‘The Arteria’ மலையாள இதழ் நேர்காணல்

மலையாள செய்தி இணையதளமான ஆத்மா ஆன்லைனின் the Arteria web weeklyல் வெளிவந்த நேர்காணல்.

1.கேந்திர சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற உங்களின் திருக்கார்த்தியல் புத்தகத்தை ஏன் வாசிக்க வேண்டும்?

எல்லாரிடமும் ஒரு கேள்வி இருக்கும் ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்? என்கிறதுதான். ஏன் புத்தகம் வாசிக்கிற நேரத்த வேற எதிலாவது செலவிடலாமே? என பலருக்கு தோன்றும். பலபேர் அது போலவும் தங்களுடைய நேரத்தை செலவு செய்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இலக்கியம் வாசித்த மனிதன் இந்த சமூகத்தில் இருந்து இன்னும் மாறுபட்டவனாகத்தான் இருப்பான். எனக்கு தெரிந்தவரை இலக்கியம் வாசித்தவர்கள் பெரும் குற்றவாளிகளாக மாறவில்லை. இலக்கியம் வாசிப்பவர்கள் இந்த சமூகத்தில் தனித்துவமான மனிதர்களாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புத்தகம் ஒரு வாழ்வியலை, ஒரு மனிதத்தை, நம்மை சுற்றியிருக்கும் சமூகத்தை நேசிப்பதை, உள்ளார்ந்த உளவியலை, நமக்கான சிந்தனையை என உள்ளேயும் வெளியேயும் பல்வேறு கோணங்களை நமக்குள்ளாகவே உருவாக்கும். அதைதான் என்னுடைய திருக்கார்த்தியலும் செய்கிறது. இதில் பல சிறுவர்களின் வாழ்வியலும், என்னுடைய நாஞ்சில்நாட்டின், தென் திருவிதாங்கூர் பகுதியினுடைய நிலப்பரப்பின் கதைகளும் யதார்த்த மனிதர்களின் வாழ்வியலும் அடங்கியிருக்கிறது. அதனால் திருக்கார்த்தியலை வாசிக்கலாம்.

2.உங்களுக்கு யுவபுரஷ்கார் விருது கிடைத்து கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. விருது பெறுவதற்கு முன்பும் அதற்கு பிறகும் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கிறது?

நான் எந்த இயக்கத்தையோ எந்த குழுவையோ சாராதவன். முழுக்க முழுக்க என்னையும் வாசகர்களையும் மட்டுமே நம்பி எழுதக்கூடிய ஒரு எழுத்தாளன். இதற்கு முன்பு ஓரளவு தமிழிலக்கிய சூழலில் அறியப்பட்டிருந்தாலும் இப்போது அதிகமான கவனம் கிடைத்திருக்கிறது. என்னுடைய புத்தகங்கள் அதிகமாக விற்பனை ஆகிறது. அது தவிர்த்து பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. நான் எளிய மனிதர்களின் வாழ்க்கையை எழுதுகிற ஒரு எழுத்தாளன். யதார்த்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதன். பெரிய மாற்றங்கள் வந்தாலும் அதை எப்படி என்னால் எதிர்கொள்வது? அதை கையாள்வது என்பது எனக்கு தெரியாது.

3.‘கடவுளின் தேசத்தில்’ புத்தகத்தில் உங்கள் கேரள பயணத்தை பற்றி எழுதி இருப்பீர்கள். கேரளாவை பற்றியும், கேரள மக்கள் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கேரளாவில் உங்களுக்கு மிகப் பிடித்த ஊர் எது?

சின்ன வயதிலிருந்தே பயணம் செய்வது ரொம்ப பிடிக்கும். கன்னியாகுமரி ஜில்லாவுக்கு வெளியே போகும்போது என் பேச்சை வைத்து மலையாளியா என்று கேட்பார்கள். ஆனால் கேரளாவிற்குள் போகும்போது பாண்டிக்காரனா என்று கேட்பார்கள். இந்த ரெண்டுக்குமே இடையில் வாழக்கூடிய கன்னியாகுமரி ஜில்லாவின் மகன் நான். இப்போது கன்னியாகுமரியாக இருந்தாலும் இது முன்னொரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தென்திருவிதாங்கூர் என்று அழைக்கப்பட்டது. உணவுப் பழக்கங்கள். பருவமழை என கேரள நிலப்பரப்புக்கும் என் நிலப்பரப்புக்கும் பெரிய ஒற்றுமை உண்டு.

கேரள மக்கள் எழுத்தாளர்களை மிகவும் மதிக்கிறவர்கள். நான் பலமுறை சென்ற போதும் எழுத்தாளர் என்பதால் அங்கு கிடைத்த சில சலுகைகள், அவர்களின் அன்பு எல்லாமே என்னை ரொம்பவும் ஆச்சரியப்பட வைத்தது. தமிழ்நாட்டில் எழுத்தாளர் என்று சொன்னால் டாக்குமென்ட் எழுதுகிறவரா? என்று கேட்பார்கள். அதையே ஆங்கிலத்தில் ரைட்டர் என்று சொன்னால், எந்த போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் என கேட்பார்கள். இவ்வளவுதான் தமிழகத்தில் வெகுஜன மக்களிடையே இருக்கும் எழுத்தாளர் குறித்த பார்வை. கேரளாவில் அப்படி இல்லை. மலையாளிகள் எழுத்தாளர்களை, இலக்கியத்தை கொண்டாடுகிற அற்புதமான நிலத்தை சேர்ந்தவர்கள். எனக்கு கேந்திர சாகித்ய அகாடமி விருது கிடைத்த போது, மனோரமா, மாத்ருபூமி, மாத்யமம், ஆத்மா ஆன்லைன் என பல்வேறு மலையாள நாளிதழ்கள் அந்த செய்தியை வெளியிட்டது. ஒரு தமிழ் எழுத்தாளருக்கு விருது கிடைத்ததற்கு மலையாளத்தில் செய்தி வந்தது அதுதான் முதல் முறையாக இருக்குமென்று நினைக்கிறேன். கேரளத்தில் எனக்கு எல்லா ஊர்களும் பிடிக்கும். முக்கியமாக போர்ட் கொச்சி, மூணாறு.

4. மலையாள இலக்கியத்தில் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்?

கேரள நிலப்பரப்பை என்னால் எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடியும். அந்த கதைகளுக்குள் நான் வாழ முடியும். என்னைப் பொருத்தி பார்க்க முடியும். மிகச் சிறப்பான மலையாள இலக்கியங்கள் தமிழுக்கு மொழிபெயர்ப்பாகி வந்திருக்கிறது. தகழி சிவசங்கரப் பிள்ளை, எம் டி. வாசுதேவன் நாயர், பஷீர், முகுந்தன், மனோஜ் குரூர், கே.ஆர். மீரா, சந்தோஷ் எச்சிக்கானம், அசோகன் செருவில், கல்பட்டா நாராயணன், லலிதாம்பிகா அந்தர்ஜனம், கமலா தாஸ் என எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பட்டியலை சொல்லலாம்.

5. உங்கள் திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்கு எத்தனையோ பெயர் வைத்திருக்கலாம். ஏன் உங்கள் முதல் சிறுகதையின் பெயரையே தலைப்பாக வைத்தீர்கள்?

மொத்தம் 11 கதைகளில் எல்லா தலைப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் அடிக்கடி பயன்படுத்துக்கிற வார்த்தையாகவே இருந்தது. ஆனால் திருக்கார்த்தியல் ஒரு வட்டார வழக்கு சொல். எங்கள் பகுதியில் கார்த்திகை மாதத்து தீபத்திருநாளை திருக்கார்த்தியல் என்று சொல்லுவோம். அதைத் தலைப்பாக வைத்தால் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியது. திடீரென யாராவது எடுத்து பார்த்தால் திருக்கார்த்தியல் என்றால் என்ன என்று கூட யோசிக்கலாம். அதற்காக அப்படி வைத்திருந்தேன்.

6. திருக்கார்த்தியல், டாக்டர் அக்கா, வெளிச்சம், உடற்றும் பசி, கடந்து போகும் என பல கதைகள் வறுமையில் கஷ்டப்படுகிற சிறுவர்களைப் பற்றியது. இவையெல்லாம் உங்கள் கற்பனையா? நீங்க கேள்விப்பட்ட கதைகளா? அல்லது உங்கள் அனுபவமா?

வறுமை என்பது புனையப்படாத எதார்த்தமான உலகம். சிறுவர்களின் வறுமை என்பது கொடூரமானது. ஏழை சிறுவர்களுக்கான பெரிய எதிர்பார்ப்பு என்பது தன் பசியை போக்க வேண்டும் என்பது மட்டும் தான். அவ்வையார் ‘கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்று பாடி இருக்கிறார். சிறுவர்களின் உலகம் அற்புதமானது. அதற்குள் வறுமை இருந்தால் அவர்களுக்கு உளவியல் சிக்கல் ஏற்படும். அகம் புறம் வாழ்க்கை முறை மாறும். அது பற்றிய விஷயங்களை தான் நான் எழுதியிருக்கிறேன். இதில் சில கற்பனை கதாபாத்திரங்கள். நான் கேள்விப்பட்ட, பார்த்த சம்பவங்களோடு என்னுடைய அனுபவங்களும் சேர்ந்தே எழுதி இருக்கிறேன்.

7. திருக்கார்த்தியல் செந்தமிழ் யார்? உங்களுடைய நண்பனா? அவனது அழுகையும் கோபமும் கதை முடிவில் என்னையும் பிடித்துக் கொண்டது.

செந்தமிழ் எல்லோருக்குள்ளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்திருக்கிறான். நான் கதை எழுதியதால் இப்போது நீங்கள் கேட்கிறீர்கள். நீங்களே யோசித்து பாருங்கள். உங்களுக்குள்ளும் ஒரு செந்தமிழ் இருந்திருப்பான். நீங்களும் ஒரு வேளை செந்தமிழுக்கு நண்பனாக இருந்திருப்பீர்கள். அதுதான் அந்த கதையோடு உங்களை பொருத்தி பார்க்க வைத்திருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.

8. உங்கள் வாழ்க்கையில் யாராவது டாக்டர் அக்கா இருந்திருக்கிறார்களா?

நிச்சயமாக இருந்திருக்கிறார். சிறுவர்களுக்கு தன்னை நேசிக்கும் பெரியவர்களை எப்போதும் பிடிக்கும். அது போல எல்லோருக்கும் பிடித்தமான ஒரு டீச்சரோ அல்லது ஒரு அக்காவோ இருந்திருப்பார்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் பால்ய காலத்தியல் நேசத்தவர்களை, என்னை நேசத்தவர்களை நான் திரும்ப சென்று சந்திப்பது இல்லை. அது எல்லாமே ஒரு காலகட்டத்தின் நினைவுகள். அந்த நினைவுகளை விட்டு இருவருமே ரொம்ப தூரம் போய் இருப்போம். வெகு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் அவர்களை சந்தித்து அதே நினைவுகளை கொண்டு வந்து பொருத்திப் பார்க்கும்போது அந்த அன்பில் நீண்ட இடைவெளி உருவாகி இருக்கும். அதை நம் மனது ஏற்றுக் கொள்ளாது. அதற்கு பதிலாக அவர்களை தேடாமல் அவர்களுடைய நினைவுகளிலேயே இருந்து கொள்வதே நமக்கு நல்லது.

9. டாக்டர் அக்கா கதையிலும் சரி, ஊழிற்பெருவலி கதையிலும் சரி போலீசாரின் கொடுமையால் சீரழிந்த பெண்கள் இருக்கிறார்கள். இது உங்கள் கற்பனை கதாபாத்திரங்களா? இல்லை நீங்கள் பார்த்த நபர்களா? போலீஸ் துறை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

இந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நான் செவிவழியாக கேட்ட செய்திகளும், நான் சந்தித்த ஒரு சில நபர்களுடைய வாழ்க்கையினுடைய தழுவல்களும்தான். இங்கே எல்லா மனிதர்களும் நல்லவர்களாக இல்லை. அதே போலத்தான் போலீசிலும். எல்லாரும் நல்லவர்களாக பணி செய்ய வேண்டும் என்று தொடங்குகிறார்கள். பிறகு அந்த சூழல் அவர்களை மாற்றி விடுகிறது. அதில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.

10. முற்பகல் செய்யின் கதையிலும் சரி, பெரியநாடார் வீடு கதையிலும் சரி இசக்கி எனும் பெயர் வரும். இந்த இரு இசக்கிகளும் ஒரே இசக்கி தானா? இல்லை வெவ்வேறு இசக்கிகளா. ஏதோ ஒரு காரணத்துக்காக கொல்லப்பட்டவர்கள் சிறு தெய்வங்கள் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள் அல்லவா. இதுபோல் எத்தனை சிறு தெய்வங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.?

இசக்கியை மலையாளத்தில் யக்‌ஷி என்று சொல்வார்கள். மக்களுக்கு பெருந்தெய்வ வழிபாட்டுக்கு மறுக்கப்பட்டதும் பல நாடன் தெய்வங்கள் முளைக்கத் தொடங்கின. முன்னோர்கள் அல்லது என் கதைகளில் வருவது போல கொல்லப்பட்டவர்கள் என பல இசக்கிகள் இன்று வரை மக்கள் வாழ்வியலோடு தெய்வங்களாக கலந்திருக்கிறார்கள். இந்த இரண்டு கதைகளில் இருக்கும் இசக்கிகளும் வேறு வேறு தான். இதைப் போன்ற எக்கச்சக்கமான இசக்கிகளை கிராமப்புறங்களில் பார்க்க முடியும். நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நிறைய கோவில்களுக்கும் சென்று இருக்கிறேன்.

11. பெரியநாடார் வீடு கதையில், தீவெட்டி கொள்ளையர்களைப் பற்றியும், மின்மினிப்பூச்சி கொள்ளையர்களைப் பற்றியும் குறிப்பிட்டு இருப்பீர்கள். இவர்களை பற்றி எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?

தீவெட்டி கொள்ளையர்கள் பல காலமாக இதற்கு முந்தின தலைமுறை வரை இருந்தவர்கள். அதை நிறைய கதைகள் வழியாகவும், செவிவழியாவும் கேட்டிருக்கிறேன். ஆனால் மின்மினி பூச்சி கொள்ளையர்கள் என்னுடைய கற்பனை. எந்த வெளிச்சமும் இல்லாத அறைக்குள் ஒரு மின்மினி பூச்சி வரும்போது பிரகாசமாகிவிடுகிறது. அதே அறைக்குள் இருபதுமுப்பது மின்மினி பூச்சிகள் வந்தால் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என கற்பனையில் யோசித்தேன். அதை கதையில் சேர்த்து எழுதினேன். அது பலருக்கும் பிடித்திருக்கிறது. நிறைய பேர் அது குறித்து கேட்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க அது என்னுடைய கற்பனை.

12. நீங்கள் ஏதேனும் பேக்கரியில் வேலை செய்திருக்கிறீர்களா? மிக கனகச்சிதமாக பேக்கரி குடோன் பற்றி வெளிச்சம் எனும் கதையில் சொல்லியிருக்கிறீர்கள். அது எப்படி?

ஆமாம் நான் வேலை செய்திருக்கிறேன். வெளிச்சம் கதையில் வருவது என்னுடைய சிறுவயது அனுபவங்கள் தான். அதில் வரும் பாட்டி என்னுடைய பாட்டிதான். கொஞ்சம் புனைவு சேர்த்து என்னுடைய அனுபவமும் கலந்து எழுதப்பட்ட கதை. அதை நினைக்கும் போது இப்பவும் நாசியில் பேக்கரியின் மணம் எழுகிறது. அந்த கதை நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் பாடமாகவும் இருந்தது.

13. பானி கதாபாத்திரம் மாதிரி யாராவது உங்கள் வாழ்க்கையில் இருந்தார்களா? வடநாட்டில் இருந்து வருகிறவர்கள் தங்கள் பாவங்களோடு மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும் ராமேஸ்வரத்திலும் கன்னியாகுமரியிலும் தொலைக்கிறது உண்மையா?

பானி என்கிறது நிஜ கதாபாத்திரம்தான். அதில் கொஞ்சம் புனைவு கலந்து எழுதியிருப்பேன். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது பானி என்ற ஒரு மனநோயாளியைப் பார்த்திருக்கிறேன். அவன் எல்லோரிடமும் பானி என்றுதான் கேட்பான். அதனால் அவனது பெயரும் பானி என்று மாறிப்போனது. வடஇந்தியாவில் இருக்கும் மனநோயாளிகள் எப்படி கன்னியாகுமரிக்கு வந்து விடுகிறார்கள் என்கிற ஆய்வுகள் தேவைப்படுகிறது. நிறைய பேரை ரயில் மூலம் வந்து கொண்டு விடுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வடஇந்திய மனநோயாளிகளை கன்னியாகுமரி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நிறைய பார்த்திருக்கிறேன்.

14. காணி வாத்தியார் கதையில் வருகிற தச்சமலைக்கு போயிருக்கிறீர்களா? அந்த கதையில் வருகிற வர்ணனைகள் எல்லாம் ரொம்ப கனகச்சிதமாக இருக்கும். இந்த கதையை மட்டும் வைத்து அந்த ஊருக்கு சரியாக போய்விடலாம் என்று தோன்றுகிறது. அது எப்படி?

காணி வாத்தியார் கதையும் ஒரு உண்மை சம்பவம் தான். அப்படி ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் முரளிதரன். அந்த கதையில் இருப்பது முழுக்க முழுக்க உண்மையான சம்பவங்களை கொஞ்சம் புனைவு கலந்து எழுதியிருப்பேன். ஊர்ப்பெயரும் மாற்றி எழுதியிருப்பேன். மற்றபடி அந்த ஊர் வர்ணனைகள் நான் கண்ட காட்சிகள் தான். நான் விகடனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை அவரை நேர்காணல் செய்ய நேரிட்டது. அவர் சொன்ன விஷயங்கள் அப்போது இருந்தே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு பிறகு இரண்டு வருடம் கழித்து அந்த கதையை எழுதினேன்.

15. கடந்து போகும் என்கிற கடைசி கதையை வாசித்தபோது என் கை, கால் எல்லாம் ஊர்கிற மாதிரி இருந்தது. வாசிக்கும் போது கண்ணீர் என்னை அறியாமல் வெளியே வந்தது. அது பஷீரின் ‘பால்ய காலசகி’ கிளைமாக்ஸ் காட்சியை எனக்கு ஞாபகப்படுத்தியது. அதை ஏன் கடைசியாக வைத்தீர்கள்?

எப்போது ஒரு நல்லகதை வாசிக்கிறோமோ அது இன்னொரு நல்லகதையை ஞாபகப்படுத்தும் என்று சொல்வார்கள். அது போல தான் உங்களுக்கு நடந்திருக்கிறது. நான் மொத்தமாக திருக்கார்த்தியல் புத்தகத்தை பிழைத்திருத்தும் போது கடைசி கதையில் என்னையறியாமலே என் கண்களில் நீர் சுரந்து கதை பேப்பரில் சொட்டத் தொடங்கியது. அதுவரை எந்த கதைக்கும் எனக்கு கண்ணீர் வரவில்லை. அப்போதுதான் இந்த கதையை கடைசி கதையாக வைத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது.

அதுவும் என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. ஒட்டு மொத்தமாக இந்த கதைகளில் என்னுடைய சின்ன பிராயத்து நினைவுகள் எழுதவைத்தது. இப்போது நினைத்தாலும் கையில் அரிப்பு ஏற்படும். என் எல்லா நினைவுகளையும் கடத்துவதற்காகவும் அழிப்பதற்காகவும் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தக் கடைசி கதையில் அவனுக்கு என்ன ஆயிற்று என எல்லோரும் யோசித்து கண்ணீர் வர வைத்துவிடும் என்பதால் கடைசியாக வைத்தேன். முதலிலேயே வைத்திருந்தால் இந்த கதையோடு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு போயிருப்பார்கள் என நினைக்கிறேன்.

16. யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட போது எல்லா பத்திரிக்கைகளும் திரும்ப திரும்ப கேட்ட கேள்வி என்ன?

இந்த விருது கிடைத்தது உங்களுக்கு எப்படி இருக்கிறது. உங்கள் எதிர்கால திட்டம் என்ன? இளைஞர்களுக்கு என்ன சொல்லப் போறீங்க? என்று தான் கேட்டார்கள். விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து எனக்கு தொடர்ச்சியாக ஃபோன் கால்கள் வந்துகொண்டே இருந்தது. கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு மேலாக இரவும் பகலும் ஃபோன் பேசிக்கொண்டு மெயில் அனுப்பிக்கொண்டு, வாழ்த்து தெரிவித்த எல்லோருக்கும் பதில் அனுப்பிக் கொண்டிருந்தேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு அப்போது அதை எப்படி சந்தோஷமாக கொண்டாடுவது என்கிற மனநிலை இல்லை. தொடர்ந்து பேசி ரொம்ப சோர்வாக இருந்தேன்.

17. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் யார்? அவர்களை நீங்கள் பத்திரிகையில் பணிபுரியும் போது நேர்காணல் செய்திருக்கிறீர்களா?

எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை நேர்காணல் செய்திருக்கிறேன். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் நாஞ்சில்நாடன், பொன்னீலன், கண்மணி குணசேகரன், ஆ. மாதவன். பத்திரிகை பணி இல்லாமல் ஓர் இலக்கிய இதழுக்காக கவிஞர் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களை நேர்காணல் செய்திருக்கிறேன். மலையாள இலக்கிய உலகில் அவர் நன்கு அறியப்பட்ட மொழிபெயர்ப்பாளர். தமிழில் சுமார் 70 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவர். சச்சிதானந்தன், எம்.டி. வாசுதேவன் நாயர், லலிதாம்பிகா அந்தர்ஜனம், கே.ஆர். மீரா, பிரபா வர்மா என பலரது படைப்புகளையும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர். அவரைத் தான் கடைசியாக நேர்காணல் செய்தேன். இனி யாரையும் நேர்காணல் செய்யும் திட்டம் இப்போதுவரை இல்லை.

18. எழுத்தாளராய் இருப்பதில் உள்ள நல்லது என்ன? கெட்டது என்ன?

நல்லது என்றால் அது வாசகர்களின் அன்புதான். சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்களுக்கு இலவச பாஸ் கொடுப்பார்கள். அதை வைத்து பத்து நாட்களும் இலவசமாக உள்ளே சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம். கெட்டதை பத்துப் பக்கத்துக்கு சொல்லலாம். நான் ஏற்கனவே சொன்னது போல தமிழ்நாட்டில் வெகுஜன மக்களிடம் எழுத்தாளர் என்பதற்கு பெரிய மரியாதையெல்லாம் ஒன்றும் கிடையாது. எழுதி எதை சம்பாதிக்க முடியும். சோற்றுக்கு வழி இருக்குமா? எவ்வளவு புத்தகம் விற்று விடும்? விற்ற காசு கிடைக்குமா? என்றெல்லாம் தான் மக்களுக்கு பெரிய யோசனை இருக்கும். அதனால் ஒரு எழுத்தாளனாக தமிழில் வாழ்வது என்பது மிகப்பெரிய சோகமான கதைதான். எழுத்தாளன் என்றால் திருமணத்துக்கு பெண் தரமாட்டார்கள். எழுத்தை மட்டும் நம்பி வாழமுடியாது, ஜெயிக்க முடியாது என்று தீர்க்கமான நம்பிக்கை தமிழ்நாட்டில் உண்டு. புத்தகத்தையே இலவசமாக கொடுக்க வேண்டும் என்றுதான் பலரும் நினைப்பார்கள். நிறைய வாசகர்கள் படிக்கிற பெருமையே எழுத்தாளருக்கு போதும் என நினைப்பார்கள். பெரும் புரவலர்கள் பணத்தால் எழுத்தாளர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிடலாமா என்றும் யோசிப்பார்கள். இப்படி நிறைய கெடுதல் தான் இருக்கிறது. மற்றபடி பிரபலமடைந்த மிகப்பெரிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு இப்பொழுது சலுகைகள் செய்கிறது. வீடு கொடுக்கிறது. அது எல்லாருக்கும் கிடைக்காது. வருங்காலத்திலாவது எழுத்தாளருக்கான மரியாதை கிடைத்தால் போதும் என்று நினைக்கிறேன்.

19. கேந்திர சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்கார் கிடைத்த உங்களின் திருக்கார்த்தியல் புத்தகம் மலையாளத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறதா?

மலையாளத்தில் சீக்கிரம் வெளிவந்துவிடும் என்று நினைக்கிறேன். டிசி புக்ஸ் சார்பில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கிறது. திருக்கார்த்தியல் புத்தகத்தில் உள்ள கடந்து போகும் கதை தேசாபிமானி இதழில் மொழிபெயர்க்கப்பட்டது. அதை வாசித்த மலையாள வாசகர்கள் நிறைய பேர் கதை குறித்த தங்களுடைய விமர்சனங்களையும் அனுப்பியிருந்தார்கள். உண்மையில். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மாத்யமம் வார இதழில் என்னுடைய திருக்கார்த்தியல் கதை வெளிவர இருக்கிறது. விரைவில் என்னுடைய எல்லாப் புத்தகங்களும் மலையாளத்துக்கு வந்து சேரும் என்று நம்புகிறேன்.

20. தமிழ்ப்புத்தகங்கள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பது குறைவாக இருக்கிறது. இது அதிகரிக்க வாய்ப்புள்ளதா?

மலையாளத்தை கற்றுக்கொண்ட பலரும் தான் இங்கு மலையாளத்தில் இருந்து தமிழுக்கு புத்தகங்களை மொழிபெயர்த்து வருகிறார்கள். ஆனால் இதே எண்ணம் கொண்டவர்கள் கேரளாவில் அதிகரிக்க வேண்டும். தமிழ் கற்றுக் கொண்டவர்கள் இந்த பணியை செய்ய வேண்டும். இப்போது கொஞ்சம் பேர்தான் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இது அதிகரிக்கும்போது இரு மொழிகளுக்குமான இலக்கிய உறவுப் பாலம் இன்னும் மேம்படும் என்று நினைக்கிறேன். இப்போதுதான் எஸ்.ராமகிருஷ்ணன், பெருமாள் முருகன் போன்ற பலரும் மலையாளத்துக்கு அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால் தகழி, பஷீர், கமலாதாஸ், சச்சிதானந்தன் என மலையாள எழுத்தாளர்கள் இருபதுமுப்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு வந்துவிட்டார்கள். அந்த காலகட்டத்தில் தமிழில் எழுதிய பலரும் மலையாளத்துக்கு போனார்களா? அவர்கள் அங்கு அறியப்பட்டார்களா? என்பது பெரிய சந்தேகமாகவே இருக்கிறது.

About the author

ramthangam

Add comment

By ramthangam