திருக்கார்த்தியல் போல மனதிலிருந்து மறக்கமுடியாதது போலான யதார்த்த எழுத்துதான் இந்த நூலிலும் தொடர்ந்திருக்கிறது. ஒரு கதைசொல்லியின் நேர்த்தியோடு சொல்லப்பட்ட ஒன்பது கதைகள் இதில் உள்ளன. நூலாசிரியர் கதையில் மிகமிக எளிய மக்கள் உழைப்பால் சுரண்டப்படுவதையும் வஞ்சிக்கப்படுவதையும் தன் இயல்பான எழுத்துநடையால் புனைவுகளின்றிச் சொல்கிறார்.
பஞ்சுமிட்டாயும் பால்ராஜ் அண்ணனும் இணையதளத்தில் வெளியான கதை. அத்தனை கதைகளும் வாழ்வியல் துயரங்களோடே பயணிக்கிறது. தொகுப்பின் தலைப்புக் கொண்ட கதையாகட்டும், ‘பனங்காட்டு இசக்கி’ கதையாகட்டும் ஒருபாவமும் அறியாத பெண்களின் மரணம் நீதியற்ற கொடுமையானாலும் தெய்வமாக்கிக் காப்பாள் என்ற நம்பிக்கை இன்னும் கூட பலநூறு கிராமங்களில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
பெற்றபிள்ளையைத் தவறவிட்டு பின் கையில் கிடைத்ததை நழுவவிட்டுத் தவிக்கும் தாய்தகப்பனின் உணர்வை ஒருகதை சொன்னால் மற்றொன்றில் சிறுவன் செந்திலின் மனவியல் சிதைக்கப்படுவதெல்லாம் அவனது வாழ்க்கையே மாறிப்போவதற்கான எதிர்காலத்துயர். விளையாட்டுகளாலும் மகிழ்ச்சியாலும் மட்டுமே நிரம்பியிருக்கவேண்டிய சிறுவர்களின் உலகம் வறுமையாலும் வலிமிகு துயரார்ந்தும் அநேகச் சிக்கல்களோடும் இருப்பது வருங்காலத்தைக் கட்டமைக்கும் பொறுப்பை அச்சுறுத்துகிறது.
அதேபோன்ற மற்றொரு சிறுவன் ராஜாவின் இளம்பிராயத்து நடத்தைக்குப் பிறகான அவன் வாழ்வியல் இரண்டுதளங்களில் பயணிக்கும் வாய்ப்பு உண்டு. ஒன்று சமகாலப்புரிதலோடு அல்லது அதே பழைய வேண்டாத குணங்கள் அதிகரித்து. இந்தக் கதைகளின் ஊடாக தேவாலயத்தை வேதக்கோயில் என்ற சொல்லால் குறிப்பிடுவதே ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை இனவரைவியல் வார்த்தைப் பிரயோகம் என்பதை உணர்த்துகிறது.
பனங்காட்டு இசக்கியில் பார்வதிப்பாட்டி சொல்லும் பனை விதைப்பு தொடங்கி பதனீர், பனங்குருத்து, கருப்பட்டி, தவுணு, பனங்கிழங்கு, பனம்பழம், நுங்கு என்று வாசிக்கும்போதே நம் நாசியில் மணமணக்கிறது. கதையினூடாகவே பார்வதிப் பாட்டி சொல்லும் பனையேறிகளின் வாழ்வியலும் பனங்காடுகள் அருகிப்போன இன்றைய அரசியல் அவலமும் கண்முன் நிழலாடுகிறது.
தொகுப்பில் ‘சாதி வாக்கு’ என்ற கதை உள்ளாட்சித் தேர்தலைப் பற்றி …. இந்த நிலை இன்னும் மாறவில்லை எப்போதும் மாறாது போல. அதுதான் ‘சாதி வாக்காச்சே.
கம்யூனிஸ்ட் கதையில் கம்யூனிஸ்ட் கட்சியின் படிப்படியான வளர்ச்சியை நேர்த்தியாகப் பேரனுக்கேற்றவாறு மலையாளம் கலந்த நாஞ்சில் மொழியில் சொல்லப்பட்டாலும் வடதமிழக வாசகர்களுக்கு வாசிக்க சற்றே அலுப்பூட்டும். ஆக யதார்த்தத்தை யதார்த்த மொழிநடையில் கதைபோல எழுத்தின் வழியிலாகச் சொல்லப்பட்டிருக்கிறது இந்நூல்.
புலிக்குத்தி (சிறுகதைகள்)
ஆசிரியர் : ராம் தங்கம்
வெளியீடு : வம்சி புக்ஸ்
விலை : ரூ.150/-