
ராம் தங்கம் அவர்களின் புலிக்குத்தி சிறுகதைத் தொகுப்பைப் படித்த நாளிலிருந்தே அதுகுறித்து எழுத வேண்டுமென்று யோசித்து நேரம் வாய்க்காமையால் தள்ளிப் போய் இன்று நிறைவேறியிருக்கிறது. இவரின் “திருக்கார்த்தியல்” சிறுகதைத் தொகுப்பின் விளிம்பு நிலை மனிதர்களின் நீட்சியாகவே நான் இந்தத் தொகுப்பையும் பார்க்கிறேன். அதில் இடம் கிடைக்காத பலருக்கு இதில் இடம் கிடைத்துள்ளது, தொகுப்பில் இடம்பெற்றுள்ள “ பஞ்சுமிட்டாயும் பால்ராஜ் அண்ணனும்” கதை யாவருமின் இணைய இதழில் வாசித்தபோதே என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. கதையை முடித்து வெகு நேரம் இது போல் எத்தனை பால்ராஜ் அண்ணன்களையும், அக்காக்களையும் பால்யத்தில் கடந்து வந்திருப்போமென்று யோசித்துக்கொண்டிருந்தேன். அவர்களில் இன்னும் பலரின் முகங்கள் ஒரு பனி மூட்டம்போல் ஞாபகத்தில் இருக்கத்தான் செய்கிறது.
தொகுப்பின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம், திருட்டின் மூலம் ஊர்மக்களின் பசியாற்றிய அண்ணன்களும் தங்கையும் நிஜ வாழ்வின் பல மனிதர்களை நினைவுபடுத்துகிறார்கள். கம்யூனிஸ்ட் மட்டுமல்ல இன்னும் பல இயக்கங்களின் உயிர்ப்பு குன்றாமல் இருப்பதற்கு மூத்த உறுப்பினர்களும் அவர்தம் பற்றுமே காரணம் இளைய தலைமுறை அதை எத்தனைக்கு எத்தனை புரிந்து வைத்துள்ளது என்பதில் உள்ளது இயக்கங்களின் வளர்ச்சி. வரலாற்றுப் பதிவுகளை எடுத்தாண்ட விதத்திலும், காலக்கோட்டினைக் கச்சிதமாய் அமைத்த வகையிலும் என் வகையில் இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை “கம்யூனிஸ்ட்”. அடுத்தது “சாதி வாக்கு” இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிற என்று பேசிக்கொண்டே சுயச் சாதியில் மருமகனோ மகளோ தேடுவோருக்கான கதை. நான் எப்பொழுதும் நினைப்பதுபோல் சாதிமறுப்பென்பது பேசவோ எழுதவோ கூட சுலபமாய் இருப்பது மேல் சாதி மக்களுக்குத்தான்.
அடைக்கலாபுரத்தில் இயேசு, வாசம் இன்னும் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுமே சிறப்பு. ஒவ்வொன்றைக் குறித்தும் தனித்தனியாக எழுதினால் கடைசியில் இதை மட்டுமே படித்துவிட்டு நானும் ராம் தங்கத்தின் புலிக்குத்தி படித்துவிட்டேன் என்று சொல்லிக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுமோ என்ற பயத்தில் இதற்குமேலும் கதைகளைக் குறித்துக் கூற வேண்டாமென்று நினைக்கிறேன்.
நாகர்கோவிலின் பேச்சு வழக்கு ராமின் பலம். இசக்கியின்றியும் ராமின் தொகுப்புகள் வர முடியுமா என்பதை எதிர்காலக் கதைகளையும் படித்துவிட்டுத்தான் முடிவு செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். இப்பொழுது வரை அதற்கான பதில் இல்லை என்பதே. வாழ்த்துகள் ராம் எதிர்வரும் புத்தகங்கள் அனைத்திற்கும்.