ராஜவனம் – இந்து கணேஷ்

 ராஜ வனம் என்கிற இந்த தலைப்பே முதலில் என்னை ஈர்த்தது எனலாம். ஏனோ வனம் சார்ந்த புத்தகங்கள் எனக்கு மனதிற்கு நெருக்கமானவையாக ஆகி விடுகின்றன. நான் அதிகம் பயணிக்க முடியாத ஆனால் மிக விரும்பும் இடமாகவே வனம் இருந்து வருகிறது. கதை குமரி மாவட்ட வனத்திற்குள் நம்மை அழைத்து செல்கிறது. கோபால், ராஜேஷ் மற்றும் ஆன்றோவுடன் நானும் பயணித்தேன். திருநந்திக்கரை வழியாக மலை ஏற தொடங்கும் மூவரும் நந்தி ஆற்றின் மூலத்தை காணும் ஆவலுடன் கிளம்புகிறார்கள். முகளியடி மலைக்கு போய் புலி அடித்து இறந்தவர்களை பற்றிய குறிப்பில் தான் லேசான பயம் நம்மை ஆட்கொள்ள தொடங்குகிறது.
 காட்டிற்குள் போக போக புல்வெளி வட்ட மலையில் அவர்கள் பார்க்க நேரும் காட்டுத்  தேள், வெண்புள்ளி புதர் தவளைகள், கூகைகள், கடமான்கள், சோலை மந்திகள், சருகு மான்கள், மரவட்டை, மலைமொங்கான், வால் காக்கைகள்,  இன்னும் பல வகை சிட்டுக்கள், பட்டாம்பூச்சிகள் என்று நீளும் பட்டியல் நம்மை வியக்க வைக்கின்றது. மூங்கில் யானைகளுக்கு பிடிக்கும் என்பது ஓரளவுக்கு தெரியும். ஆனால் மூங்கிலில் இரண்டு வகை உண்டு என்றும் மூங்கிலரிசியை பற்றிய குறிப்புகளும் நான் இதுவரை அறிந்திராதது.  நீலக்குறிஞ்சி மலர்களின் பின்னணியில் வரையாடுகளின் வாழ்விடங்களை அவர்கள் காணும் போது உடனே அந்த இடத்திற்கு போக முடிந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை என்னை அலைக்கழித்தது. வரையாடுகள் அழியும் அபாயத்தில் இருப்பது சமீபத்தில் அறிந்து கொண்டேன் என்றாலும் அதை எப்படி அழிக்கிறார்கள் என்பதை விளக்கி இருக்கும் விதம் அருமை.
 கோபால் தன் நினைவடுக்குகள் வழி நினைத்து பார்க்கும் அவனது தந்தையும் வனக்காவலரும் ஆன ராஜசேகர் யானை டாக்டரின் வரும் டாக்டர் கேயின் பிம்பத்தைக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் அனுபவங்கள் எல்லாம் நம்மை அசைத்து பார்க்கிறது. இறந்த குட்டியை தூக்கி கொண்டு அலையும் தாய் யானை, மின்சார வேலி தாக்கி இறந்த யானைகள் என்று நீளும் பட்டியல் மனதிற்குள் சொல்ல இயலாத துயரத்தை விதைக்கிறது. செக் போஸ்ட் டியூட்டியில்  இருந்த போது நிகழ்ந்த அனுபவங்களை என் அப்பா எனக்கு சொன்ன நினைவுகளை மீட்டெடுத்தது ராஜ வனம்.
 திருவிதாங்கூர் சமஸ்தானத்து அனுஷம் திருநாள் அமரும் கல் நாற்காலியில் கோபால் அமரும் போது அந்த குளிர்ச்சி நமக்குள்ளும் இறங்குகிறது. வனத்திற்குள் போனதாலேயே புலி, யானை, மலைப்பாம்பு என்று அனைத்தையும் பார்க்க முடியுமா என்ற ஆச்சர்யம் என்னை விட்டு அகலவில்லை. பின்னே ராஜவனம் இல்லையா அதனால் தான் எல்லாவற்றையும் காண முடிகிறது என்கிற மகிழ்வும் வருகிறது. புலிகள் கணக்கெடுப்புக்கு போன என் நண்பர்களிடம் கேட்ட போது புலியை நேரில் பார்க்க நேர்வது மிகவும் அரிது என்றே சொன்னார்கள்.
 பன்னிவெடி என்ற பேரில் பழங்களில் அல்லது உணவு பொருட்களில் வெடி மருந்தை வைத்து மிருகங்களை வேட்டையாடும் விதமெல்லாம் வாசிக்கும் போதே மிகுந்த மனக்கவலை அளித்த இடங்கள். காணிகளின் வாழ்விடம், அவர்களின் வாழ்க்கை முறை, பேர்காலம் மற்றும் பூப்படைந்தால் மேற்கொள்ளும் வழிமுறைகளை எல்லாம் தெரிந்து கொண்டு சிறப்பாக எழுத்தி இருக்கிறார் ராம். வனத்திற்குள் வனவிலங்குகளை தொல்லை செய்யாமல் இயற்கையோடு இயைந்து இருக்கும் காணிகளை துரத்திவிட்டு மின்சார வேலிகளை போட்டு அதனால் தாக்குண்டு விலங்குகளை இறந்து போவதை பற்றி எந்த பிரஞ்சையும் இல்லாம இருக்கிறது அரசு. வனத்திற்குள் இருக்கும் சிறு புழு பூச்சிகள் முதல் அங்குள்ள விலங்குகள், மரங்கள் பறவைகள் என்று ஒவ்வொன்றையும் ராமின் விவரிப்பில் வாசிக்கும் போது இதை அந்த வனத்தில் பயணிக்காத ஒருவரால் எழுதிவிடவே முடியாது என்பது நமக்கு தெளிவாக புரிகிறது.
 வட்டார வழக்கை கடை பிடித்திருந்தாலும் படிக்க படிக்க நம்மாலும் புரிந்து கொள்ள முடிகிறது. மூப்புலு என்றால் அப்பா என்றும், கிருஷி என்றால் விவசாய நிலம் என்றும் புரிந்து கொண்டேன். இந்த கதை யாருக்காவது நடந்த அனுபவமா அல்லது புனைவா என்று நமக்குள் யோசனை படரும். எதுவாக இருந்தாலும் வனத்திற்குள் நம்மை கைபிடித்து அழைத்து செல்லும் எழுத்து வெகு அற்புதம். குறுநாவல் என்பதால் விரைவிலேயே முடிந்து விட்டது இன்னும் சற்று தூரம் இந்த பயணம் நீளாதா என்கிற எண்ணத்தை தோற்றுவிக்கிறது ராஜ வனமும் ராமின் எழுத்தும்.
– இந்து கணேஷ்
ராஜவனம்
ராம் தங்கம்
பக்கங்கள் : 80
பதிப்பகம் : வம்சி புக்ஸ்

About the author

ramthangam

Add comment

By ramthangam