காடு நினைத்தவுடன் மகிழ்ச்சியையும்,சுவாரசித்தையும்,பயத்தையும் ஒருசேரத் தரக்கூடியது. காட்டைப் பற்றி எவ்வளவு வாசித்தாலும் சலிப்பே இருக்காது. இந்த நாவலும் அப்படியே. வனத்தில் நாமும் நடக்கிறோம், அதன் வாசனையை உணர்கிறோம், பயத்தில் தவிக்கிறோம், வெளிவர முடியாமல் ராஜவனத்தில் தொலைகிறோம்.
கோபால், ஆன்றோ, ராஜேஷ் மூன்று நண்பர்களுக்கும் முகளியடி மலையின்மேல் இருக்கும் நந்தியாறின் மூலத்தைக் காணவேண்டுமென்று பலநாட்களாக ஆசை. அதை நிறைவேற்றத் தொடங்குகிறது அவர்களின் வனம் நோக்கிய பயணம். தார்சாலையின் வெம்மையில் மட்டுமே நடந்து பழகிய அவர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கிறது. குளுமையும், இருட்டும், பசுமையும் நம் கண் முன்னே விரிகிறது. அதற்கிடையே எத்தனை தகவல்கள், பெயரே தெரியாத நிறைய பறவைகளையும், விலங்குகளையும் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
எதைப் பார்க்கும்போதும் அது தன் தந்தை சொன்ன விஷயங்களோடு ஒத்திருப்பதை கோபால் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறான். அந்த சமயத்தில் நமக்குத் தெரியாது அவன் தந்தை ராஜசேகர் வனக்காவலராய் இருந்ததும் அந்த வனத்தின்மேல் அவர் கொண்டிருந்த பெருங்காதலும். வட்டமலையில் இருக்கும் வன தெய்வத்தை கும்பிட்டுவிட்டால் அதன்பின், விலங்குகளாலும் வேறு எதனாலும் பயம் இல்லாமல் காரியம் நடக்கும் என்ற தந்தையின் சொற்படியே செய்கிறான் கோபால்.
யானை, பாம்பு இவற்றையெல்லாம் கடந்து சென்றாலும் புலியிடம் கோபால் மாட்டுவதும், மரணத்தை கண்முன் சந்தித்து நின்றவனை ஒன்றும் செய்யாமல் சென்ற புலிக்குப்பின்னால் இருக்கும் ஒரு கதை நெகிழ்வானது. நண்பர்களிடமிருந்து தவறி தனியே நடக்கிறான் கோபால். தன் தந்தையின் நினைவை நமக்கும் கடத்துகிறான். வனக்காவலராய் இருந்த அவரின் கண்டிப்பும், திறமையும் நிறைந்த கண்காணிப்பு, குற்றங்களைத் தடுக்கும் சாமர்த்தியம்,காணிப் பழங்குடியினரின் நலனுக்காக அவர் செய்தவை,வன விலங்குகளை பாதுகாத்தது இப்படி அனைத்தும். யானைக்குட்டியை அதன் தாயுடன் சேர்த்த தருணம் அவர் மட்டுமல்ல நாமும் கண் நனைந்தே வாசிப்போம். சவால் நிறைந்த இந்த வேலைக்காக பெரும் பதவியில் இருப்பவர்களை தைரியமாக எதிர்ப்பதும்,பணியிடமாற்றமும் இறுதியில் மரணமும் அவரின் வாழ்வு ராஜவனத்திற்காகவே முடிகிறது.
கோபால் வழி தவறிச் சேர்வது காணிப் பழங்குடியினரின் இருப்பிடத்தில். அவனுக்கு தங்க இடம் தரும் காணிக்காரர் மூலம் தந்தையின் பெருமையை உணர்ந்து நெகிழ்கிறான். இடையே அந்த மக்களின் வாழ்வியலும், சடங்குகளும் சொல்லப்பட்டிருக்கிறது. அவனின் ஆசை நிறைவேறியதா என்பதைக்கூறி முடித்திருக்கிறார் ஆசிரியர். நாஞ்சில் வட்டார வழக்கில் எழுதப்பட்ட சீக்கிரமே வாசித்துவிடக்கூடிய சிறிய நாவல்தான். ஆனால் பல தகவல்களையும், கானக சுவாரசியங்களையும் கொண்டுள்ளது ராஜவனம். அவசியம் வாசிக்கலாம்.
சுமிதா ஹரி