மிக குறுகிய நேரத்தில் ஒரே மூச்சில் வாசித்து விடக் கூடிய புத்தகம் ராஜவனம். காடும் காடு சார்ந்த அழகையும் சொல்லும் நாவல். முகளியடி மலையின் கருவறையில் இருந்து ஊற்றெடுக்கும் நந்தி ஆற்றின் பிறப்பிடத்தை தேடி அடர் வனத்துக்குள் பயணம் செய்யும் மூவரை சுற்றி அமைந்த கதை.. எழுத்துகள் வழியே நம்மை காட்டுக்குள் அழைத்து செல்கிறார் எழுத்தாளர்..காட்டின் ஒவ்வொரு அசைவையும் நாம் அனுபவித்து கொண்டே வாசிக்கலாம்.காட்டின் அமைதி சில நேரம் ரசிக்க வைக்கிறது. சில நேரங்களில் அச்சமூட்டுகிறது.
நந்தி ஆற்றை கடந்து செல்லும் போது கண்ட கூலாங்கற்களும்,கட்டு விரியன் பாம்பின் உடம்போடு ஒப்பிட்டு சொல்லப்பட்ட மர வேர்களும், ஒவ்வொரு உயிரின் உடலமைப்பை பற்றிய வர்ணனையும் நம்மை கற்பனை கானகத்துக்குள் மிதக்க செய்யும்.
மரம், விலங்கு, பறவை, ஊர்வன,பூச்சிகள், மலர்கள் என காட்டு வாசம் நம்மை சுற்றி வீசிக்கொண்டே இருக்கும்.. மூங்கில் காடுகளை அவர்கள் கடந்து செல்லும் போது இயற்கையாய் எழும் புல்லாங்குழல் இசை நம் செவிப்பறைகளை வருடி செல்லும். கதையின் நாயகன் காணி பழங்குடியினரை சந்திக்கும் போது கண்ட காட்சிகள் ( பூப்பெய்தல், பிரசவம்,காணி பழங்குடியினரின் மொழி போன்றவை )ஆழ்ந்த அனுபவத்திற்கு பின்னரே எழுத்தாக உருமாறியுள்ளதை நம்மால் சரியாக கணிக்க முடியும்.
‘ஆன’ ராஜசேகர் என்ற கதாபாத்திரம் அத்தனை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. யானை டாக்டர் கே வை போல் என்றும் நம் நினைவில் நிற்கும். எளிய கதைகளம். காட்டின் பிரம்மாண்டத்தை பின்னணியில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதே நாவலின் மிகப்பெரிய பலம். இன்னும் சொல்லிக்கொண்டே போக நிறைய உண்டு இந்நாவலில். இயற்கையை நேசிக்கும், நேசிக்க விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
– அருந்ததி ரவிசங்கர்
ஆசிரியர் : ராம்தங்கம்
பதிப்பகம் :வம்சி
விலை :70
பக்கங்கள் :80