இதுவரை சந்தோஷ சுடராக அறிமுகமாகியிருந்த திருக்கார்த்திகை ராம் தங்கத்தின் திருக்கார்த்தியல் சிறுகதை தொகுப்பின் மூலம் துயர ஜூவாலைகளாக மாறி நிற்கிறது. பதினொரு கதைகள்தான் புண்ணியம், படிச்சிட்டு சொல்லுங்க என்றார் ராம். ஒவ்வொரு கதையும் தந்த அழுத்தங்களைத் தாங்க முடியாமல் தவித்தபொழுதுதான் பதினொன்றுதானே சீக்கிரம் முடித்துவிடலாமென நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பது புரிந்தது. ராமை எனக்கு நன்றாகத் தெரியும். இந்த புத்தகத்தில் உங்களுக்கு ராமின் உலகம் விரியும். வலி புரியும்.
திருக்கார்த்தியல் விகடனில் வெளிவந்த வியாழக்கிழமை ராம் கோவையில் என்னோடுதான் இருந்தார். கதைக்கான ஓவியத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் என்னை சூழ்ந்துகொண்டது.அந்த கதைக்கான ஓவியத்தை ஸ்யாம்( Shyam Sankar )சார் வரைந்திருந்தார். கோவையில் இருந்த ஸ்யாம் சாரிடம் அந்த ஓவியத்தை வாங்கி அலுவலகத்துக்கு நான்தான் அனுப்பி வைத்திருந்தேன்.
ஓவியத்தை என்னிடம் கொடுக்கும்போது ஸ்யாம் சார் அந்தக் கதையையும் விவரித்துச் சொல்லியிருந்தார். கதையில் வரும் சிறுவன் செந்தமிழின் தவிப்பை ஸ்யாம் சார் மனம் வலிக்க சொல்லிவிட்டு எத்தனையோ கதைகளை படிச்சி ஓவியங்கள் வரையிறேன் சில கதைகள்தான் மனசை தைக்கும். இந்தக் கதை அப்படியானது என்று புகழ்ந்தார். பிரபலமான எழுத்தாளர் எழுதியிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.
பின்பு ஆனந்தவிகடனில் படிக்கும் பொழுதுதான் அது நண்பன் ராம் எழுதியது என்பதும் அது ராமின் சொந்த அனுபவம் என்பதும் தெரிந்து, இதயம் கணத்தது. அத்தனை நேர்த்தியாக எழுதியதற்காக ராமை பாராட்டுவதா அல்லது அவர் கண்ட காயங்களுக்கு ஆறுதல் சொல்வதா எனத் தெரியாமல் தடுமாறும் அளவுக்கான துயரத்தை தந்திருந்தது திருக்கார்த்தியல். அதோடு இன்னும் பத்து கதைகள் எழுதிச் சேர்த்து திருக்கார்த்தியல் என்ற தலைப்பில் தொகுப்பாக்கியிருக்கிறார் ராம்.
எந்த வித அலங்காரங்களும் இல்லாத மொழிநடையில் ஒவ்வொரு கதைக்குள்ளும் இழுத்துச் சென்று ராம் கடத்தும் வலியை வாசித்துக் கடக்க முடியவில்லை. இதைப் படித்ததிலிருந்து அன்றாடம் ஏதாவது கடைகளில் வேலை செய்யும் சிறுவர்களைச் சந்திக்க நேர்ந்தால் திருக்கார்த்தியலில் வரும் சிறுவர்கள் நினைவில் வந்து நெஞ்சைக் குதறுகிறார்கள். 208 பக்களில் ராம் ஏற்படுத்திய தாக்கம் நான் சந்திக்கும் ஒவ்வொரு சிறுவர்களின் உலகத்தையும் விசாரிக்கத் தூண்டுகிறது. அவர்களில் யாரேனும் திருக்கார்த்தியலில் வரும் சிறுவர்களைப்போன்ற பின்னணியில் இருந்துவிட்டால் என்ன செய்வதென்ற பயத்தில் விலகிச் செல்கிறேன்.
வலி நிறைந்த நெஞ்சத்துக்கு எப்படி வாழ்த்துகள் சொல்வது?
என் அன்பு ராம்.
-புண்ணியமூர்த்தி
திருக்கார்த்தியல் | வம்சி பதிப்பகம்