புலிக்குத்தி – சுனிதா கணேஷ்குமார்

 ஒரு பெரு மழையினைச் சொரியத் தயாராகத் திரண்டு, ஒரு குளிர்ந்த காற்றினை எதிர்பார்த்துக் காத்துநிற்கும் கார்மேகம் போல தான் பார்த்துப் பழகிய அனுபவக் கதைகளை எழுத்து தனக்கு வசப்பட்ட பாயும் வெள்ளம் என இந்த புத்தகம் முழுவதிலும் பாய விட்டிருக்கிறார் ஆசிரியர் ராம் தங்கம். முக்கியமாக என்னைக் கவரும் விஷயம் மிகவும் எளிமையான வார்த்தைகள்; ஜாலமற்ற இயல்பாய் அதன்போக்கில் விரியும் கதைகள்தான். சில கதைகளில் நாகரீகம் கருதி சில நிகழ்வுகளை மறைக்காமல் உள்ளது உள்ளபடி மிகவும் உயிரோட்டமாகக் கதையைச் சொல்கிறார். ஏற்கெனவே படித்த “திருக்கார்த்தியலு”ம்  சரி, “புலிக்குத்தி”யும் சரி, சாதாரண மக்களின் வாழ்வியல் பற்றியும் அவர்களுடைய வலிகளைப் பற்றியும் நிறையப் பேசுகிறது.

பனங்காட்டு இசக்கி கதையின் மூலம் பனைத்தொழில் மெல்ல மெல்ல வழக்கொழிந்து அழிவை நோக்கிச் செல்வதாக கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார். பனைத் தொழிலில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், பனையேறிகளின் வாழ்வியல் பற்றிய தகவல்களையும் தந்திருக்கிறார். இந்தக் கதை வாழ்வின் வறுமையினால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பாவமும் அறியாத ஒரு பெண்ணின் மரணம் குறித்துப் பேசுகிறது. அதேசமயம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் அநீதிகளும் அவர்களைப் பெண் தெய்வங்களாக்கித் துடைக்கப்படும் வரலாற்றையும் பேசுகிறது.

திருவிழாவில் காணாமல் போன தன்னுடைய மகன் திரும்ப வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் குடும்பம்; மளிகைக் கடையில் வியாபாரம்; சேர்ந்து ஆயிரம் ரூபாய்க்கு மளிகை சாமான் வாங்கினால் ஒரு புத்தகம் இலவசமாகக் கொடுத்து தன்னைப்போலவே இலக்கிய வாசகர் வட்டத்தை விரிவுபடுத்த நினைக்கும் சுப்பிரமணியம் அண்ணாச்சி போன்ற பாத்திரம் இக்கால சூழ்நிலையில் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு பாத்திரமாகவே நினைக்கிறேன்.

வன விலங்குகளிடம் இருந்து மக்களையும் தன் வளர்ப்பு உயிரினங்களையும் காக்கும் பொருட்டு பாதுகாப்புத் தொழில்செய்யும் “புலிக்குத்தி” மக்கள்,  நடுகல் என்ற நினைவுச்சின்னத்தைப் பற்றியும் புனைவு கதையுடன் பேசுகிறது “புலிக்குத்தி” என்ற கதை. முதலில் விறுவிறுவென ஒரு கொலையில் தொடங்கி அக்கொலையினால் ஏற்பட்ட 7 பேர்களின் உயிர் பறிப்பினை சுவாரஸ்யமான தகவல்களுடன் சேர்ந்தே கதையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். சகோதரர்கள் ஆறு பேரும் சேர்ந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களை எப்படி அரங்கேற்றுகிறார்கள் போன்ற முறையினை மிகவும் சுவாரஸ்யமாக விளக்கியிருக்கிறார்.

வாசம், அந்நியம் போன்ற கதைகளில் எல்லாம் சிறுவர்களின் மீது இந்த வாழ்க்கை நடத்தும் அவலங்கள் தாங்கிக் கொள்ளவே முடியாத ஒரு உணர்வினைத் தந்தது. மகிழ்ச்சியாகவும் விளையாட்டுகளாகவுமே நிரம்பி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் சிறுவர்களுக்கு வாய்க்கப் படாதது யாருடைய தவறாக இருக்க முடியும்? இந்த வறுமை அவர்களின் வாழ்வோடு விளையாடும் ஆட்டத்தின் வலிகள் தான் எவ்வளவு? இப்படி ஆதரவற்று வறுமையில் உழன்று கொண்டிருக்கும் குழந்தைகளின் துயரம் மிக்க வாழ்வினை, அவர்களின் எதிர்காலத்தைச் செம்மையாக்கும் பொறுப்பினை யார் செய்வார்கள்?

இவ்விரு கதைகளும் இரண்டு நாட்களாக என்னைத் தூங்கவிடாமல் செய்தது. என் கணவரோடு கண்ணீருடன் கலந்துரையாடி எனக்கான ஆறுதலைத் தேடி அலைந்தேன்.  இந்த கதைகளின் தாக்கத்திலிருந்து வெளியேறிவிட அலைபாய்தேன் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

கல்வீசி பிஞ்சு மனங்களைக் காயமாக்கும் கலை இவ் வாழ்க்கைக்கு கைவந்த கலை போல! அதனால் காயப்பட்ட இதயங்கள் கடந்து வந்த பாதை சுமக்கும் வாழ்வியல் துயரங்கள் ஏராளம்!

– சுனிதா கணேஷ்குமார்

About the author

ramthangam

Add comment

By ramthangam