ராஜவனம்- மதிப்புரை- பொன்னீலன்

ராம் தங்கம் இயல்பிலேயே ஒரு ஊர் சுற்றி. வெறும் ஊர்சுற்றி அல்ல அவர், தான் பார்த்த இடங்களின் சகல அம்சங்களையும் நுட்பமாக உள்வாங்கி கவனமாக பதிவு செய்து வாசகர்களை கிறங்க வைக்கும் ஊர்சுற்றி. அவருடைய முதல் படைப்பு ஒரு ஊர் சுற்றிப் பறவையில் பயண அனுபவங்கள் தானே.
நந்தியாறு திருநந்திக்கரையில் ஓடுகிறது. ஆற்றில் மூலத்தை தேடுவதே படைப்பில் ராம் தங்கத்தின் லட்சியம். தேடுகிறார் கண்டடைகிறார். அவருடைய மொழி அருமையானது. காட்சிப்படுத்தும் முறை மிக நேர்த்தியானது. கோபால் என்ற பாத்திரத்தை உருவாக்கி அவருடன் ராஜேசயும், ஆன்றோவையும்  இணைத்து இந்த ருசிகரமான பயணத்தை நடத்துகிறார் ராம் தங்கம். காட்சிகளை அவர் சித்தரிக்கும் முறை வாசகரும் பார்த்து அனுபவிப்பது போன்ற முறையில் இருக்கிறது.
புலியைப் பாதுகாத்த வனக்காவலர் ராஜசேகர். காணி பழங்குடி மக்களிடம் அவர் காட்டும் பரிவு. அவருடைய சோகமான முடிவு. காணி மக்களின் வாழ்க்கையை ராம் தங்கம் விவரிக்கும் முறை மனதைக் கவர்கிறது. காணி மக்களின் பண்பாடு அவர்களின் பழக்கவழக்கங்களைஅடுக்கிக் கொண்டு போகும் ராம் தங்கம் கடைசியாக நந்தியாற்று மூலத்தை அற்புதமாக காட்டுகிறார். இல்லை இல்லை நம்மையும் உடன் அழைத்து சென்று காண வைக்கிறார். முதல் வரியை வாசித்தால் இறுதிவரை வாசிக்காமல் நிறுத்த முடியாத அளவு நெகிழ்ச்சியோடும் கவர்ச்சியோடும்  ராம் தங்கம் சித்தரிக்கும் ராஜவனம் உண்மையிலேயே வாசகர்களுக்கும் ராஜவனம் தான். ராம் தங்கம் மேலும் மேலும் இலக்கிய உலகில் வளர்வார்.
பொன்னீலன்.

About the author

ramthangam

Add comment

By ramthangam