திருக்கார்த்தியல் வாசிப்பனுபவம் – சிவமணி

நாரோயில் என்று நண்பர்கள் பேசும் போது சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். இது போன்று வட்டார வழக்குகளை தாங்கி வந்திருக்கும் ராம் தங்கத்தின் வைரம் தான் இந்த திருக்கார்த்தியல். பெரும்பாலான கதைகளில் அம்மா-மகன், தாத்தா-பேரன், பாட்டி-பேரன், அனாதை சிறுவன், மனநிலை பாதிக்கப்பட்டவர், பசி, ஏக்கம் என்று எல்லாக் கதைகளிலும் ஏதோ ஒரு உறவை இழந்த தவிப்பும், வெறுமையும், ஏக்கமும் என்று பல ஒற்றுமைகளை கொண்டுள்ளது. இதில் 11 சிறுகதைகள் உள்ளன. 

திருக்கார்த்தியல் கதையில் செந்தமிழ், மீன்குழம்பைச் சாப்பிடும் அழகும், முதல் முறையாக ஆட்டுக்கறி சாப்பிட ஓடுவதும், சாப்பிட்டு முடித்து விட்டு சாப்பிட்ட கையை மோந்து பார்த்து கொண்டே வருவதும், திருக்கார்த்திகை அன்று ஒரு கொழுக்கட்டை கிடைக்காமல், ஒவ்வொரு வாசலை கடக்கும் பொழுதும் யாராவது அழைத்து ஒரு கொழுக்கட்டை தர மாட்டாங்களா என்று பிச்சை எடுக்காத குறையாக நிற்பதும் வலியின் உச்சம். இந்த கதையை படித்துவிட்டு நிறைய கொழுக்கட்டைகளை தர வேண்டும் என்று செந்தமிழை தேடுகிறேன்.

டாக்டர் அக்கா கதையில் ஏழாவது படிக்கும் சிறுவனுக்கும் டாக்டர் அக்காவுக்கும் இடையில் பூத்த பேரன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வு புதையல். ஆசிரியர் மாயாஜாலம் செய்திருக்கிறார் இந்த கதையில். இந்த சிறுவனின் கதையை டாக்டர் அவனது பாட்டியிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் பொழுது டாக்டர் அக்காவுக்கு ஏற்பட்ட அதே அதிர்ச்சி எனக்கும் ஏற்பட்டது. அந்த மனநிலை பாதிக்கப்பட்ட அந்த தாயை இந்த கதையில் வரும் சிறுவனைப் போலவே நானும் தேடுகிறேன். 

ஊழிற் பெருவலி இந்த கதையில் மனநிலை பாதிக்கப்பட்டது போல நடிக்கும் பெண்ணின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இந்த சமூகத்திற்கு சவுக்கடி கொடுப்பது போல இருந்தது. அவள் உடலால், மனதால் பாதிக்கப்பட்டு இன்னும் அந்த உயிர் வலியோடு ஏன் வாழ்கிறது? என்ற எண்ணம் வரும்பொழுது அந்த வலிக்கு அமைதியை தந்திருக்கிறது இந்த கதை. அந்த சூழலை கண் முன்னே நிறுத்தி, வாழ்வில் உணர்ச்சிவச பட்டால் எப்படி எல்லாம் வாழ்க்கை திசை மாறும் என்பதற்கு இந்த கதை ஆகச்சிறந்த சான்று. 

பானி என்ற கதையில் வாய் பேசிடாத பைத்தியக்கார பாணிக்கும், அந்த சிறுவனுக்கும் இருந்திடும் நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் கொரோனா கிருமி போல அந்தப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் பானியை பிடித்து போக, பேரன்பு ஆற்றலை பரவி நிற்கிறது இந்த கதை. பானி அந்த சிறுவனுக்கு பிடித்ததை செய்து தருவதும், பானிக்கு சாப்பாடு தந்து அந்த சிறுவன் மகிழ்வதும், ஒருவேளை பானியை காணாவிட்டால் கூட அந்த சிறுவன் சாப்பிடாமல் இருப்பதும் பேரன்பின் உச்சம். இந்த கதை வாசித்து முடித்ததும் நான் என் கண்கள் சன்னலின் வழியாக பானியை  தேட ஆரம்பித்தது. 

ஒவ்வொரு கதையிலும் அன்பின் வேரில் வெந்நீரை ஊற்றிடும் சூழல்களும், ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு உழைப்பை உறிஞ்சிடும் ஆல மரங்களும் நிறைந்து கிடந்தன. இந்த பூமியில் இது போன்று வாழ்பவர்களின் கண்ணீரும், வேதனையும், பசி என்று வரும் போது,  அவர்கள் எதையாவது செய்து அடுத்த வேளை உண்ண வேண்டிய கட்டாயத்தில் வாழ்வது முட்கள் மீது நடப்பது போன்ற உணர்வைத் தந்தது.

ஆசிரியர் ராம் தங்கம் உணர்வுகளை கொட்டி தீர்த்து இருக்கிறார். அவருடைய அடுத்த படைப்புகளையும் படிக்க வேண்டும் என்று ஆவலைத் தருகிறது. நாம் வாழும் வாழ்க்கை உன்னதமான வாழ்க்கை என்பதை இந்த புத்தகத்தைப் படித்த ஒவ்வொருவரும் உணர முடியும். அடுத்த தலைமுறைக்கும் இதில் உள்ள கதைகளை கதையாகச் சொல்லி புரிய வைத்தால், இளம் தலைமுறை இன்னும் செழிப்பாக வளரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆசிரியர் ராம் தங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

About the author

ramthangam

Add comment

By ramthangam