படைப்பு இலக்கிய குழுமத்தின் ‘தகவு’ மின்னிதழில் வெளிவந்த நேர்காணல்.
1.ராஜவனம் எனும் நாவல் எழுதக் காரணமாக இருந்தது?
இயற்கை சார்ந்த ரசனை தான் முக்கிய காரணம். அடிக்கடி காடு சார்ந்த இடங்களுக்கு பயணம் செல்வது ராஜவனம் எழுத ரொம்ப தூண்டுதலாக இருந்தது. வேறு எல்லா வாழ்க்கை முறையையும் நம்முடைய கற்பனையில் இருந்து நிறைய எழுத முடியும். ஆனால் காடு சார்ந்து அப்படி எழுத முடியாது. காடு சார்ந்து வந்த பதிவுகள் மிகக் குறைவாகத் தான் தமிழில் இருக்கிறது. அது தவிர கன்னியாகுமரி மாவட்டம் ஒரு இயற்கை வளம் சார்ந்த காடு, மலை, அருவி, விலங்குகள் என சேர்ந்து இருக்கக்கூடிய ஒரு நிலப்பரப்பு என்பதால் அதை எழுதுவதற்கு ஆர்வமும் தூண்டுதலும் இயல்பாக வந்தது.
2 ராஜவனம் எல்லா தரப்பு மக்களிடம் சென்று போய்ச் சேர்ந்த நூல். அதில் உங்களுக்கு வாசகர்களிடம் அல்லது எழுத்தாளர்களிடம் இருந்து வந்த மறக்க முடியாத பாராட்டு பற்றி கூறுங்கள்?
சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டம் குறுநாவல் போட்டிக்கு ராஜவனத்தை அனுப்பி இருந்தேன். அதன் நடுவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா இதனை முதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்திருந்தார். அதன்பிறகு அவர் என்னிடம் பேசும்போது புத்தகத்தின் சிறப்புகளைப் பற்றி சொல்லும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதன்பின் சாகித்ய அகாடமி விருது பெற்ற மொழி பெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீ அவர்களின் வீட்டில் இருந்த ராஜவனம் பிரதியை அவரது அம்மா மாதவி அவர்கள் வாசித்துவிட்டு அவருடைய மகளும் மொழிபெயர்ப்பாளரும் பதிப்பாளருமான கே.வி. ஷைலஜா அவர்களிடம், ‘இந்த புத்தகத்தை நான் படித்து விட்டேன். ரொம்ப நல்லா இருக்கு. நீ வம்சி புக்ஸ் மூலம் கொண்டு வா’ என்று சொல்லி இருக்கிறார்.
அச்சு புத்தகமாக வெளி வந்தபின் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது அது பற்றி முகநூலில் பதிவு செய்து வாழ்த்தினார். அதன்பின் அவர் அவருடைய நண்பர்களான எழுத்தாளர் எம்.எம். தீன் போன்ற பலருக்கும் புத்தகத்தைப் பற்றி சொல்லி அவர்களும் போன் செய்து வாழ்த்தினார்கள். கோத்தகிரியில் வசிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீ யக்ஷா, தன் அம்மா மூலம் ராஜவனம் நாவல் கதையைத் தெரிந்து கொண்டு போன் மூலம் முழுக்கதையையும் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள், நாஞ்சில் நாடன் அவர்கள், பவா செல்லதுரை அவர்கள், கரூரை சேர்ந்த பாட்டி லட்சுமி அம்மாள், விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சி அவர்கள் என பலரும் ராஜவனம் வாசிப்பு அனுபவத்தைச் சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார்கள். அதிகாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் போனில் தொடர்பு கொண்டு ராஜவனம் புத்தகம் குறித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. புத்தகம் குறித்து இப்போதும் தினசரி ஒருவர் பேசுகிறார்.
3. ராஜவனம் எழுத எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டீர்கள்? இதற்காக உங்கள் தயாரிப்பு என்னவாக இருந்தது?
ராஜவனம் எழுதுவதற்கு மிகக் குறைந்த நாட்கள் தான் எடுத்துக் கொண்டேன். ஆனால் அதற்கான தயாரிப்பு பணிக்கு சுமார் ஒன்றரை வருடத்தில் இருந்து இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. 2020ஆம் ஆண்டு போடப்பட்ட ஊரடங்கு காலத்தில் எழுதினேன். அந்த ஊரடங்கு காலம் இல்லாமல் இருந்திருந்தால் நான் எழுதி இருப்பேனா, புத்தகம் இப்போது வந்து இருக்குமா என்று தெரியவில்லை.
4.ராஜவனம் எழுதி முடித்ததும் உங்கள் மன நிலை எப்படி இருந்தது?
ராஜவனம் எழுதி முடித்தபின் என்பதைவிட எழுதும்போது இருந்த மனநிலை தான் முக்கியம். எழுதும்போது நடுக்காட்டில் இருப்பது போன்ற உணர்வு எனக்குள் இருந்தது. இரவும் பகலும் காட்டுக்குள்ளேயே அலைந்து கொண்டிருப்பதாக மனம் உணர்த்தும். தூக்கத்தில் கூட தலையில் மரம் முளைத்தது போலவும், யானை, புலிகள் துரத்துவது போலவும் கனவுகள் வந்தது. எல்லாவற்றையும் எழுதி முடித்ததும் காட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக என்னைத் தூக்கி வெளியே வீசியதுபோன்ற ஒரு மனநிலை இருந்தது.
5. ராஜவனம் நாவலின் அடுத்த பகுதி எழுதும் எண்ணம் உள்ளதா?
முதலில் எனக்கு அந்த எண்ணம் இல்லை. ஆனால் புத்தகத்தை வாசித்த எல்லா வாசகர்களுக்கும் அந்த கதை சீக்கிரம் முடிந்து விட்டதாகவே உணர்ந்து பேசினார்கள். ஏன் சீக்கிரம் முடித்தீர்கள் என்று கேட்டார்கள். நிறைய பேர் இதில் இரண்டாம் பாகம் வருமா என்று கூட கேட்டிருந்தார்கள். அதன்பிறகுதான் அந்த கதையின் தொடர்ச்சி எழுதுவதற்கான எண்ணம் எழுந்தது. தற்போது ராஜவனம் இரண்டாம் பகுதி எழுதுவதற்கான தயாரிப்புப் பணிகளின் தேடுதலில் இருக்கிறேன்.
தகவு மின்னிதழ்
மார்ச் 2022