24-2-2024 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான நேர்காணல்.
வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் அதிக கவனம் பெறுகிறார் ராம் தங்கம். கன்னியாகுமரி மாவட்ட வாழ்வியலை அடிப்படையாக கொண்டு 12க்கும் மேற்பட்ட கதை நாவல் வரலாற்று தொகுப்பு புத்தகங்களை எழுதியிருக்கும் இவருக்கு சமீபத்தில் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. அதையொட்டி ராம் தங்கத்துடன் சிறு நேர்காணல்.
* உங்களை பற்றி சிறு அறிமுகம் கொடுங்கள்…
என்னுடைய பூர்வீகம் நாகர்கோவில். வாழ்ந்து வருகிறேன். பத்திரிகையாளராக கொஞ்ச காலம் வேலை பார்த்துவிட்டு இப்போது முழுநேர எழுத்தாளராக மாறி இருக்கிறேன்.
* இலக்கிய துறை மீதான காதல் எப்போது மலர்ந்தது?
சின்ன வயதிலேயே வாசிப்பு பழக்கம் எனக்குள் இருந்தது. அதற்கு காரணம் என்னுடைய பாட்டி. அவங்க நிறைய வாசிப்பாங்க. தினசரி நாளிதழ்கள் வாங்கி படிப்பார். அவர் படித்து விட்டு என்னையும் வாசிக்கச் சொல்லுவார். அதன் மூலமாகத்தான் வாசிப்பு பழக்கம் வந்தது. அது பிற்காலத்தில் இலக்கியங்களை வாசிக்க ஒரு தூண்டுகோலாக அமைந்தது.
* இலக்கிய துறையில், உங்களது பங்களிப்பு பற்றி கூறுங்கள்?
நான் முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் காந்திராமன் என்கிற தியாகியின் வாழ்க்கை வரலாறை எழுதினேன். அதன்பிறகு பிறகு குமரிமாவட்டத்தின் வரலாற்றை ‘ஊர்சுற்றிப் பறவை’ என்கிற தலைப்பில் பயண புத்தகமாகவும் எழுதினேன். அதற்கு பிறகு திருக்கார்த்தியல் உள்ளிட்ட இருபது சிறுகதைகளை எழுதினேன். கட்டுரைகள், நாவல்கள் என இதுவரை 12 புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன.
* இலக்கியத்தில், ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். உங்களது ஸ்டைல் என்ன?
யதார்த்த மனிதர்களுடைய கதைகளை எழுதுவதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதைத்தான் எழுதி கொண்டிருக்கிறேன். அடித்தள மக்களுடைய கதைகளை எழுதுவது மூலமாக பல விஷயங்களை உணர்வுப் பூர்வமாக வாசகர்களுக்கு கடத்த முடியும். அதுதான் என்னுடைய ஸ்டைலாக இருக்கும் என சொல்லலாம்.
* நீங்கள் வாசித்ததில், அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்புகள் எவை?
வீரப்பன் தேடுதல் வேட்டையில் அங்குள்ள பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை கொடுமைகளை அழுத்தமாகப் பதிவு செய்திருந்த சோளகர் தொட்டி, சங்க இலக்கிய பின்னணியாகக் கொண்டு அவ்வையார், கபிலர், வேள்பாரி என கதாபாத்திரங்களாக புனையப்பட்ட நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவல், நம்பூதி பெண்களின் வாழ்க்கை பின்னணியில் எழுதப்பட்ட அக்னி சாட்சி, நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை, பொன்னீலனின் மறுபக்கம் என பல புத்தகங்களை சொல்லலாம்
* உங்களது படைப்புகளில், உங்களை அதிகம் ஈர்த்த படைப்பு பற்றி கூறுங்கள்?
திருக்கார்த்தியல் தொகுப்பில் உள்ள கதைகள். காரணம் என்னுடைய வாழ்வியல் சார்ந்த அனுபவங்களில் இருந்து பல கதைகளை அதில் எழுதியிருக்கிறேன்.
* இலக்கிய துறையில், உங்களுக்கு கிடைத்த விருது, கவுரவங்களை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்?
வடசென்னை தமிழ்ச் சங்க விருது, அசோகமித்ரன் விருது, படைப்பு விருது, சௌமா விருது, சுஜாதா விருது, அன்றில் விருது, சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்ட விருது, விஜயா விருது, சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது என 14 பல்வேறு விருதுகளை என்னுடைய திருக்கார்த்தியல், ராஜவனம், புலிக்குத்தி புத்தகங்கள் பெற்றுள்ளன.
* உங்களுடைய லட்சியம்?
லட்சம் என்று எதுவும் இல்லை. இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட வேண்டும். அதன் போக்கிலேயே ரசிக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் இருக்கிறது. நம் வாழ்க்கையை நாம் சரியாக வாழ்ந்தால் நம் லட்சியங்கள் அதற்குறிய இலக்கை நோக்கி சென்றடையும் வெற்றி பெறும்.
* அடுத்தடுத்த படைப்புகள் பற்றி சொல்லுங்கள்?
எப்போதும் போல கன்னியாகுமரி நிலப்பரப்பு சார்ந்த கதைகள் எழுதவேண்டும். குறிப்பாக ஒரு 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை பின்னணியாக வைத்து எழுதுவதற்கான திட்டம் இருக்கிறது. கடல் பற்றி எழுதுவதற்கான விஷயங்களில் இப்போது என்னை தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
* இலக்கிய உலகில் தாக்குப் பிடிப்பது கடினம் என்ற கருத்து உண்டு. அது உண்மையா? நீங்கள் அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?
ஆம் அது உண்மை தான். எழுத்தாளர் முகில் அவர்களுடைய ஆலோசனை தான் நான் முழுநேர எழுத்தாளராவதற்கு பெரிய ஊக்கமாக இருந்தது. இப்போதும் அவரோடு சேர்ந்து பயணிக்கிறேன். எழுத்துப் பணியிலும் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன். நமக்கான சரியான வழிகாட்டி அமைந்தால் நம்முடைய பயணமும் சரியாக இருக்கும். எனக்கு எழுத்தாளர் முகில் சரியான வழிகாட்டியாக அமைந்திருக்கிறார்.
*ஒரு நாவல் அல்லது சிறுகதையை எழுதுவதற்கு முன் எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள்?
நான் எப்போதும் கதைகள், நாவல் எழுதிக் கொண்டிருப்பது இல்லை. ஒரு கரு என்னிடம் வந்து சேரும் வரை காத்திருப்பேன். அந்தக் கரு எப்படி கதையாக எனக்குள் விசாலமடைகிறது என பார்த்து அதன் பிறகு தான் எழுதத் தொடங்குவேன். மற்றபடி எப்போதும் எழுதுவது கிடையாது. நிறைய வாசிப்பேன். படம் பார்ப்பேன். அதைவிட நிறைய காமெடி வீடியோக்கள் பார்த்து சிரிப்பேன்.
* எல்லோரும் கதை, கவிதை எழுதுகிறார்கள். ஆனால், அந்த எழுத்து ஆர்வத்தை விருது பெறும் அளவிற்கு உருமாற்றி கொள்வது எப்படி? ‘எக்ஸ்பெர்ட்’ அனுபவங்களை பகிருங்கள்?
நம்முடைய படைப்புகள் மக்களிடம் சரியாக போய் சேர்ந்தாலே அதற்கான அங்கீகாரங்கள் கிடைக்கத் தொடங்கிவிடும். எழுத வேண்டும். நன்றாக எழுத வேண்டும். தொடர்ச்சியாக எழுத வேண்டும். வாசகர்களுக்கு பிடிக்கும் வகையில் எழுத வேண்டும் என்று நினைத்து செயல்பட்டாலே போதும் அங்கீகாரங்கள் நம்மை நோக்கி அணிவகுக்கத் தொடங்கிவிடும்.