந்தப் புன்னகையில் எவ்வளவு ஏக்கமும் ஏமாற்றமும் மறைந்திருக்கிறது என்பதை வாசகராக உணரும்போது மனதிற்குள் இனம்புரியாத பரிதவிப்பு உண்டாகிறது. நேர்மையான சிறுவன் செந்தில் பற்றி செய்தித்தாளின் முதல்பக்கத்தில் ஒரு செய்தியும் இரண்டாம் பக்கத்தில் ஒரு செய்தியும் வருகிறது. அழகம்பெருமாளுடன் தனிமையை விரும்பிய விலாசம், நாராயண பெருமாள் தன்னை காமத்தோட அணுகியபோது வீட்டு ஆண்களை அடக்கி வைக்குமாறு ஊர்க்காரபெண்களை எச்சரிக்கும் விலாசம், அந்த வார்த்தைகளை தன் வாழ்க்கையில் பின்பற்றியிருந்தால் செந்திலின் வாழ்க்கை தடம் மாறியிருக்காது. செந்தில் பற்றி இரண்டுவித செய்திகளும் உலாவும் நேரத்தில் இப்போது 7ம் வகுப்பு படிக்கும் அவனுடைய தங்கை “ரேணுகா” எவ்வளவு ஏமாற்றமடைந்திருப்பாள் அவளுடைய வாழ்க்கை என்னவாகும் என்பது நம் மனதில் அழுத்தமான கேள்விக்குறியாக பதிகிறது. ஏக்கமும் ஏமாற்றமும் நிறைந்த இளைய சமுதாயம் கேட்பது நம்முடைய பரிதாபத்தை அல்ல, அவர்களுடைய வாழ்க்கையை என்று எழுத்தாளர் உமாசக்தி புத்தகத்தின் அணிந்துரையில் எழுதியிருந்தார். முற்றிலும் உண்மை. சாதாரண வாழ்க்கைக்காக ஏங்கித் தவிக்கும் எண்ணற்ற இளைஞர்களின் முகங்களாக தான் மேற்கண்ட இளைஞர்களும் சிறுவர்களும் நமக்குள் பதிகிறார்கள்.
“கம்யூனிஸ்ட்” சிறுகதையில் எளிய மக்களுக்கான ஒரு இயக்கத்தை வலுப்படுத்துவதில் பெரும்பங்காற்றி பலமுறை மரணவாயிலை எட்டிப்பார்த்து வந்த மூத்தவர்களின் கதையை கேட்டு அக்கதையில் சிறுவன் சிலிர்ப்பதுபோல நமக்குள்ளும் சில கணங்கள் அதிர்வுகள் உண்டாகிறது. கம்யூனிஸ்ட் தாத்தாவிடம் கதை கேட்டு முடித்த சிறுவன் தாத்தாவின் கால்களில் உள்ள காயத்தழும்புகளை தொட்டுப் பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது.
“அடைக்கலபுரம் இயேசு” சிறுகதை குறிப்பிட்ட ஒருபகுதியினரை குற்றவாளிகள் என முத்திரை குத்தப்படுவதையும் அதே சமயம் அப்பகுதியில் உள்ள சில கண்ணியமான விஷயங்களையும் அந்நில மக்களை கோமாளியாக்கும் சாடிஸ்ட் மனிதர்களின் உளவியலையும் ஆழமாக விவரிக்கும் கதை. குறிப்பாக குறும்பு செய்யும் சிறுவனை திருத்தும் பொருட்டு செயல்படாமல் மாறாக அடைக்கலபுரம் மனிதர்களில் சிலர் தூக்குத்தண்டனை கைதிகளாகவும் ஆயுள்தண்டனை கைதிகளாகவும் சிறையில் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு சிறுவன் ராஜாவை பார்த்து “அது எந்த ஊர்லருந்து வருது? பின்ன அது இப்புடித்தான் பேசும்.இதெல்லாம் எங்க படிச்சி முன்னேறப் போவுது? எப்படியும் ஜெயிலுக்குத் தான் போகும்” என்று முத்திரை குத்துகிறார் ஆசிரியர் மல்லிகா. வகுப்பிற்குள் நுழையும்போதே எந்த தவறும் செய்யாத போதிலும் ராஜாவை அழைத்து வெளியே நிறுத்திவிட்டு அதன் பிறகுதான் வகுப்பிற்குள் நுழைகிறார் ஓவிய ஆசிரியர் ஞானதீபம். தன்னை காட்டுமிராண்டித்தனமாக அடித்து வெளுப்பதில் உற்சாகமடையும் சிவநேசன், நாகராஜன் ஆகிய இரண்டு மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களையும் தனது தெருவில் உள்ள A பட தியேட்டரில் பார்த்ததும் “முதல்முறையாக” அந்த தியேட்டருக்குள் கால்பதித்து அந்த இரண்டு ஆசிரியர்களையும் பார்த்து “வணக்கம் சார்… வணக்கம் சார்…” என வரவேற்கிறான் சிறுவன் ராஜா. இவ்வாறு ஆசிரியர்கள் மீதான தவறுகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில் மரகதம் டீச்சர் நடத்தும் வரலாறு பாடத்தில் தேர்ந்தவனாக ராஜா இருக்கிறான் என்பதை பதிவுசெய்து மரகதம் மாதிரியான நல்ல டீச்சர்கள் ஆங்காங்கே இருக்கிறார்கள், அவர்களின் அன்பு எதோ ஒரு சூழலில் எப்படிப்பட்ட சேட்டைக்கார சிறுவர்களையும் நல்வழிப்படுத்தும் திருப்புமுனையாக அமையும் என்பதை அழுத்தமாக உணர்த்துகிறார் ராம் தங்கம். “வாசம்” சிறுகதையில் வரும் சுசீலா அக்காவும் மரகதம் டீச்சர் மாதிரி நம் மனதில் ஆழமாகப் பதிகிறார்.
இயற்கை வளங்களால் நிறைந்த செல்வ செழிப்பான ஊர், வறண்ட நிலத்தில் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் ஊர், இந்த இரண்டு பகுதி மக்களுக்கும் மையமாக ஒரு இளம்பெண்ணை நிறுத்தி அவர் மூலம் இருதரப்பு நியாயங்களையும் பேசிய “புலிக்குத்தி” சிறுகதையை உலகத்தரமான சிறுகதை என்று தாராளமாக பாராட்டலாம். சைக்கிளில் புளி வியாபாரம் செய்பவரின் மகன் ஓய்வு நேரங்களில் பழைய பேப்பரை படிப்பது போன்றும் வகுப்பில் சிறந்த மாணவனாக விளங்குவது போன்றும், மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருப்பவரின் மகன் வீட்டிற்கு வீடு பேப்பரும் பால்பாக்கெட்டும் போட்டு நன்முகமாக மாறியிருப்பது போன்றும் சாதிநஞ்சில்லாத ஒரு சமுதாயத்திற்காக ஏங்கித் தவிப்பது போன்றும் அவர்களை நல்லவர்களாக, திறமைசாலிகளாக அடையாளப்படுத்தும் வரிகள், இச்சமூகத்தின் மீதான நம் அக்கறையை மேலும் வலுப்படுத்துகிறது.