தமிழின் அடுத்த தலைமுறையில் நம்பிக்கை தரும் முக்கியமான எழுத்தாளர். ராம்தங்கம் எழுதிய ராஜவனம். திடுக்கிடும் திருப்பங்களோ, வேகமான நடையோ, திருக்கார்த்தியல் தந்த அதிர்வுகளோ இல்லாத எளிய கதை.முகளியடி மலையில் உருவாகும் நந்தியாற்றின் மூலத்தைக்காண வனம் புகும் மூன்று இளைஞர்களோடு சேர்ந்து நாமும் உள்நுழைகிறோம். நாஞ்சில் நாட்டு பாஷை நம்மைக் கொஞ்சம் தயங்க வைத்தாலும், கதையின் நடையில் ஓடிப்போய் சேர்ந்து கொள்ள முடிகிறது.
எத்தனை விதமான பறவைகள், பாம்புகள், வண்ணத்துப் பூச்சிகள், மான்கள், செடி கொடிகள் என ராம்தங்கத்தின் பேனா ஒரு கேமிராவாய் மாறி இயற்கையை படம் பிடித்துத் தள்ளியிருக்கிறது.காணிப் பழங்குடிகளின் மண் சார்ந்த வாழ்வு நமக்குள் ஒரு ஏக்கத்தை உருவாக்குவதை தவிர்க்க முடியவில்லை.
வனக்காவலர் ராஜசேகரின் உயிர்நேயம் கோபாலின் உயிரை எப்படிக் காக்கிறது என்பது அழகான ட்விஸ்ட். ராம்தங்கம் முன்னுரைத்தது போல கடல், காடு, யானை, ரயில் எல்லாமே இன்னொருமுறை திரும்பிப் பார்க்கவும் ரசிக்கவும் வைப்பது. அதை இந்தப் புத்தகமும் செய்கிறது. வாழ்த்துக்கள் ராம்.. மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
– கவிதா ஜவகர்