ராஜவனம்- மதிப்புரை- நசீமா ரசாக்

 காடு,வயல், ஆறு, நிலவு,நட்சத்திரம், பட்டாம்பூச்சி இப்படி இயற்கையோடு நான் இருந்த தருணங்கள் அனைத்தும் இதயத்திற்கு நெருக்கமானவை. காடு மட்டும் எட்டாத இடத்திலிருந்த குறையை, ராஜவனம் தீர்த்திருக்கின்றது.
முகளியடி மலையில் தான் நந்தியாறு உற்பத்தியாகிறது. அங்குப் போனவர்கள் யாரும் உயிரோடு திரும்பியதில்லை என்று சிறிய திகிலோடு ஆரம்பிக்கிறது கதை.  ஆன்றோ, ராஜேஷ், கோபால் என்று மூன்று நண்பர்களோடு என்னையும் நான்காவதாக ராம் தங்கம் அழைத்துக் கொண்டார்.
பச்சை வாசனையை நுகர்ந்து கொண்டு, வித விதமான செடி கொடிகளை, நெட்டை மரங்கள், குட்டை செடிகளுக்கு நடுவில் பயணித்து, கால்வாய், ஓடை, நதி, ஆறு என்று பார்த்து தண்ணீர் குடித்து, வனத்தின் வசீகரமான கரங்களில் வாசகனை முழுமையாக ஒப்புக் கொடுக்க வைக்கிறது. வித விதமான பறவைகள், பூச்சிகள், அணில் வகைகள்,  சோலை மந்தி, கரடிக் குட்டி என்று வியக்க வைக்கும் விடயம் வாசகனை ஆன்றோவோடு சேர்ந்து கண்களை விரிய வைத்து விடுகிறது.
தோட்டமலை, தச்சமலை, புறாமலை என்ற புலிகளின் சரணாலயங்கள் பற்றியும், 42 காணிப் பழங்குடியினருக்கும், விவசாயிகளுக்கும் காத்துக் கொண்டு இருக்கும் பிரச்சனைகள் பற்றியும் பயணதினூடே சொல்கின்றது. ராஜசேகர் பற்றிப் படிக்கும் இடமெல்லாம் உள்ளுக்குள் ஜெமோ எழுதிய யானை டாக்டர் கே நிழலாக வருகிறார். வனத்திற்குள் மனிதர்கள் நடத்தும் அரக்கத் தனத்திற்கு அழிவே கிடையாதா? மனிதன் எத்தனை கொடூரமானவன் என்று நிந்திக்க வைக்கும் காட்சிகள் மனதைக் கசிய வைக்கின்றது.
புலியிடம் இருந்து தப்பித்து பழங்குடியை அடைந்த கோபால் வரும் இடங்களில், வட்டார மொழி மற்றும் அவர்களுடைய வாழ்வியலில் இருக்கும் அத்தனையும் வாசகனின் மனதில், உணர்வுகளின் அடர்த்தியைக் கூட்டுகின்றது.  வாதமடக்கி இலை, புளி இலை, தெண்ணங்குறும்பல் சேர்த்து நீரில் போட்டுக் காய்ச்சி, வேவு வெள்ளத்தில் குளித்தால் வாதம் வராமல் இருக்க உதவும் என்ற பழங்குடியினரின் மருத்துவக் குறிப்புகள் மறந்துப் போன பாட்டியின் வைத்தியங்களை ஞாபகப்படுத்துகிறது. மூட்டுக்காணி பழங்குடி மக்களின் தலைவன் ராஜசேகர் பற்றிப் பேசும் போது, கோபாலுடன் சேர்ந்து வாசகனின் கண்களும் கலங்குகின்றது.
ராஜவனம் என்ற குறுநாவல் வனத்தின் வனப்பை மட்டும் பேசவில்லை, மனிதம் இல்லாத மனங்களின் கோரமான பக்கத்தையும் தோலுரித்துக் காட்டிச் செல்கிறது.
வாழ்த்துகள் ராம்.
– நசீமா ரசாக்

About the author

ramthangam

Add comment

By ramthangam