சூரியன் உதிக்கும் நிலத்தில்
எங்கெல்லாம் சென்றேன், என்னவெல்லாம் சாப்பிட்டேன், எந்தப் பாதையில் போனேன், எங்கே தங்கினேன், எதையெல்லாம் அனுபவித்தேன், என்னென்ன நடந்தது - இவற்றை விரிவாகச் சொல்வதாகத்தான் பயண அனுபவ நூல்கள் பொதுவாக அமைந்திருக்கின்றன. சிலர் மட்டுமே தங்களது பயண அனுபவங்களின் ஊடாக தாங்கள் சென்ற, கண்ட பகுதிகளின் கலாசாரத்தையும் வரலாற்றையும் சேர்த்துப் பதிவு செய்கிறார்கள்.
ராம் தங்கம் அதற்கும் ஒருபடி மேலே சென்றிருக்கிறார். கல்கத்தா மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில் தனது பயண அனுபவங்களோடு, தான் சென்ற, கண்ட இடங்களின் அழகை, கலாசாரப் பின்னணியை, வரலாற்றை சுவாரசியமான மொழியில் பேசுகிறார். ஒரு வீதி அங்கே இருக்கிறதென்றால், அதனுள் புதைந்திருக்கும் அந்தப் பகுதி மக்களே மறந்துபோன சரித்திர உண்மைகளைக் காட்சிப்படுத்துகிறார். எப்போதோ வாழ்ந்து மறைந்துபோன வரலாற்றின் மாந்தர்களை எழுத்தில் உயிர்ப்பிக்கிறார். மக்களின் பண்பாட்டைப் பேசுவதோடு மட்டுமன்றி, அவர்களது கலாசாரத்தின் பின்னணியில் பிணைந்திருக்கும் அரசியலையும் தொட்டுச் செல்கிறார். உடன் பயணம் செய்யும் உணர்வை அவரது உறைபனிக் குளிர் எழுத்து சாத்தியமாக்கியிருக்கிறது.
பயண நூல்களில் இந்தப் படைப்பு, நிச்சயம் தனித்துவமான வாசிப்பனுவத்தைத் தரக்கூடியது.