கன்னியாகுமரி – கேரளா எல்லைப்பகுதியான நெட்டா பகுதியில் சிற்றாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிக்கு முன்னால் அமைந்திருக்கும் சாலையோர சிறிய உணவகம்தான் சுபத்ரா அம்மச்சியின் ‘அட்சய பாத்திரம்’. பெயருக்கு ஏற்றது போல் ஒரு நிறைவான அட்சய பாத்திரங்களைக் கொண்டுதான் அங்கு உணவுகள் பரிமாறப்படுகின்றன. 150 ரூபாய்க்கு ஒரு சாப்பாடு. பலவகையான கூட்டுகள். அணை மீனைக் குழம்பு வைத்தும், பொரித்தும் கொடுக்கிறார்கள். மீன் தலைக்கறி தான் அம்மச்சி கடையில் டாப். அத்துடன் விதவிதமாக கூட்டு, அவியல் இன்னும் பலப்பல குழம்பு கூட்டு வகைகளை அள்ளி அள்ளி வைக்கும் அம்மச்சியின் உணவகத்தில் வயிறு நிரம்ப தின்று முடித்த பின்புதான் நாம் வெளியே வரமுடியும். அந்த அளவிற்கு உணவகத்தின் உரிமையாளரான சுபத்ரா அம்மச்சியின் கண்டிப்பும் கரிசனமும் அன்பும் நம்மை உணவை வீணாக்காமல் அனைத்தையும் தின்று முடிக்க வைக்கிறது.
நண்பர் பசுமை சாகுல் அவர்களின் முகநூலைப் பார்த்துதான் இந்த உணவகத்திற்கு சாப்பிட வேண்டுமென்று நானும் நண்பர் ராகுலும் பல முறை சென்றிருக்கிறோம். முதல்முறை நான் செல்லும்போது அங்கு அதிகமாக சாப்பிட முடியவில்லை. குறைவாகத்தான் சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டேன். உடனே என்னுடன் வந்திருந்த நண்பர் ராகுலிடம்,
‘அந்தப் பிள்ள ஒன் கூடயா வந்தான்? அவென் சரியா சாப்பிடவில்லயே?’ என்று சொன்னார்.
வெளியே கை கழுவிவிட்டு நான் ஒதுங்கி நிற்கும்போது ‘நீ சாப்பிட்டதுக்கு ரூபா தாரண்டாம். அவனுக்கு மட்டும் தந்தாப் போதும்’ என்று சொன்னார். நான் ‘இல்ல அம்மச்சி. நான் ரூபா தந்து விடுகிறேன்’ என்று சொன்னேன்.
‘அம்ம ஒனக்கு சோறு தந்துருக்கு. அதுக்கு நீ பைசா தர வேண்டாம் அவ்வளவுதான்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.
ராகுல் வெளியே வந்ததும் இந்தத் தகவலைச் சொன்னேன். அதிர்ச்சி அடைந்தார். ‘நிஜமாவா குரு?’ என்று கேட்டார். ‘ஆமாம்’ என்றேன். மறுபடி ரூபாய் கொடுக்கப் போகும்போது ராகுலிடம், ‘நீ 150 ரூபாதான். அவனுக்கு வேண்டாம்’ என்று சொன்னார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நூறு ரூபாயாவது இருக்கட்டும் என்று நீட்டினேன். அவர் திரும்பிக்கூட பார்க்காமல், ‘இடத்தை காலி பண்ணு’ என்று கூறிவிட்டார். அம்மச்சியோடு நின்று ஒரு புகைப்படம் எடுக்கக் கூட அவர் அனுமதிக்கவில்லை. சிரித்துக் கொண்டே எங்களை நகர்த்தி விட்டார். பின்புதான் தெரிந்தது அவரது தாயுள்ளம். ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் அந்தப் பகுதியைக் கடந்து செல்பவர்கள் சுபத்ரா அம்மச்சியின் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டுதான் செல்கிறார்கள். பல யூடியூப் சேனல்கள் அம்மச்சி கடையை தினந்தோறும் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
அம்மச்சி உணவகத்தில் சாப்பிடுவதற்காகவே பலர் சிற்றாறு அணைக்கு சுற்றுலா வருகின்றனர். நாம் பணத்தைக் கொடுத்து சாப்பிடுகிறோம். நாம் தேவைப்பட்டதைச் சாப்பிடுகிறோம் என்கிற நமது திமிர் அங்கு எடுபடாது. அம்மச்சி அன்பும் கரிசனமும் சேர்ந்த ஒரு சேவையோடு தான் உணவுகளைப் பரிமாறுகிறார். உரிமையாளராக இருந்தாலும் தானே முன்னின்று அனைவருக்கும் உணவுகளைப் பரிமாறி மகிழ்கிறார் சுபத்ரா அம்மச்சி. மன நிறைவோடு வருகிறவர்களுக்கு வயிறும் மனசும் நிறைய ருசியான உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறார் அம்மச்சி.