வனத்தை வெளியில் இருந்து மட்டும் வேடிக்கைப்பார்த்து ரசித்துச் செல்லும் நம்மை அழைத்துக்கொண்டு, ஒரு சுற்றுலா வழிகாட்டியைப்போல் அதன் அழகை விவரித்துக்கொண்டே வரும் நாவலாசிரியர், ஆங்காங்கே தண்ணீர் குடிக்க வரும் காட்டுயிர்களை வேடிக்கைக் காட்டியபடி கவனமாக உள்ளழைத்துச் சென்று, காட்டின் மத்தியில் நிற்க வைத்து, அங்கு நிகழும் பெரும் அரசியலையும் அதிகார மீறல்களையும் கண்முன்னே காட்சிப்படுத்துகிறார்.
சாலைகளில் ‘வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம்’ என்ற அரசின் அறிவிப்பு பலகைகளைப் பார்க்கும்போதெல்லாம் மனதில், ஓர் யானையை அதன் போக்கில் வாழவிடுங்கள் அதுபோதும் என்றே தோன்றும். எனக்கு யானை என்பது வெறும் யானை மட்டுமல்ல. அது மாபெரும் காடுகளின் தொகுப்பு. மரம் செடி கொடிகளெனப் பல உயிர்கள் ஒன்று சேர்ந்த பேருருவம். நடமாடும் அழகிய காடு.
வீடுகட்டி தெரு அமைத்து. தங்களுக்கென்று ஒரு வாழிடத்தைக் கட்டமைத்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் குடிமக்களை, ஏதேதோ காரணங்கள் சொல்லி, ஒரே நாளில் அடித்து விரட்டி வேறிடம் நோக்கி நகர்த்த முடிந்த அதே அரசாங்கம்தான், காட்டை அழித்து யானைகளின் வாழிடங்களை ஆக்கிரமித்துக் கோயில் கட்டி, தன்னைக் கடவுளாக்க முற்படுபவனின் ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
தினம் செய்தி தாள்களில் மின்சார வேலி தாக்கி யானை போன்ற வன உயிர்கள் சாவதையும், இரயிலில் அடிப்பட்டுச் சாவதையும் கவனத்தில்கொள்ளாமல் கடந்து செல்வதைப்போல், தந்தத்திற்காக யானைகளும் இன்னபிற தேவைகளுக்காக மற்ற உயிர்களும் தாவரங்களும் வேட்டையாடப்படுவதற்கு, அரசும் அதன் அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். இவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் இந்நாவலில் வரும் ராஜசேகரைப் போன்றவர்களை இடமாற்றவும் கடைசியில் கொல்லவும் செய்கிறார்கள்.
மலைவாழ் மக்களின் கடவுள் வழிபாட்டுமுறை, குடும்பச் சடங்குகள், உணவுப் பழக்க வழக்கங்கள், நுட்பமான மருத்துவ அறிவு போன்ற வாழ்வியலோடு அவர்களுக்குக் கல்வி இன்னும் பெரும் தூரமாகவே இருக்கிறது என்பதையும், எப்படியெல்லாம் அவர்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்து, நம்முடைய கையைப்பிடித்துக் காட்டிற்குள் அழைத்துச் சென்ற தானொரு சுற்றுலா வழிகாட்டியல்ல. மலைவாழ் மக்களுக்காகவும் காட்டிற்காகவும் காட்டுயிர்களுக்காகவும் குரல் கொடுக்கும் சமூகப் போராளி என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் ராம் தங்கம். வாழ்த்துகள்
– ரிஸ்வான் ராஜா.
வம்சி புக்ஸ் வெளியீடு
80 பக்கங்கள்
70 ரூபாய்