ராம் தங்கம் அவர்கள் ஊர் சுற்றும் அளவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. “கடவுளின் தேசத்தில்” அவர் தனியாகவும், நண்பர்களோடும் கேரளாவில் சில இடங்களுக்குச் சென்ற பயணத்தை, கண்களால் கண்டவற்றை, இயற்கையின் அழகை அற்புதமாக, அழகாகச் சொல்கையில் நாமும் அவரோடு சேர்ந்து பயணப்படுவது போல் இருக்கிறது.
எனக்கு எல்லாமே புதுச் செய்திகள் தாம். மறையூர் முனியறைகள், சந்தனக் காடுகள், அவைகள் பற்றின செய்திகள், நடப்பு நிகழ்வுகள், வைக்கம் போராட்டம் நடத்த மகாதேவர் கோவில் பற்றிய வர்ணனை, சகாவு கிருஷ்ணப்பிள்ளை படித்த பள்ளியைக் கண்டது, பெரியார் அருங்காட்சியகம், வைக்கம் விஜயலட்சுமியைக் கண்டது, அடிகோலி, தோட்ட மலை, கோதையாறு, மாஹி, அங்கே பூங்காவில் முகுந்தன் அவர்களின் மய்யக் கரையோரம் நாவலின் முக்கிய நிகழ்வுகளைச் சிற்பமாகச் செய்து வைத்திருப்பது என அவர் சென்ற இடங்களின் பழைய வரலாறு, இன்றைய நிலை, பயணத்தின் போது நடந்தவை, உண்டவை என முன்னால் அமர்ந்து கதை கேட்பது போல் இருக்கிறது. என்றேனும் இந்த இடங்களெல்லாம் நேரில் காணும் அதிர்ஷ்டம் கிடைக்கவேண்டும்.