திருக்கார்த்தியல் பதினோரு கதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. ‘அசோகமித்ரன் விருது, சுஜாதா விருது, மற்றும் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதுகளைப் பெற்றுள்ளது’.
ஒவ்வொரு கதையும் ஒரு தனிச்சிறப்பு (unique). கன்னியாகுமரி மாவட்ட வட்டார மொழி வழக்கில் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க எந்தத் தடையுமில்லா எழுத்துநடை. ஒரு சில வார்த்தைகள் பரிட்சயமில்லாததாக இருந்தது. மற்றபடி கதைகளை வாசிக்க எந்தவித இடையூறும் இல்லை. ரொம்ப அலட்டலான வருணைனகளின்றி எதார்த்தமாக, அதே சமயம் மிகவும் ரசிக்கத் தகுந்ததாக இருக்கிறது ஒவ்வொரு கதையும்.
ஒரு சேர கதைகளை படிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு கதையை முடித்த பின்பும் அதன் தாக்கம் சில மணித்துளிகளுக்கு அசைபோடும் வகையில் இருக்கிறது, இரண்டு கதைகளைத் தவிர. பெரும்பாலான கதைகள் சிறுவர்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன. அதனாலோ என்னவோ அவ்வளவு உணர்வுப்பூர்வமாக இதயத்தைத் தொடுகிறது. ஒரு சேர கதைகளைப் படித்தால் மனம் கணப்பது நிச்சயம்.
இக்கதைகள் அனைத்தும் இன்றும் சமூகத்தில் எங்கோ ஒரு இடத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றே தோன்றுகிறது. கதைகள் என்றே, வாசித்த பின் உணர இயலவில்லை. உண்மைச் சம்பவங்கள் தான் என்று நினைக்குமளவிற்கு அற்புதமாக உணர்வுகள் எழுத்தின் மூலம் கடத்தப்பட்டிருக்கிறது. மிக எதார்த்தமாக கதைமாந்தர்கள் மனதில் நிற்கிறார்கள். மிகச்சிறந்த படைப்பு. கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய நூல்.