திருக்கார்த்தியல் – சுனிதா கணேஷ் குமார்

திருக்கார்த்தியல்  அவ்வளவு வலியின் கணத்தை அந்த புத்தகம் தாங்கிக் கொள்ள முடியாமல் படிக்கும் அத்தனை பேர் மீதும் தூக்கி வைக்கும். விளிம்புநிலை மக்களை குறிப்பாக பசியோடும் பஞ்சத்தோடும் பட்டினி கிடைக்கும் குழந்தைகளின், மாணவர்களின் பசியையும் வலியையும் ஏக்கங்களையும் உணர வைக்கிறது.

படிக்கும் போது இதை கதையென்று நினைக்க முடியாத அளவிற்கு இயல்பாய் நடந்த ஒன்றை மீண்டும் மீண்டும் நம்முன்னே நடத்திக் காட்டுவது போலுள்ளது. மிகவும் நேர்மையான கதைகள். சத்தமில்லாமல் அமைதியான குரலில் அத்துணை வலிகளையும் ஆவேசமாய் ஒலிக்கிறது.

பெற்றோர்களை இழந்து அனாதை ஆசிரமத்தில் வாழும் குழந்தைகளின் பசி கொடியது. குப்பை மேட்டில் தூக்கி எரிந்த அல்வாவை கெட்டுப் போனதென்று கூட தெரியாமல் தின்றுவிட்டு நான் இன்னைக்கு அல்வா சாப்பிட்டேனே என பெருமை சொல்லிக்கொண்ட அந்த குழந்தையெல்லாம், கேக் கிடைக்குமேன்று நினைத்து ஏமாந்து கடைசியில் தூக்கி எரிந்த கேக் டப்பா அட்டையில் ஒட்டியிருந்த கிரீமை நக்கி அட்டையை தன் நாக்கால் துடைத்து சுத்தம் செய்வதெல்லாம், குப்பைத் தொட்டியில் மூட்டைக்கட்டி தூக்கி எரியப்பட்ட பேம்பர்ஸ், நாப்கின்ஸ் இவற்றையெல்லாம் ஏதோ தின்பண்டமென நினைத்து ஏமாந்ததெல்லாம் வேதனையின் கதறல்.

இச்சையும், காமமும் – மகிழ்வு, புனிதம் என்றிருக்கையில், வாழ்வின் புறக்கணிக்கப்பட்ட பெண் ஒருத்தி வருவோன் போவோனுக்கெல்லாம் தன் உடலைக் கொடுத்தத்தில்லாமல், பிச்சைக்காரன், குஷ்டரோகி, நரிக்குறவன் இப்படியெல்லாம் புணர்ந்தார்கள் அதனாலேயே இப்படி அழுக்காக சுற்றிக் கொண்டிருப்பதாக சொல்வதெல்லாம் மனித வாழ்வின் கேவலத்தின் உச்சம்.

இப்படி சாதாரண கண்ணுக்கு தெரியாத ஆனால் சிலரது வாழ்வின் மீதி கவிழ்ந்து போயிருக்கும் வேதனைகளை, விரும்பத்தாகாத உண்மையை நம்மைச் சுற்றியிருக்கும் காதப்பாத்திரங்களை எந்த வித அதிகமான சித்தரிப்புகளின்றி மிகவும் அடக்கமான முறையில் அவர்களின் உணர்வுகளை நம்முள் கடத்துகிறார் ஆசிரியர்.

சில கதைகளில் அப்பகுதிகளில் இன்னும் உயிர்ப்போடு இருக்கும் நாட்டார் தெய்வங்கள், வழிபாட்டு முறைகளை, அம்மக்களின் நம்பிக்கைகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறார். அந்நிலத்து மக்களின் வட்டார வழக்கில் இருந்த அந்த எழுத்துக்கள் அம்மக்களை நம்மிடம் இன்னும் நெருங்கி வரச் செய்கிறது.  இப்படியான கதைகளை படிக்கையில் தான் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையின் ஆழத்தினை உணரும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் ஆசிரியருக்கு எனது நன்றிகள்.
– சுனிதா கணேஷ் குமார்

About the author

ramthangam

Add comment

By ramthangam