‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை – இர. மௌலிதரன்.


  ராம் தங்கம் அவர்களுக்கோ, இந்த சிறுகதை தொகுப்பிற்கோ எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை இன்றைய சூழ்நிலையில் தேவைப்படாது என்று தான் எண்ணுகிறேன். ஏனெனில், இந்த வருடம் பெரிதும் பேசப்பட்ட, வாசிக்கப் பட்ட ஒரு புத்தகம் இது. அந்த வகையில் எனக்கும் ராம் தங்கம்- இன் எழுத்து புதிதானது தான். எனக்குள் பல விதமான கலவையான எண்ண ஓட்டங்களை ஓட வைத்துள்ளார் அவர்.

 ஒரு சிறுகதை தொகுப்பில் எத்தனை கதைகள் இருந்தாலும், அந்த புத்தகத்தையே தூக்கி சுமந்து, அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது அந்த தொகுப்பில் உள்ள ஒரு சில கதைகளே. அந்த கதைகளுக்கு பக்கங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை, அந்த கதைகளின் உண்மையும், ஆழமும், உணர்வும் தான் அதன் தனிச்சிறப்பை நிலைநாட்டுகிறது. அந்த வகையில் இந்த தொகுப்பில் மொத்தம் உள்ள 11 கதைகளில் 5-6 கதைகளை குறிப்பிட்டு கூறலாம்.

  இந்த தொகுப்பு முழுக்க ஒரே நிலத்தையும்( குமரி மாவட்டம் ) ஏறத்தாழ ஒரே வகையான களமும் ( பள்ளி வயது சிறார்களின் வாழ்க்கை )கொண்டவையே. குறிப்பாக சிறுவர்களின் உலகத்திற்குள் பயணிப்பது சற்று கடினமானது, ஒரு சில எழுத்தாளர்களால் மட்டுமே அது சாத்தியப்படும், அதிலும் வறுமையில் வாடும் சிறுவர்கள் உலகத்திற்குள் பயணித்த எழுத்தாளர்கள் வெகு சிலரே. அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்.அந்த வரிசையில் ராம் தங்கம் தனக்கான இடத்தை வெகு விரைவில் பிடித்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

 இந்த புத்தகம் முழுக்க பசியும், ஏக்கமும், இயலாமையும் மீண்டும் மீண்டும் பிள்ளைகளை துரத்திக்கொண்டே வருகின்றன. பசியின் வாடை புத்தகம் முழுக்க வீசிக்கொண்டே இருக்கிறது. எந்த தவறும் இழைத்திடாத அந்த பிஞ்சு நெஞ்சங்கள் வறுமை தீயில் வாடி வதங்குவதை எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் ஒரு மனோதிடம் நிச்சயம் வேண்டும். புத்தகம் முழுக்க ஒரு உயிர் இன்னொரு உயிரை  தன் சுயநலத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக காவு வாங்கிக்கொண்டே இருக்கிறது, அதனை கண்டும் காணாதது போல இந்த உலகமும், மக்களும், சமூகமும் சகஜமாக இயங்கிக்கொண்டே இருக்கின்றன. இதில் என்னையும் உள்ளடக்கி தான் கூறுகிறேன். என்னை பொறுத்தவரை சிறுவர்கள் பணிசெய்யும் ஒவ்வொரு இடமும் ஒரு பலிபீடத்திற்கு சமம். அங்கு பலியிடப்படுவது சிறுவர்களோ அவர்களின் வாழ்க்கையோ அல்ல, மனித சமூகத்தின்  மேல் உள்ள நம்பிக்கை தான்.

 ராம் தங்கம் அவர்களின் எழுத்தில் பல ஆளுமைகளின் தாக்கம் ஆங்காங்கே தென்படுகிறது. குறிப்பாக ” ஊழிற் பெருவலி ” கதையில் என்னால் ஜி நாகராஜனை பார்க்க முடிகிறது, ” பெரிய நாடார் வீடு ” கதையில் ஜெயமோகனை பார்க்க முடிகிறது,” இப்படி பல உதாரணங்கள் கூறலாம். ராம் தங்கம் தன் கதைகளை எப்பொழுதும் ஒரு பயணத்துடனே தொடங்குகிறார், குமரி நிலத்தை தன் வர்ணனையால் எழுதி தீர்த்திருக்கிறார், ஒரு சிறுவனின் வாழ்க்கையை இன்னொரு சிறுவனின் பார்வையிலேயே கூற முற்படுகிறார், எளிமையான வரிகளும், சொற்களும் உள்ளது போல தெரிந்தாலும் அதன் பொருளின் மூலம் தன் எழுத்தின் எடையை கூட்டி விடுகிறார்.” ஊழிற் பெருவலி” கதையில் அந்த பெண்ணின் வலியை இதை விட எப்படி கணமாக கூறமுடியும் என்று தெரியவில்லை ” என் உயிர் பிரியும் போதுதான் வலியும் பிரியும் ” “உடற்றும் பசி ” கதையில் கார்த்திக் ஓடியது பசியை எண்ணி அல்ல இந்த சாதிய, சமூக கோட்பாடுகளை எண்ணியே, அவனின் ஓட்டம் இன்று வரை நிற்காமல் பல கார்த்திக் – களின் ஓட்டமாக மாறி ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. ” கடந்து போகும் ” என்று தலைப்பை வைத்துவிட்டு அந்த வினோத்தின் வாழ்க்கையையும், வலியையும் நம்மால் கடக்க முடியாத ஒரு கணத்த தருணத்தை ஆசிரியர் கொடுத்து விட்டார். வினோத் போன்ற சிறுவர்களை காப்பாற்ற முடியாத இந்த உலகிற்கு எதற்கு இத்தனை மதங்களும், கோவில்களும் என்று எனக்கு விளங்க வில்லை. இப்படி மனிதனை மனிதனே ஏமாற்றி வேட்டையாடி புசித்து வாழ்வதற்கு, ஆதி மனிதனாகவே இருந்து அழிந்திருக்கலாம். என்ன செய்வது இதே உலகத்தில் ராம் தங்கம் படைத்தது போன்ற காணி வாத்தியார் போன்ற சில நல்ல உள்ளங்களும் வாழத்தான் செய்கின்றன.

About the author

ramthangam

Add comment

By ramthangam