யதார்த்த வாழ்வில் இருந்து கதைகளைச் சொல்லும்போது அவை உயிர்த் துடிப்போடு இருக்கின்றன.
{படைப்பு இலக்கியக் குழுமத்தில் இருந்து வெளிவரும் தகவு மின்னிதழில் ஜூலை 2023 ல் வெளியான நேர்காணல். நேர்காணல் செய்தவர் கவிஞர் வீரசோழன். க. சோ. திருமாவளவன்.}
உங்களது பூர்வீகம் பற்றி சொல்லுங்கள்?
குமரிக்கண்டம் ஆழிப் பேரலையில் தன் நிலப்பரப்பை கடலிடம் இழந்த பிறகு மிஞ்சிய சிறிய பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் தான் என் பூர்வீகம். நாகர்கோவில், கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் என பல பகுதிகளில் என்னுடைய பள்ளிப் பருவமும், பால்ய காலமும், தற்போதைய வாழ்க்கையும் கழிகிறது. எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்தது, வாழக் கற்றுக் கொடுத்தது, சமூகத்தைப் பார்க்க கற்றுக் கொடுத்தது எல்லாமே என்னுடைய மண் தான். நான் கன்னியாகுமரிக்காரன் என்பதில் என்னுடைய பூர்வீகமும் எனது அடையாளமும் அடங்கி இருக்கிறது.
உங்களின் நூல் வாசிப்பு எப்போதும் அபாரமானது. எந்த வயதிலிருந்து உங்களுக்கு வாசிப்பு பழக்கம் ஏற்பட்டது? உங்களுக்கு வாசிப்பு பழக்கம் ஏற்பட காரணமாக இருந்தது எது?
வாசிப்பு பழக்கம் சின்ன வயதில் இருந்தே தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் கல்வியறிவில் முன்னேறிய மாவட்டமாக மாறுவதற்கு காரணம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரிநிலம் இருந்தபோதே பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு விட்டது. கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் இங்கு அதிகமாக இருந்தது. அது மூலமாக இங்கே இருக்கக்கூடிய மக்களில் அதிகமான பேருக்கு கல்வியறிவு கிடைத்தது. அப்படி மூன்று தலைமுறைக்கும் முன்பே ஓரளவு எல்லோருக்கும் படிப்பறிவு வந்திருக்கிறது என நினைக்கிறேன். அப்படி தலைமுறை தலைமுறையாக எனக்கு வாசிப்பு பழக்கம் உருவானது. சுற்றி இருந்த எல்லாருக்குமே படிக்கத் தெரிந்திருந்தது. அதனால் நாளிதழ், வார இதழ்கள் வாங்குவார்கள். அதிலிருந்து தான் என்னுடைய வாசிப்புப் பழக்கம் தொடங்கியது என்று சொல்லலாம். மற்றபடி நான் நாவல் சிறுகதை என புத்தகங்கள் வாசித்தது எல்லாம் பிற்காலத்தில் தான்.
நாஞ்சில் நாட்டு வட்டார மொழியில் நீங்கள் கதை சொல்லும் பாங்கே தனித்துவமாக உள்ளது. உங்கள் எழுத்து ஈரத்தை கசிய வைத்துவிடுகிறது. இதற்கு பின்புலமாக இருப்பது எது?
என்னுடைய நிலமும், அதில் வாழும் யதார்த்த மனிதர்களுடைய வாழ்க்கையும் தான் அதற்கு காரணம். யாரையும் கசிந்து உருகி அழ வைக்க வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என எந்த திட்டமிடலும் இல்லாமல் தான் என்னுடைய கதைகளை எழுதுகிறேன். என்னுடைய நிலம் தான் என்னுடைய களம். நிலம் சார்ந்த மனிதர்களுடைய வாழ்க்கையை எழுதுவது எனக்கு இலகுவாகவும் இருக்கிறது.
முதன் முதலாக நீங்கள் எழுதி அச்சிலேறிய படைப்பு எது? நம்மால் நம் கதை மூலம் இந்தச் சமூகத்திற்கு ஏதாவது சொல்ல முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்போது பிறந்தது ?
காந்திராமன் என்கிற புத்தகம்தான் முதலில் அச்சில் வந்தது. அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். வைக்கம், சுசீந்திரம் கோவில் நுழைவு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு போராடிய ஒரு தியாகி. தெற்கெல்லை போராட்டத்தின் முக்கியமான தளபதி. அவரைக்குறித்து அவருடைய வாழ்க்கை வரலாறை முழுமையாக பதிவு செய்திருப்பேனா என்றெல்லாம் தெரியவில்லை. எப்போதுமே ஒரு மனிதனுடைய வாழ்க்கையை முழுமையாக யாருமே பதிவு செய்ததில்லை. அது செய்யவும் முடியாது. அதுபோல நானும் ஓரளவு தியாகி காந்திகிராமனுடைய வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதுதான் என்னுடைய முதல் புத்தகம். இந்த சமூகத்துக்குக் கருத்து சொல்ல வேண்டும் என்று எல்லாம் எனக்கு எந்த திட்டமும் இல்லை. எழுத வேண்டும் என்கிற ஒரே எண்ணம் மட்டும் தான் இருக்கிறது.
பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கிய நீங்கள் முழு நேர எழுத்தாளராக மாறியதின் பின்னணி ஏதும் உள்ளதா?
அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. இன்னார்தான் காரணம் இவர்தான் காரணம் அப்படி எல்லாம் யாரையும் சொல்ல முடியாது. ஒரு பத்திரிகை நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த பிறகு பல நிறுவனங்களில் வேலைக்காகக் காத்திருந்தேன். பலர் வேலை தருவதாகச் சொல்லி ஏமாற்றினார்கள். அதற்குபின் பல வலிகளும் காயங்களும் இருக்கிறது. பல மனிதர்களுடைய நம்பிக்கை துரோகங்களும் இருக்கிறது. அவரவருக்கு அவரவர் நியாயங்கள். அதனால் பெரிதாக யார் மீதும் எந்த குற்றமும் சொல்லாமல் அது வாழ்க்கையினுடைய போக்கு என்று எடுத்துக் கொள்கிறேன். அந்நேரம் தான் முழுநேர எழுத்தாளர்களான முகில், பாரா, எஸ்ரா போன்றவர்களின் வாழ்க்கை எனக்கு ரோல்மாடலாக இருந்தது. நானும் எழுத்தையும் முழுநேரமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்கிற உத்வேகத்தைக் கொடுத்தது. நானும் முழுநேர எழுத்தாளராக மாறினேன். எழுத்தின் மூலம் வருமனம் ஈட்டக் கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல், வருமானத்தை வாங்கிக் கொடுத்ததும் எழுத்தாளர் முகில் தான்.
உங்கள் முதல் நூல் “காந்தி ராமன்” 2015ல் வெளியானது. இதுவரை 12 நூல்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு புத்தகமும் பெரும் வரலாற்றையும், செய்தியையும் தாங்கி வந்திருக்கிறது. இதற்காக உங்கள் பணியையும் மெனக்கெடலையும் எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறீர்கள்?
எனக்குள்ளே இருக்கும் தேடலும் ஆர்வமும் தான் புத்தகங்களை நிறைய வாசிக்க வைக்கிறது. நிறைய எழுத வைக்கிறது. நிறைய பயணம் செய்ய வைக்கிறது. இந்த மூன்றும் சேரும்போது அவை எல்லாமே படைப்புகளிலும் நிறைந்து நிற்கிறது. இப்படித்தான் நான் என்னை தகவமைத்துக் கொள்கிறேன்.
உங்களது “ஊர் சுற்றிப் பறவை” கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு, கலாச்சாரம், நிலப்பகுதி மற்றும் அந்தப் பகுதியில் வாழ்ந்த தியாகிகள், எழுத்தாளர்கள் பற்றிய அரிய ஆவணத் தொகுப்பு. அந்த நூல் உருவாக எவ்வளவு காலம் ஆனது? எதனால் அப்படியான வரலாற்றையும், அதை நூலாக்க வேண்டும் என்ற எண்ணமும் விதையாக முளைத்தது?
அது கிட்டத்தட்ட 2011 ஆம் ஆண்டு உருவான விதை என்று சொல்லலாம். என்ன எழுத போகிறோம் என்று தெரியாமலேயே எழுதத் தொடங்கிய படைப்பு அது. பெரிய திட்டமிடல் எதுவும் இல்லை. யாராவது கேட்டால் கூட அது நாவலா, வரலாற்றுத் தொகுப்பா என்று கூட சரியாக விளக்க முடியாத சூழலில் தான் இருந்தேன். அது ஒரு வாரப் பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அதற்காக எழுத வேண்டும் என எழுதத் தொடங்கியது. அதன் பிறகு நான்காண்டுகளுக்குப் பிறகு தான் அது புத்தகமாக உருவம் கொண்டது.
பெரும்பாலும் எழுத்தாளர்களோ அல்லது சிறுகதை எழுத்தாளர்களோ அல்லது கட்டுரையாளர்களோ அவர்களின் வட்டாரம் சார்ந்த நாட்டார் வழக்காறு சம்பந்தமாக பதிவு செய்வதில்லை. அப்படியே பதிவு செய்தாலும் கதைகளோடு கதையாய் இருக்கும். ஆனால் “மீனவ வீரனுக்கு ஒரு கோயில்” என்ற புத்தகம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாட்டார் வழக்காறு தெய்வங்களை பற்றி ஆய்வு செய்து புத்தகமாக்கி இருக்கிறீர்கள். இதற்கான தேடலை எங்கிருந்து துவக்குகிறீர்கள்? இது எதனால் உருவானது?
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா பெருமாள் அவர்களோடு ஏற்பட்ட தொடர் பு தான் அதற்கு காரணம். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் தினந்தோறும் நாங்கள் சந்தித்து குறைந்த பட்சம் நான்கைந்து மணி நேரம் பேசிக்கொண்டு இருப்போம். அவரிடமிருந்துதான் வரலாற்றுப் பார்வை, ஆய்வுப் பார்வை, வரலாற்றுத் தேடல் எல்லாம் கற்றுக் கொண்டேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்ன ஒரு நாட்டார் வழக்காற்று பாடலில் இருந்து தான் அந்த புத்தகத்திற்கான களம் விரிவடைந்தது என்று சொல்லலாம். அந்த புத்தகம் உருவாகக் காரணம் அ.கா பெருமாள் சார்தான்.
உங்கள் முதல் சிறுகதை எப்போது வெளியானது. முதல் சிறுகதையின் பெயர் என்ன? முதல் சிறுகதைக்கு வந்த மறக்கமுடியாத பாராட்டு?
என்னுடைய முதல் சிறுகதை திருக்கார்த்தியல். 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆனந்த விகடன் இதழில் வெளியானது. முதல் சிறுகதைக்கு வந்த மறக்க முடியாத பாராட்டு என்றால் கதையை வாசித்துவிட்டுப் பேசிய அனைவரின் அன்பும் தான்.
‘திருக்கார்த்தியல்’ தொகுப்பில் உள்ள பதினோரு கதைகளில் ஒன்பது கதைகள் சிறுவர்களின் துயரை மையப்படுத்தியவை. வாழ்வின் துயரங்களால் துரதிஷ்டங்களால் அலைக்கழிக்கப்படும் சிறுவர்களின் வலிமிகுந்த உலகத்தை காட்சிபடுத்தியிருப்பீர்கள். எதனால் இப்படியான சிறுகதைகளை எழுதத் தோன்றியது?
நான் கற்பனையாக எதையும் எழுதி விடவில்லை. என்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், நான் பார்த்த மனிதர்களுடைய வாழ்க்கை, கேட்ட மனிதர்களுடைய கதைகள் எல்லாவற்றையும் சேர்த்து தான் எழுதியிருக்கிறேன். இன்னும் இதைவிட வலி மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்த சிறுவர்களின் கதையை வாய்ப்பு இருந்தால் பிற்காலங்களில் பதிவு செய்ய திட்டம் இருக்கிறது. உலகத்தில் முதல்போர் பசியோடுதான் நடக்கிறது. அதன்பிறகு தான் மற்றவை. அதனால் கதைகள் அப்படி அமைந்து விட்டது என்று சொல்லலாம்.
‘திருக்கார்த்தியல்’ செந்தமிழ், ‘டாக்டர் அக்கா’ சிவா, ‘வெளிச்சம்’ லிங்கம், ‘பானி’ சுரேஷ், ‘உடற்றும் பசி’ கார்த்திக், ‘கடந்துபோகும்’ வினோத் என முதல் சிறுகதைத் தொகுப்பிலே சிறுவர்களின் பாடுகளை சிறுவர் மொழியில் பேசுவதெல்லாம் அசாதாரணமான ஒன்று. இப்படியான உயிர்ப்பான கதை மாந்தர்களை எவ்வாறு எப்படி கண்டடைகிறீர்கள்?
இந்த எல்லா சிறுவர்களும் வேற்று கிரகங்களில் இல்லை. இந்த உலகத்தில் நம்முடன் தான் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களுக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர்கள். அவர்களின் வலி அப்படியே தான் இருக்கிறது. இதில் நான் கண்டடைந்த கற்பனைப் பெயர் கொண்ட நிஜமான சிறுவர்களின் கதைதான் இவை. யதார்த்த வாழ்விலிருந்து கதைகளைச் சொல்லும்போது அது உயிர்த் துடிப்போடு இருக்கிறது.
“திருக்கார்த்தியல்” எனும் உங்களின் சிறுகதைத் தொகுப்பு தமிழகத்தின் அனைத்து விருதுகளையும் வென்றுள்ளது. தற்போது இந்திய அரசின் உயரிய விருதான சாகித்ய அகாடமியின் “யுவபுரஸ்கார் விருது” இந்த வருடத்திற்காக பெற்றிருக்கிறீர்கள். இந்த தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்?
தமிழகத்தின் அனைத்து விருதுகள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. நம் படைப்புக் குழுமம் திருக்கார்த்தியல், ராஜவனம், புலிக்குத்தி என என் படைப்புகளை அங்கீகரித்து இலக்கிய விருதுகளை மூன்றுமுறை கொடுத்து கௌரவம் செய்தது. அதுபோல பல்வேறு இலக்கிய அமைப்புகள் என்னுடைய புத்தகங்களுக்கு விருது கொடுத்து பாராட்டி ஊக்குவித்து இருக்கிறது. புத்தகங்களுக்காக நான் வாங்கும் 13 வது விருது இந்த யுவபுரஸ்கார். திருக்கார்த்தியல் புத்தகத்திற்காக நான் வாங்கும் ஏழாவது விருது. இது தொடர்ந்து எழுதுவதற்கு உந்து சக்தியாக இருக்கும். விருது கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுள் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எப்போதும் போலதான் இயல்பு வாழ்க்கையில் இருக்கிறேன். விருது அறிவிக்கப்பட்ட பிறகு இன்னும் என்னவெல்லாம் எழுத வேண்டும் என்கிற சிந்தனைகள் தான் அதிகமாக ஓடுகிறது. விருதின் கனம் எப்போதும் தலைக்கு ஏறுவதில்லை. இனியும் அப்படித்தான்.
உங்களின் “ராஜவனம்” பெரிதும் எல்லோராலும் பாராட்டுப் பெற்ற ஒரு நாவல். மானுடத்தின் மீதும், இயற்கை மீதும், வனவிலங்குகள் மீதும், யானைகள் மீதும் தீராப் பற்றையும் ஏற்படுத்தியது. அதைப் பற்றிச் சொல்லுங்கள்?
வனம் எப்போதுமே பிடிக்கும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு காடு இருப்பது போல எனக்குள்ளும் ஒரு காடு இருக்கிறது. இயல்பிலேயே மானிடத்தின் மீதும் இயற்கை மீதும் தீராக் காதல் உண்டு, பற்று உண்டு. யானைகளை யாருக்குத் தான் பிடிக்காமல் இருக்கும். யானையை விட பெரிய உயிருள்ள ஜீவனை நான் இதுவரை பார்த்ததில்லை. அது ஒரு பேருயிர். இவை எல்லாமே சேர்ந்ததுதான் ராஜவனம். அதுவும் யதார்த்த மனிதர்களுடைய வாழ்க்கைக் களம்தான். முழுக்க முழுக்க காட்டில் அந்த கதை இருப்பது கூடுதலாக எல்லோருக்கும் பிடித்திருந்தது.
தற்போது ஏதேனும் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா?
எழுத்து தான் வாழ்க்கை என்று மாறிய பிறகு எழுதிக் கொண்டே தான் இருக்க வேண்டும். ராஜவனம் நாவலில் வரும் ராஜசேகர் என்கிற கதாபாத்திரத்தை மையப்படுத்தி இன்னொரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்ட நிலம் சார்ந்த 50 ஆண்டுகளுக்கு முன்பான இரு வாழ்க்கையைப் பற்றி மனிதர்களுடைய பழக்கவழக்கங்களைப் பற்றி ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது தவிர பயணக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தாங்கள் முதன் முதலில் வாசித்த புத்தகம் நினைவில் உள்ளதா? அந்த புத்தகம் பற்றி பகிரலாமே?
புத்தகம் என்று தெரிந்த பிறகு வாசித்தது எழுத்தாளர் ஏக்நாத் எழுதிய ஆடு மாடு மற்றும் மனிதர்கள். அது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மனிதர்களின் யதார்த்த வாழ்வை சொல்லிய புத்தகம். அவ்வளவு சுவாரசியமாக இருந்த எழுத்து நடை அது. பிறகு சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகத்தை நாகர்கோவிலில் நடந்த புத்தகக் கண்காட்சியில் தேடிப் போய் வாங்கினேன். அதன்பின் அ.கா பெருமாளின் தென்குமரி சரித்திரம்.
கலாரசிகனில் உங்கள் ” கடவுளின் தேசத்தில் “நூல் பற்றி கூறுகையில் எனக்கு கேரளாவில் எல்லா இடமும் தெரியும். ஆனால் எழுத்தாளர் ராம் தங்கத்தின் எழுத்தில் கேரளாவின் இடங்களைப் பற்றி படிக்கும்போது கேரளா போய் வந்த மன நிறைவைத் தருகிறது. அவருக்கு “யுவ புரஸ்கார் விருது” கிடைத்ததில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. அவரின் இன்னும் சில புத்தகங்கள் மேஜையில் வாசிப்பதற்கு உள்ளன என்று தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்கள் எழுதி மனம் திறந்து பாராட்டியது பற்றி உங்கள் கருத்து?
அவர் ஒரு மாமனிதர். தான் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றி கலாரசிகனில் வாரந்தோறும் குறிப்பிட்டு எழுதி பல எழுத்தாளர்களை, கவிஞர்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் ஆளுமை. நான் ஒரு முறை நாகர்கோவிலில் வைத்து அவரை சந்தித்து இருக்கிறேன். அது அவருக்கு நினைவில் இருக்குமா என்றெல்லாம் தெரியவில்லை. பழக ரொம்ப எளிமையான மனிதர். எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை பார்க்க வந்திருக்கும் போது அவரோடு பேசினேன். மறுநாள் எட்டயபுரம் பாரதி விழாவிற்கு என்னையும் வரும்படி அழைத்தார். நானும் போனேன். மலர்ந்த முகத்தோடு வரவேற்று அமர வைத்தார். யுவ புரஸ்கார் விருது பெற்றதற்கு வாழ்த்துகள் வந்துக் கொண்டிருக்கும் போது, ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் ‘யுவ புரஸ்கார் விருது கிடைத்ததில் எனக்கு வியப்பில்லை அவர் எழுத்து தகுதியானது’ என்று சான்றளித்தது என்னை அடுத்தக் கட்டத்திற்கு வாசகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. அவர் எழுதிய பதிவு இந்த காலத்திற்கு மிக முக்கியமானது. வாழ்வில் மறக்க முடியாதது. அவர் இன்னும் வருங்காலங்களிலும் பலரை அடையாளப்படுத்துவார். மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களே.
“யுவபுரஸ்கார் விருது” அறிவிக்கப்பட்டதும் உங்கள் வாசகர்களிடம் அல்லது எழுத்தாளர்களிடமிருந்து வந்த மறக்க முடியாத பாராட்டு பற்றி சொல்லுங்கள்?
என்னை மதித்து வாழ்த்திய அனைவருடைய வாழ்த்துகளும் எனக்கு முக்கியமான வாழ்த்துதான். மூணாரில் இருக்கும் டாக்டர் சுப்பிரமணியம், ஜேனட் ராணி குடும்பத்தினர் அங்கு ஒரு பாராட்டு விழாவை அவர்கள் வீட்டில் ஏற்பாடு செய்தார்கள். முதலில் நடந்த பாராட்டு விழா அதுதான். அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவர்கள். எல்லோரிடமும் ஒரே போலவே பழகுபவர்கள். எந்த வேற்றுமையும் அவர்கள் பார்ப்பது கிடையாது. அது ஒரு முக்கியமான பாராட்டு விழா. அதன் பிறகு கோத்தகிரியில் கேசலடா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜெயசீலன் சார், பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் ராதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடந்த பாராட்டு விழா மனதிற்கு நெருக்கமாகவும் மறக்க முடியாத நிகழ்வாகவும் இருந்தது என்று சொல்லலாம்.
புலிக்குத்தி சிறுகதைத் தொகுப்பில் ‘பனங்காட்டு இசக்கி’ எனும் சிறுகதையில் பனை பற்றிய நுட்பமான தகவல்கள் நிரம்பிக் கிடக்கும். “காத்திருப்பு” எனும் சிறுகதை காணாமல் போன மகன் ஊருக்குத் திரும்ப வரும்போது அடையாளம் காணப்படாமலேயே மறுபடியும் தொலைந்து போவதாய் முடிந்திருக்கும். இப்படியான கதைகள் உங்கள் அனுபவ முதிர்ச்சியையும், தேர்ந்த எழுத்தையும் காட்டுகிறது. இப்படியான கதைகள் எழுதுவதற்கு எவ்வாறு உங்களை தயார் செய்கிறீர்கள்?
நான் ஏற்கனவே சொன்னது போல என்னுடைய வாசிப்பும் தேடலும் பயணமும் தான் காரணம். பனை என்னுடைய நிலத்தின் ஆதிவேர். பனையைத் தவிர்த்து என்னுடைய நிலப்பரப்பை நான் அடையாளப்படுத்தி விட முடியாது. பனை காலம் காலமாக தொன்று தொட்டு மக்கள் வாழ்வியலிலும், வழிபாட்டிலும், பழக்க வழக்கங்களிலும் இன்று வரை நீடித்து வரும் முக்கியமான மரம். அது குறித்து தேடல்கள், செவி வழியாக கேட்ட கதைகள் ‘பனங்காட்டு இசக்கி’ கதை. அது உருவாகக் காரணம் உமா அம்மா அவர்கள். ஒருமுறை கதையின் மையக்கரு பற்றி கோவில் வழிபாட்டு முறையை பற்றி சொன்னார்கள். பின்னால் அதை ஒரு பெரிய கதையாக எழுதினேன். ‘காத்திருப்பு’ கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு புனைவு. அதற்குக் களமாக எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து எழுதினேன்.
12 புத்தகங்களும் வெவ்வேறு களத்தைப் பேசியவை. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு பரிணாமத்தை கொண்டவை. இதில் உங்களுக்கு மனநிறைவான புத்தகம் என்று தாங்கள் நினைப்பது? உங்கள் புத்தகங்களுக்கு கிடைத்த விருதில் மறக்க முடியாத விருது?
ஒருமுறை கவிஞர் சிற்பி அவர்களை நேர்காணல் செய்ய நேரிட்டது. அப்போது அவரிடம் நானும் இதே போன்றதொரு கேள்வியைக் கேட்டேன். அப்போது அவர் ‘நிறைவின்மையே எழுத்தின் அடிப்படை. எவ்வளவு எழுதினாலும் மனசு நிறையவில்லை. எனக்கு 87 வயது ஆகிறது இன்று வரைக்கும் எழுதிக் கொண்டே இருக்கிறேன். மொழிபெயர்ப்பு செய்து கொண்டிருக்கிறேன். அதைவிட அதிகமாக புத்தகங்களை வாசிக்கிறேன்’ என சொன்னார். எத்தனையோ ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும், அதிகமான புத்தகங்களை வெளியிட்டாலும், அதிகமாக விருதுகளை பெற்றிருந்தாலும் அது ஒருபோதும் நல்ல எழுத்தாளருக்கு மனநிறைவைத் தராது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களோடு பேசும் போதெல்லாம் தான் எழுதிக் கொண்டிருப்பதைப் பற்றி சொல்லுவார். எழுதியதில் மனநிறைவு கொண்டால் அப்படியே தேங்கி விடுவோம். அதைப்போல தான் எனக்கும் எழுத்தில் மனநிறைவு வரவில்லை. அதுவரவும் கூடாது. விருது என்பது நம்முடைய எழுத்துக்கு கிடைக்கும் அங்கீகாரம். அது இன்னும் அதிகமான வாசகர்களுக்கு நம்மை கொண்டுச் சேர்க்கும். எனக்கு கிடைத்த எல்லா விருதுகளுமே மறக்க முடியாததுதான் வாசக நண்பர்களின் அன்பைப் போல.
ஒரு புத்தகம் வெளியாவதற்கும் அடுத்த புத்தகம் தயாராவதற்கும் இடையில் உங்களை புத்தாக்கம் செய்வதற்கு பயணங்கள் ஏதாவது மேற்கொள்வீர்களா? அப்படியான பயணங்களில் மறக்க முடியாத பயணம் எது?
எனக்கு பயணம் செய்வது பிடிக்கும். நல்ல எழுத்தாளர்கள் பெரும் பயணிகளாக இருக்கிறார்கள் என்று எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லுவார். அதுபோல என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் உண்டு. பயணம் பலவித மாற்றங்களை நம்மில் உருவாக்கும். புதிய நிலப்பரப்பு, புதிய மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை முறைகள் என அனைத்தையும் கற்றுக்கொள்ள செய்யும். இலக்கியங்களைப் போல மனிதனை பயணங்கள் செழுமையாக்கும். எழுத்தைப்போல எனக்கு திகட்டாதது பயணம் தான். தீராத பயணம் அலுக்காத பயணமாக அமைந்தால் எப்போதும் சந்தோஷம். மூணார் டாக்டர் வீடு, கோட்டயம் மனோஜ் குரூர் வீடு, கொடுங்கல்லூர் கண்ணகி கோயில், போர்ட் கொச்சி என மறக்க முடியாதது நிறைய இருக்கிறது. ஒரு பயணம் போய்விட்டு வந்தால் எழுதவும் உற்சாகமாகி விடுகிறது.