2024 ஆம் ஆண்டின் முதல் புத்தகமாக நான் வாசித்தது எழுத்தாளர் ராம் தங்கம் அவர்கள் எழுதிய “வாரணம்” என்ற நாவல். நீண்ட காலத்துக்குப் பின் ஒரு 300 பக்கங்கள் உடைய நாவலை ஒரே நாளில் படித்து முடித்தேன்.
“புத்தகங்கள் எப்பொழுதுமே நம்மை ஒரு காலப்பயணியாக மாற்றுகிறது” என்று நான் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறேன். அப்படி இருக்க, இந்த “வாரணம்” என்ற படைப்பு தற்காலத்தில் நான் பார்க்காத மலைப் பிரதேசங்களை மனதுள் பசுமரத்து ஆணி போல் பதித்து விட்டது.
இதைச் சென்னை புத்தகக் கண்காட்சியில் அண்ணன் ராம் தங்கம் அவர்களை நேரில் சந்தித்தபோது அவரிடமும் இதையே கூறினேன். இந்த புத்தகம் வாசிக்கும் பொழுது ஏதோ ஒரு மாயம் நிறைந்த தாள்களைத் திருப்பிக் கொண்டிருக்கிறோமோ என்று தான் என் மனதில் தோன்றியது. இது ஏதோ சமூக நாவல் என்று கூறிவிட்டு நகர்ந்து விட முடியாது.
இது ஒரு முக்கியமான படைப்பு! திருவிதாங்கூர் சமஸ்தானத்தைக் கண்ணில் காண முடியும். நாகர்கோவில் கன்னியாகுமரி சுற்றியுள்ள மலைகளை ஏறி இறங்க முடியும். யானைகளை அருகில் முகர முடியும். இன்னும் எத்தனையோ விந்தையை இந்த வாரணம் என்ற நாவலின் தாள்கள் தாழிட்டுக் கொண்டிருக்கிறது. அந்த தாழ்களை உங்கள் விரல் எனும் திறவுகோல் கொண்டு திறந்து வாசித்துப் பாருங்கள்.
இந்த வாரணத்துடன் பயணித்து நான் அறிந்த அனுபவத்தை இன்னும் விரிவாக ஒரு காணொளியில் பார்க்கலாம். இப்படி ஒரு படைப்பைத் தந்த அண்ணன் ராம் தங்கம் அவர்களுக்கு நன்றி.