ராமின் இந்த நூலும் சுவையான பயண அனுபவங்களின் பதிவு தொடர்ச்சி. குமரி மாவட்டத்தைப் பற்றிய சிறு அறிமுகத்தைச் சக பயணிகளுக்கு வினோத் கூறுவதுபோல மாதிரி அமைத்த பிறகுதான் பயணம் தொடருகிறது. பயணத்தின்போது படைப்பாளிகள், தியாகிகள், கலைஞர்கள் என பலரின் பெயர்களையும் வினோத் பட்டியலிடுகிறார். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அலுப்பில்லாமல் இடையே சிறு கிண்டலுடன் செல்லுவது இந்தப் பயணம். அலுப்பில்லாத பயணமே சுகம் தரும். அதைச் சொல்லும் முறையிலும் இது பலன் தரும். ஒருவகையில் இது எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் கதைசொல்லியின் உத்தி. சாதாரண மனிதனை மனதில் கொண்டு கேளு, நான் சொல்கிறேன் என்ற பாணியில் எழுதப்பட்டது இந்த ஊர் சுற்றிப் பறவை. ராம் மேலும் படைக்கட்டும்.
- அ.கா. பெருமாள்
எழுத்தாளர் சாவி தான் பார்த்து, ரசித்த ஊர்களை, காட்சிகளை ‘இங்கே போயிருக்கிறீர்களா?’ என்ற நூலில் அசத்தலாக தனக்கேயுரிய நகைச்சுவையுடன் அற்புதமாகக் கொடுத்திருப்பார். எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ - வாசிக்க வாசிக்க கால எந்திரத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய மெட்ராஸ்க்குள் பயணம் செய்யும் பேரனுபவத்தைத் தரக்கூடியது. அதைப்போன்ற ஒரு நல்ல முயற்சியைத்தான் சகோதரர் ராமும் மேற்கொண்டுள்ளார். குமரிக்காரர் என்பதால் தன் உயிரோடும் உணர்வோடும் கலந்துவிட்ட குமரி மாவட்டத்தைக் களமாக எடுத்துள்ளார். தன் எழுத்து ரதத்தில் நம்மை ஏற்றி ஒவ்வோர் இடமாகச் சுற்றிக் காட்டுகிறார். வெறும் தகவல்களாகச் சொல்லிக் கொண்டு போனால் வாசகனைத் தக்க வைக்க முடியாது என்பதால், தேவைக்கேற்ப ‘நாடக பாணி’யைப் புகுத்தியுள்ளார். பயணத்தில் ஓரிடத்தில் எழுத்தாளர் பொன்னீலன் வருகிறார். இப்படிப் பயணத்தில் ஆங்காங்கே ‘ஆச்சரியக் கண்ணிவெடிகளை’ விதைத்துள்ளார். அது நிச்சயம் புத்தகத்தின் சுவாரசியத்துக்குக் கைகொடுத்திருக்கிறது.
- முகில்