புலிக்குத்தி ஒன்பது சிறுகதைகளைக் கொண்ட புத்தகம். மண் சார்ந்த எழுத்து ஆசிரியருடையது. அதனாலேயே அனைத்து கதைகளும் மனதைத் தொடக்கூடியவை. சாதாரண மனிதனின் கதையைப் பேசுபவை. சிறு பிள்ளைகளின் உலகத்திலிருந்து, பெரியவர்களின் எண்ண ஓட்டம் வரை பல களத்தில் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏதோ ஒரு சோகம் இழையோடுகிறது அனைத்து கதைகளிலும்.
எதிர்பாராத ஒரு நிகழ்வில் தாயை இழக்கும் சிறுவன் “ஜீவா”. தாயின் கையால் விதவிதமாக உண்டு வளர்ந்த பிள்ளை, திடீரென ஆதரவில்லாத தனிமையில் தவிப்பது கொடுமை. குறைவில்லாமல் பார்த்துக் கொள்கிற தந்தைதான், தனிமையைக் குறை சொல்லாமல் தன்னளவில் அதை நிறைவாகவே கட்டிக் கொள்கிற ஜீவா மனதைக் கவர்கிறான். பால்ராஜ் அண்ணன் விற்கும் பஞ்சுமிட்டாய் மீது பெருவிருப்பம் உடையவன். பல பிள்ளைகள் அந்த வண்டியின் பின்னால் நடப்பதும், சிறுவர்கள் மீது அந்த பால்ராஜ் அண்ணன் காட்டும் பாசமும் நெகிழ்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சூழ்நிலையில், பஞ்சுமிட்டாய் வியாபாரத்தை மாற்றும் பால்ராஜ் அண்ணனின் தோற்றமும், ஆரோக்கியக் குறைவும் ஜீவாவைப் போல நமக்கும் கண்ணீரை வரவைக்கின்றது. இனம் புரியாத நேசத்தை ஒருவர் மீது வைக்கும் பொழுது அவரின் மாற்றம் நம்மில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த “பஞ்சுமிட்டாயும் பால்ராஜ் அண்ணனும்”கதை.
அடுத்து”புலிக்குத்தி”. ஊர்க் காவலுக்கு நிற்கும் சகோதரர்களில் இருந்து தொடங்கும் கதை, அன்றைய கொள்ளை சம்பவங்களையும் அது நடந்த விதத்தையும் நம் கண்முன் நிறுத்துகிறது. ஒவ்வொரு கொள்ளையர்களுக்கும் அவர்களுக்கே உரிய கொள்ளை முறை, அதைத் தடுக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, காயம் ஏற்பட்டால் செய்துக்கொள்ளும் வைத்தியம், ஒவ்வொன்றும் விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கொள்ளையர்களான ஏழு சகோதரர்களுக்கு “வானவி” செல்லத் தங்கை. புலியிறங்கி கிராமத்திற்கு கொள்ளையடிக்க செல்லும் சகோதரர்கள், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் இழப்பு இவையெல்லாம், இந்த கதையை மறக்கவே முடியாதபடி செய்து விடுகிறது.
“காத்திருப்பு” கதையின் சுப்ரமணியன் அண்ணாச்சி, மிக சுவாரசியமான கதாபாத்திரம். மளிகைக் கடை நடத்தும் இவர் தீவிர வாசிப்பாளர். மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள் வாங்குபவர்களுக்கு பல புத்தகங்களைப் பரிசாக கொடுத்து வாசிக்க வைக்கும் இலக்கிய ஆர்வலரும் கூட. அவர் வாழ்விலும் இருக்கிறது ஒரு சோகம். நான்கே வயது நிறைந்த பிள்ளையை திருவிழாவில் தொலைத்துவிட்டு, இன்று வரை தேடிக் கொண்டிருப்பவர். ஒருகட்டத்தில் அடையாளமே தெரியாத தன் பிள்ளையை, மறுபடியும் கைநழுவ விடுகிறார். திரும்பி வந்து விட மாட்டானா என்ற ஏக்கம் அவரைப்போலவே நமக்கும்.
சிறார் குற்றவாளிகளைப் பற்றி பல கதைகளை தினமும் செய்திகள் வழி அறிந்திருப்போம். “அந்நியம்” கதையில் வரும் செந்தில் பல கேள்விகளை நம்முள் விதைத்துச் செல்கிறான். வீட்டு சூழ்நிலை சரியில்லாத போதும் நன்றாக படிக்கிற பிள்ளை. உறவுச் சிக்கல்களை ஏற்றுக்கொள்ள முடியாத பக்குவம் இல்லாத வயதும், மனதும் அவனைக் குற்றவாளியாக்குகிறது. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மகிழ்வையும், அவன் வாழ்க்கையையும் அடியோடு திசை மாற்றுகிறது சூழ்நிலை.
ஒரு தேர்தல் என்னவெல்லாம் செய்து விடும். உறவை பகையாக்கி, சாதிய வன்மத்தைத் தூண்டி, இப்படி நிறைய. பெண்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட போட்டி இடங்களில் பெண்களை முன்னிறுத்தி, பதவியின் பெயரை மட்டும் அவர்களுக்கு கொடுத்துவிட்டு, அனைத்து அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருக்கும் ஆண்களைத் தோலுரித்துக் காட்டுகிறது “சாதி வாக்கு” கதை. தேர்தல் சமயத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு சாட்சியாக இருக்கிறது இந்தக் கதை.
“பனங்காட்டு இசக்கி ” பெண்களுக்கு நடந்த பல கொடுமைகள் எப்போதும் மறைக்கப்பட்டு முடிவில் அவர்களை ஊர்காக்கும் தெய்வமாக்கி விடுவதைப் பற்றிய கதை. அவர்களின் துயர வாழ்க்கைக்கு சாட்சியாக பல இசக்கிகள். இதில், பனையேறியின் மனைவியாக வரும் உடையாள், தன்னைத் துரத்தும் கொடுமையைத் தீர்க்க வழி தெரியாமல், தானே தன் முடிவைத் தேடிக் கொள்கிறாள். பனங்காட்டைக் காக்கும் இசக்கி ஆகவும் மாறுகிறாள்.
“வாசம்” கதையின் ரமேஷ் தந்தையை இழந்தவன். தன் தாயாரால் ஒரு கிறிஸ்தவ விடுதியில் சேர்க்கப்படுகிறான். ஒவ்வொரு விடுமுறைக்கும் தாய் வந்து ஊருக்கு அழைத்துச் செல்வாள் என்று எதிர்பார்ப்பிலேயே கழிக்கிறான். வரவே முடியாத இடத்திற்கு தாய் சென்று விட்டாள் என்பதை அறிந்ததும் அந்தப் பிள்ளையின் துயரம் நம்மை உருக்கி விடும். சின்ன கேக் துண்டில் கூட தன் தாயை தேடும் அவனின் நேசம், மறக்கவே முடியாதபடி செய்துவிடும்.
“கம்யூனிஸ்ட்” கதை, இடதுசாரியைச் சேர்ந்த தொண்டர்களும், தலைவர்களும் அனுபவித்த வேதனையையும் அவர்கள் கடந்து வந்த பாதையையும் மிக அழகாகச் சொல்லி இருக்கிறது. பலமுறை மரணத்தின் வாசலைத் தொட்டு வந்த கொச்சுமணி, கட்சிக்காகவும், கொள்கைக்காகவும் அனைத்தையும் தாங்கி நிற்கிறார். தொழிலாளர்களுக்காக எவ்வளவு போராட்டங்கள், தலைமறைவாகிச் சென்ற பல தருணங்கள், அடியும் உதையும் அவர்களை ஓர் அடிகூட பின்னோக்கிச் செல்ல விடுவதில்லை. தொழிலாளர்கள் நலன் பெறும்போது, மனநிறைவோடு அடுத்த போராட்டத்திற்கு தயாராகின்றனர். அடிமட்ட தொண்டர்களிலிருந்து தலைவர்கள் வரை அத்தனை பேரின்,உழைப்பையும் சிறையில் அவர்கள் அனுபவித்த வேதனைகளையும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
“அடைக்கலாபுரத்தில் இயேசு” இதில் இந்த ஊரைப் பற்றி சொல்லும்போதே பல தகவல்களை நமக்கு கடத்தி விடுகிறார் ஆசிரியர். பெண் கொடுக்கவோ எடுக்கவோ முடியாத பிரச்சினைகள் நிறைந்த ஊர். இதற்கிடையில் தன் அத்தனை குணாதிசயங்களையும் தீய வழியில் மாற்றிக்கொள்ளும் சிறுவன் ராஜா. அவன் கெட்டுப்போக பல சந்தர்ப்பங்களை அந்த ஊரே அமைத்துக் கொடுக்கிறது. ஆசிரியர்களையே ஓடவைக்கும் அவனின் சேட்டைத்தனம், அவன் மேல் பரிதாபத்தையே வர வைக்கிறது. ஒருவனின் நடத்தைக்கு அவனின் சுற்றுப்புறமும் மிக முக்கிய காரணம் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறது இந்த கதை.
மிக உயிரோட்டமான எழுத்து ஆசிரியருடையது. அவரின் “திருக்கார்த்தியலைப்” போலவே நெகிழ்வையும் மன பாரத்தையும் தரக்கூடிய சிறுகதைகளைக் கொண்டது இந்தப் புத்தகம். வாழ்க்கையை இழந்த, அல்லது ஒதுக்கப்பட்ட சாதாரண மனிதர்களின் வலியைப் பேசுகிறது கதைகள் அனைத்தும். அவசியம் வாசிக்கலாம்.
– சுமிதா ஹரி