புலிக்குத்தி என்ற பெயரே வரலாற்று சிறப்புமிக்கது முன்னர் காலத்தில் மக்கள் வசித்த இடங்களில் நடக்கும் வன விலங்குகளால் ஏற்படும் உயிர்பலிகளையும் , விவாசயத்திற்காக வளர்க்கப்பட்ட ஆடு, மாடுகளையும் , பாதுகாப்பதற்கு ஊரில் உள்ள பலம் நிறைந்த மனிதர்கள் ஊர் எல்லையில் காவல் காப்பார்கள் அவ்வாறு காவல் காக்கும் மனிதர்கள் புலிகளை கம்புகளில் குத்தி கொல்லுவார்கள் சில நேரம் அவர்களை புலிகள் கொல்லும் அப்படி இறந்து போனவர்களுக்கு நடு கல் ஊரின் எல்லையில் நடுவார்கள். இப்போது ஆங்காங்கே அகழ்வாராட்சியில் அப்படியான புலிக்குத்தி நடுகற்கள் நிறைய கிடைக்கப் படுகிறது. இதை மையப்படுத்தி ஒரு அற்புதமான சிறுகதை இந்த புலிக்குத்தி புத்தகத்தில் இருக்கிறது. அப்படி பேரிலே வரலாற்றைக் சுமக்கிறது இந்த புலிக்குத்தி .
எழுத்தாளர் ராம் தங்கம் அவர்களுடைய 11-வது படைப்பு புத்தகம் இது . ஒன்பது கதைகள் அடங்கியது.
பஞ்சு மிட்டாயும் பால்ராஜ் அண்ணாவும் தாயில்லாத பிள்ளையின் மன வலியையும், நவீனங்களின் ஆரம்பகாலத்தின் புறக்கணிப்பையும் பதின் காலத்தின் மனதில் படிந்த சித்தரிப்பின் உறவு பற்றி பேசுகிறது.
புலிக்குத்தி கதை, முதலில் சொன்ன தளத்தில் தான் இருக்கும். ஆனால் தங்கை ,அண்ணா உறவோடு அன்றைய ஊரின் நிலைகளையும் , மனிதர்களின் மேன்மைகளையும், வரலாற்று மீதும் ஓளி ஏற்றி காட்டுகிறது புலிக்குத்தி.
காத்திருப்பு, ஒரு மென்மையான படைப்பு .வாசிப்புப் பழக்கத்தை பரவலாக கொண்டு போகவும், எழுத்தாளர்களைக் கொண்டாடும் மனிதரின் வீட்டில் நடக்கும் குழந்தையின் பிரிவைப் பற்றியது. திருவிழாவில் தொலைந்து போகும் குழந்தை கிடைத்ததா ? இல்லையா? அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் தான் காத்திருப்பு.
அந்நியம், சிறுகதை நிறைவேறாத காமத்தை பற்றி பேசுகிறது. உடலின் பசியை போக்குவதற்கு ஆண்களும், பெண்களும் எடுக்கும் முயற்சியில் தன் வாழ்வும், எதிர்கால பிள்ளைகளின் வாழ்வும் வீணாவதை பற்றிபேசுகிறது.
சாதி வாக்கு, ரொம்ப எதார்த்தமான படைப்பு எனக்கு இந்தப் புத்தகத்தில் ரொம்ப நெருக்கமா பிடித்த படைப்பு இது. தேர்தலில் ஜாதிகளின் பயன்பாடு பற்றியும் ஆதிகாலம் முதல் இப்போது வரை தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை பற்றியும், அதில் தோல்வியடைந்து அவர்களுடைய முக பாவனைகளும், அவருடைய வாழ்வியலும் அதில் பயன் படுத்திட மனிதர்களைப் பற்றி அற்புதமாக பதிவு செய்திருக்கிறார். முக்கியமான படைப்பு இது.
பனங்காட்டு இசக்கி, இலச்சி என அழைக்கும் இசக்கிகள் எப்படி உருவாகினார்கள் என்றும், பனை மரத்தின் பயனும், பனைமரத்தில் கிடைத்த உணவுப் பொருட்களைப் பற்றியும் அந்த வாழ்வையும் அற்புதமாக சித்தரிப்பின் மூலம் விளக்குகிறார். நல்லா வந்திருக்கிறது இந்த கதை.
வாசம் சிறுகதை, அம்மா, அப்பா இல்லாத ஹாஸ்டலில் வளரும் சிறுவர்களின் மனதினையும், சர்ச்சின் பிரார்த்தனை பற்றியும், அவர்களால் நடத்தபடும் கருணை இல்லங்களை பற்றியும், அவற்றின் மூலம் பிறந்தது முதல் வணங்கிய இறை முதல் கனவுகள், ஏக்கங்கள் எல்லாம் மாற்றம் அடைவதை பற்றி கடைசியாக அம்மா அவனே ஹாஸ்டலில் கொண்டு விடும் போது வாங்கி கொடுக்கும் பீஸ் கேக்கின் வாசனையை வைத்தே வலியை கடத்தி இருப்பார் எழுத்தாளர். உண்மையிலேயே வாசம் கதைய படிச்ச பிறகு ஒரு பீஸ் கேக் பார்க்கும்போது இந்த வாசம் கதையின் வாசனை வீசும் அற்புதம்.
கம்யூனிஸ்ட் கதை, கொச்சுமணி எம்எல்ஏ பற்றியது. அவரின் போராட்ட கால வாழ்க்கையின் வலிகளையும் , அப்போதைய காலகட்டத்தையும் கொடுத்துள்ளார். அவரை பலமுறை காவல்துறையினர் கொல்லப் பார்த்தார்கள். அதனால் தொடர்ந்து அவரின் இறப்புச் செய்தியை அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். அந்த அளவு உக்கிரமான போராளி அவரை மையப்படுத்தியே இந்த கதை எழுதப்பட்டுள்ளது . இந்த காலகட்டத்தில் இவர்களைப் போன்ற சமூகப் போராளிகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகபடுத்த நினைத்ததில் மகிழ்ச்சி.
அடைக்கலாபுரத்தில் இயேசு என்ற கதை, திருட்டு வீசிடி காலத்தில் சினிமாத்துறையின் வீழ்ச்சியை ஒட்டி தியேட்டர்கள் மூடப்பட்டு வந்தது. அப்போது வேறு வழி இல்லாமல் ஆபாசபடத்தை மட்டும் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த தியேட்டரை பற்றியும் , அதை சார்ந்த ஊரை பற்றியும் தியேட்டரில் மறைந்து மறைந்து, ஆபாசபடம் பார்க்க வரும் மனிதர்களைப் பற்றியும், அந்த ஊரில் இருந்து படிக்கப்போகும் சிறுவனின் சேட்டைகளை பற்றியும், இறுதியில் அந்த தியேட்டர் எந்த வடிவத்தில் அடைகிறது என்பதை பற்றியும் மிக சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் 9 கதைகளும் சிறப்பு. பஞ்சுமிட்டாய் பால்ராஜ் படித்ததும் அடுத்தக் கதைக்கு உடனே போக முடியாத அளவு வலியும் மன நெருக்கடியும் ஏற்படுவது சகஜம். வரலாறு,காமம், மனவலி, பிரிவு, போன்ற அத்தனை உணர்வுகளையும் பற்றி பேசுகிறது இந்த படைப்பு. வாய்ப்பு இருப்பவர்கள் வாங்கி வாசிக்கவும் புலிக்குத்தியை.
ரா. ராகுல் சே