ராம் தங்கத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘திருக்கார்த்தியல்’ நூலை, 4 வருடங்களுக்கு முன்பு வாசித்தேன். அந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதியிருந்தேன். அதில் இடம்பெற்றிருந்த கதைகள் எல்லாமே சிறந்த கதைகள். கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த வட்டார மொழியில் பல கதைகள் இருந்தாலும் கூட, நுட்பமாக எழுதப்பட்ட கதைகள் அவை.
2020-ல் அவர் எழுதிய ‘ராஜவனம்’ குறுநாவலைப் படித்தேன். அதன் இறுதிப் பகுதியை மிகப் பிரமாதமாக எழுதியிருப்பார். ‘இதை இன்னும் விரிவாகவே எழுதியிருக்கலாமே’ என அவரிடம் பேசியபோது சொன்னேன்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது ‘புலிக்குத்தி’ சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. இந்த நூலில், நான்கைந்து கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. முதல் கதையான ‘பஞ்சு மிட்டாயும் பால்ராஜ் அண்ணனும்’ கதையை ஏற்கெனவே ஏதோ ஒரு இதழில் வாசித்திருந்தாலும், இப்போது வாசிக்கவும் சுவாரசியமாக இருந்தது. ‘புலிக்குத்தி’ கதையும் நல்ல ரசனையுடன் எழுதப்பட்டுள்ளது.
‘பனங்காட்டு இசக்கி’ என்றொரு கதை. நான் நாஞ்சில் நாட்டில் பிறந்து, வளர்ந்தவன். 25 வயது வரைக்கும் அங்கு வளர்ந்தவன். பனை பற்றிய நுட்பமான தகவல்கள் இந்தச் சிறுகதையில் நிரம்பிக் கிடக்கின்றன. கூர்மையாகக் கவனித்துப் படிக்க வேண்டிய நிறைய தகவல்கள் இதில் இருக்கின்றன.
எளிய மாணவனாக இலவச தங்கும் விடுதிகளில் தங்கிப் படித்த கதைகள் எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளன. அதில் ராம் தங்கத்தின் அனுபவங்கள் இருக்கக்கூடும். ‘காத்திருப்பு’ என்றொரு கதை இந்தத் தொகுப்பில் உள்ளது. என் ஊருக்குப் பக்கத்தில் திருப்பதி சாரம் என்ற ஊர் இருக்கிறது. சின்ன வயதில் காணாமல் போன தன்னுடைய முதல் மகனைப் பற்றிய கதை அது. மிகவும் நுட்பமாக அந்தக் கதையை எழுதியுள்ளார். காணாமல் போன மகன் ஊருக்குத் திரும்ப வரும்போது அடையாளம் காணப்படாமலேயே மறுபடியும் தொலைந்துவிடுவான். அவனுடைய அப்பா வைத்திருக்கும் பலசரக்குக் கடையில், புத்தகங்களும் இருக்கும். அதில், நவீன எழுத்தாளர்களுடைய புத்தகங்களும் இருக்கும் என்பது போன்று கதையை மிகச்சிறப்பாகக் கொண்டு சென்றிருப்பார்.
ராம் தங்கம் வயதில் இளைஞர். ஆனால், அவருடைய அனுபவங்கள், பட்டுத் தேறிய அனுபவங்கள். சிறுகதை எழுதுவதில் பல கோணங்களும் பார்வைகளும் உள்ளன. ஆனால், ஒருவருடைய அனுபவத்தில் இருந்து எழுதும்போது, அதன் வீச்சும் வீரியமும் வேறு விதத்தில் இருக்கும். அனுபவத்தின் வலி அந்த எழுத்தில் சிறப்பாகத் தொனிக்கும். அப்படி இந்தக் கதைகளில் ராம் தங்கத்தின் அனுபவ அடையாளங்கள் இருக்கின்றன. சில கதைகளெல்லாம் அனுபவிக்காமல் எழுத முடியாது. ‘திருக்கார்த்தியல்’ தொகுப்பிலும் அதுபோன்று சில கதைகள் உள்ளன.
ஒவ்வொரு நூலுக்கும் இரண்டு வருட இடைவெளியில், எழுத்துத் தேர்ச்சியும், அனுபவ முதிர்வும் தெரிகின்றது. நெடுந்தூரம் பயணப்படுவதற்கான நம்பிக்கை தரக்கூடிய இளைஞராகத் தெரிகிறார் ராம் தங்கம்.
– நாஞ்சில் நாடன்
புலிக்குத்தி
வம்சி புக்ஸ்
பக்கங்கள் 160
விலை: 150
( நன்றி. காவேரி மாணிக்கம்)