ராஜவனம் – சுனிதா கணேஷ் குமார்

இந்தப் புத்தகம் சிங்கப்பூர் “மாயா இலக்கிய வட்டம்”நடத்திய குறுநாவல் போட்டியில் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் உரையில், “எழுதக் கூடியதை சீக்கிரம் எழுதிரனும் இல்லன்னா அது நீர்த்துப் போய்டும்” என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் சொல்லி இருக்கிறதாக குறிப்பிட்டு இருப்பார். அதனால் இந்த புத்தகம் படித்து முடித்த கையோடு இதற்கான மதிப்பு உரையையும் எழுதத் துவங்கி விட்டேன். படிக்க ஆரம்பித்து பின்னிரவில் படித்து முடித்த கையோடு இதனை எழுதுகிறேன்.

செல்வம் கொழிக்கும்வனாந்திரம்! பார்க்கும் தேக்கும் ரப்பரும் வானுயர்ந்து நிற்கிறது.
ஆங்காங்கே காளான்குடை பிடித்தது போலமக்கள் குடிசைகள்! தூக்கம் கண்களை கவரகொட்ட கொட்ட முழிக்கிறேன். ஆண்டவன் என்ற ஒரு சக்தி படைத்த இயற்கையின் அற்புதத்தை ரசிக்க!
முடங்கிக் கிடந்த மனதை புதுப்பிக்க முயற்சித்துஅழைத்தான் போலும் அவன் அழகை காண!

இந்த புத்தகம் என்னையும் ராஜேஷ், கோபால், ஆன்றோவுடன் குமரி மாவட்டத்திலுள்ள வனாந்திரத்திற்குள் அழைத்துச் சென்றது. முகளியடி மலையில் உள்ள நந்தி ஆற்றின் மூலத்தை தரிசிக்க இம்மூவரும் கிளம்புகிறார்கள். போகும்போதே ஆசிரியர் வாசகர்களையும் கூடவே அழைத்துச் செல்கிறார். அவர் பார்க்கும் அத்தனை காட்சிகளையும் நமக்கும் காண்பிக்கிறார்.
‘நந்தி ஓடையில் மூழ்கி கிடக்கும் கற்கள் பச்சை பாசி பிடித்து உருண்டையாக இருந்தது. ஓடையின் ஓரத்தில் நிற்கும் நீர்மருது மரங்களின் பக்கவாட்டு வேர்கள் நெளிந்து கிடக்கும் கட்டுவிரியன் பாம்பு குட்டிகள் போல வளைந்து கிடந்தன. ஓடை நீரில் ரப்பர் காய்களும் மிதந்து வந்தன’.

காட்டிற்குள் செல்ல செல்ல அங்கே வாழும் பல வகையான குரங்குகள், கரடிகள்,வரையாடுகள், மான்கள், தவளைகள், யானைகள், பல்வேறு பறவையினங்கள், தேன் சிட்டு, நாகணவாய், கள்ளிப் புறா, காட்டுக்குயில், தீஞ்சிட்டு, நிலசருகுமான், மலைமொங்கான், செம்பு கொத்தி, குக்குறுவான் இப்படி தெரியாத பலவற்றை காண்பித்துக் கொண்டே செல்கிறார்.

ஓரிடத்தில் நிறுத்தி இது தடை செய்யப்பட்ட ரிசர்வட் காட்டுப்பகுதி என்கிறார்.  ‘தோட்ட மலை, தச்சமலை, புறாமலை என அத்தனை மலைகளும் புலிகள் சரணாலய கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். இங்கு இருக்கக்கூடிய நாற்பத்தி இரண்டு பழங்குடி குடியிருப்புப்களையும் தேன் கூட்டை கலைப்பது போல கலைத்து விடுவார்கள். களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் நீட்சியாக இதை கொண்டு வந்துவிடுவார்கள்’ ஆசிரியரின் இந்த வருத்தம் வாசகர்களாகிய நம்மையும் அண்டிக் கொள்கிறது.

நண்பர்கள் மூவரும் செல்பி எடுத்துக் கொள்ளும் முயற்சியில் வரும் புலியின் என்ட்ரி நம்மை நிச்சயம் நடுங்க வைக்கும்ம்.  அதிலிருந்து தப்பித்த பிறகு மற்ற நண்பர்கள் இருவரும் காட்டிற்கு வெளியே சென்றுவிடுகிறார்கள். ஆனால் கோபால் மீண்டும் காட்டிற்குள் சென்று அதன் அழகை காண துடிக்கிறான். இது கோபால் காடுகளின் எவ்வளவு தீவிர ரசிகன் என புரிய வைக்கிறது. இதன் பிறகு வரும் கதை மிகவும் சுவாரசியமானது.

வன விலங்குகளின் கதைகள், மின்சார வேலிகள்,புதை வெடிகள் இவையெல்லாம் விலங்குகளை எவ்வாறு பாதித்துவிடுகின்றன என கதை சொல்லும்போது அதுவும் நம்மை போன்ற ஒரு உயிர்தானே என்ற சோகம் இழையோடுகிறது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் மன்னன் மார்த்தாண்ட வர்மா அரியணை ஏறுவதற்கு முன்பு, காட்டில் சுற்றித் திரிந்து மறைந்து வாழ்ந்த அவருக்கு இந்த பழங்குடி மக்கள் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தார்கள் என்றும், அவருக்காக அந்த குகையில் அமைத்துக் கொடுத்த ஒரு கல்லினால் ஆன நாற்காலி ஒன்று இருக்கிறது. அது இருபுறமும் அமரும் வகையில் இருக்கிறது. அந்த நாற்காலியில் கோபால் அமரும் போது ஒரு பக்கம் குளிர்ச்சியாகவும் இன்னொருபுறம் வெம்மையாகவும் இருந்தது. ஆமாம் அது ராஜவனத்தின் சிம்மாசனம் அல்லவா.
வனத்தின் இயற்கையின் குளிர்ச்சி ஒருபுறமும், யானை தந்தங்களுக்காகவும், விலையுயர்ந்த மரங்களுக்காகவும் இயற்கை சுரண்டல்களுக்கும், வான்விலங்குகளை பாதுக்காக்கவும் அங்கே நடைபெறும் அநியாயங்கள் அரசியல் இவையெல்லாம் அந்த சிம்மாசனம். சிம்மாசனத்தின் வெம்மையை நினைவுபடுத்தின.

கோபால் அந்த பழங்குடி மக்களோடு தங்கும் சமயத்தில் பழங்குடி மக்களின் வாழ்க்கைமுறை,சடங்கு சம்பிரதாயங்கள், கைமருந்து பூப்பெய்துதல் நிகழ்வு, பேறுகாலம் போன்ற நிகழ்வுகளில் அவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்கிறான். அவனோடு வாசிப்பாளர்கள் ஆகிய நாமும் தெரிந்து கொள்கிறோம். இந்த புத்தகம் வாசித்த நேரம் முழுவதும் ஒரு அடர்ந்த காட்டிற்குள் சிலகாலம் வாழ்ந்து வந்த ஒரு அனுபவத்தை தருகிறது இந்த ராஜ வனம்.

– சுனிதா கணேஷ் குமார்

ராஜ வனம், வம்சி புக்ஸ், பக்கங்கள்: 80, விலை: ரூ 70

About the author

ramthangam

Add comment

By ramthangam