ஊர் சுற்றிப் பறவை – சுகந்தி

 ராம் தங்கம் தான் பிறந்த மண்ணின் சிறப்பை  உலகிற்கு பறை சாற்றவே அருமையான நூலாக  கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க வைத்திருக்கிறார். புதிதாக பார்க்க நினைப்பவர்கள் இதை  வழிகாட்டியாக வைத்துக் கொண்டே சுற்றி விட்டு வரலாம். அந்த ஊரின் ஆளுமைகள் மறக்க முடியாத  சரித்திர புகழ் வாய்ந்த இடங்கள், கல்லறைகள், ஒரு பெரிய எழுத்தாளர்களின் அணிவகுப்பையே காணமுடிகிறது.
அணைகள்,  புகழ் பெற்ற கோயில்கள் , ஆறுகள் பிரமிப்பையும் உற்சாகத்தையும் தரும்  கடல் என சுற்றுலாவை முடித்து  பல வகை பாயாசத்துடன் விருந்தும் முடித்து  வரலாம்.  சிறப்பான தொய்வில்லாமல் இழுத்தும் செல்லும்  செய்திகள். இலகுவான எழுத்து நடை. நண்பர்கள் குழுவாக  சென்று பார்ப்பதுப் போல்  கதையைப் போல அவர்களையே கேள்வியும் கேட்க வைத்து பதிலாக  தகவல்களை சொல்லும் உத்தியே  நன்றாக இருக்கிறது. ஐந்திணைகளில் பாலையைத் தவிர‌மீதி நான்கு திணைகளையும் உள்ளடக்கிய ஊராக சிறப்பு வாய்ந்தது. அனைத்து  கோயில்களின் தலவரலாற்றையும் , ஆறுகளின் சிறப்பும், அதன் பாசன எல்லைகளின் அளவும், அணைகளும் அதன் வரலாறுகளும் நிறையத் தகவல்கள்  நிறைந்திருக்கிறது.
  ஒரு பனைமரம் வேர் முதல் நுனிவரை எதுவுமே வீண்இல்லை அது நிறைந்திருக்கும் ஊர். சேர, சோழ, பாண்டியர்களை ஒரே இடத்தில் ஔவையார் வரவைத்த  இசக்கியம்மன் கோயில், ஔவையார் கோயில், குமரகுருபரர் கோவில், தோவாளை பூச்சந்தை, சுப்ரமணியர் கோயில்,  ( தோவாளைக்கு பெயர் காரணம் தோள்-வாள் பேச்சுவழக்கில் தோவாளை ஆனது) கைதிகளால் எழுப்பபட்ட தேவாலயம், நாகராஜா கோயில் இதில் மண்தான் பிரசாதம், சதாவதானி செய்குதம்பி நினைவிடம், புனித சவேரியார் ஆலயம், சுசீந்தரம் தாணுமாலயன் கோயிலின் வரலாறு, மயிலாடி கற்சிற்பங்கள், மருந்து வாழ் மலை,பல வகையான பழ வகைகளை கொண்ட அரசு பழத் தோட்டம், பகவதியம்மன் கோயில் அம்மனின் மூக்குத்தி வெளிச்சம் கலங்கரை விளக்கம் என நினைத்து கப்பல்கள் தடுமாறிவிடவே கிழக்கு வாசலை மூடியே வைத்திருக்கிறார்கள்.
  விவேகானந்தர் பாறை அவர் எப்படி அங்கு வந்தார் என்ற தகவல், நாகர் கோவில் நகராட்சிப் பூங்காவில் நூலகம், குமரிதந்தை நேசமணி மண்டபம்,  பத்்பநாபபுரம் அரண்மனையை சுற்றி விட்டு வெள்ளைக்காரச் சாமியை பற்றியத் தகவல் படிக்காதவனுக்கு சாமிவந்தாக்கூட ஆங்கிலத்தில் பேசுமாம். மாத்தூர் தொட்டிப்பாலத்தின் வரலாறு,  ரோஜாவும் அண்ணாசியும் வேலியாக பயிரிடும் தகவல் ஆச்சர்யம். பெருஞ்சாணி அணை.அதனைப் பற்றியத் தகவல்கள், பள்ளி வாசல், திற்பரப்பு அருவி , மகா தேவர் கோவில்,சாதி பாகுபாடின்றி சமபந்தி  விருந்தாக கஞ்சித்தானம் நடக்கும் பள்ளியாடி, சிதறால் மலை, காளிக்கோயில் காணிகள் வாழும் இடம் என கன்னியாக்குமரியின்  முக்கியமான கடல் பகுதியையும் அதன் சிறப்பம்சமான ஆதவனின் உதயமும் ,அஸ்தமனமும் என நிறைவாக சுற்றிவிட்டு திரும்பலாம்.
   இடையில் எழுத்தாளர் பொன்னீலனை சந்திக்கிறார்கள். உண்மையான சந்திப்பா? கட்டுரையின்  சுவாரஸ்யம் கூடுவதற்காகவா? எப்படியிருந்தாலும் அவருடனான உரையாடல்கள் அருமை.
-சுகந்தி
ஊர் சுற்றிப் பறவை
ஆசிரியர்:ராம் தங்கம்
பக்கம்:160
விலை:199
வெளியீடு: வானவில் புத்தகாலயம்

About the author

ramthangam

Add comment

By ramthangam