வணக்கம் தோழர்,
ஒரு உச்சி பொழுதில் மனம் நிலையற்ற தன்மையில் அலைந்து கொண்டிருந்த தருணத்தில் வீட்டில் இருந்து கிளம்பி எங்கு செல்வது என தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தேன். சினிமாவிற்கு செல்லலாம் என்று யோசனை ஒருபுறம் இருந்தாலும் மதிய காட்சிக்கு நிறைய நேரம் இருந்தது மேலும் நிலைகொள்ளாமையை அதிகரித்தது. உள்ளம் எரிச்சல் அடைவதை ஒரு பக்கம் உணரவும் முடிந்தது.
சரி சற்று நிதானிக்கலாம், மனத்தை முதலில் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று என்னை நானே உந்தி என்ன செய்யலாம் என்று யோசிக்க புத்தகங்களின் நினைவு வந்தது. வாகனத்தை நேராக புத்தகக் கடைக்கு செலுத்தினேன். கையில் மிகக் குறைந்த பணம் தான் இருந்தது. ஒரு வழியாக இரண்டு புத்தகங்களை (அவமானம் மற்றும் கருப்பர் நகரம்) வாங்கி விட்டு பணம் செலுத்த காசாளரின் மேஜையை அனுகியபோது அங்கிருந்த தோழர் திருக்கார்த்தியல் வாசித்து பாருங்கள் என்று பரிந்துரை செய்ய இருந்த மீத பணத்தில் உங்கள் புத்தகத்தை வாங்கினேன்.
ஆனால் சில வாரங்களுக்கு பின்னர் தான் வாசிக்க எடுத்தேன். முதல் கதை வாசிக்க ஒரு மெல்லிய தாக்கம் என்னுள் கடப்பதை கவனித்தேன். அது மெல்ல ஊடுருவி ஊழிற் பெருவலியை அடைந்த போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை முழுவதுமாக உணர்ந்தேன்.
பதினோரு கதைகளும் மிகவும் அழுத்தமானதாக இருந்தது. பானி, உடற்றும் பசி மற்றும் கடந்து போகும் கதைகளை வாசித்த போது கடந்து விட முடியும் என்ற நம்பிக்கை எழவில்லை, மாறாக எளிமையான மனிதனின் வலியை சுமந்து சென்று திரியும் ஏராளமான மனிதர்களை நினைவு கூர்கிறேன். மிகச் சாதாரணமான மொழி நடையில் பெரும்வலியை எதார்த்தமாக மனதில் கடத்தி சென்றுள்ளீர்கள்.
நன்றி கலந்த பேரன்புடன்
இரா.மகேஷ்
தருமபுரி