பரதவரின் பூர்வீகம் அறிய இந்த நூல் இன்னுமொரு திறவுகோல். ஆனால் இதுபோலவே குமரியிலும், திருச்செந்தூரிலும், வட்டக் கோட்டையிலும், உத்திரகோச மங்கையிலும், பழநியிலும், மதுரையிலும், திருவண்ணாமலையிலும் பல பாரிய பூட்டுகள் தொங்குகின்றன. அவையெல்லாம் முறையான சாவிகள் கொண்டு திறக்கப்பட வேண்டும் – வடக்கு வாசல்கள் திறக்கப்பட்டால் பரதவரின் பூர்வீகம் தெரிந்துவிடும்.
’’மூணு கப்பல் கொடி பிடிக்க, முத்துக் கப்பல் ஓடி வர
மூழ்கி முத்தெடுக்கும் மூத்தவனே கண்ணுறங்கு
அத்தை அடிச்சாளோ அனிச்சப் பூச் செண்டாலே
அம்மான் அடிச்சானோ ஆணி முத்துச் சரத்தாலே
பாட்டி அடிச்சாளோ பால் முத்துச் சரத்தாலே
அடிச்சாரைச் சொல்லியழு, ஆக்கினையும் செஞ்சிடுவோம்
பாண்டியரே உன் மாமன் பாலகனே கண்ணுறங்கு…’’
பாட்டி பிரகாசியின் மடியில் நான் பெற்ற தாலாட்டுப் பாடல். அன்று தூங்கச் செய்த பாடல் இன்று தூக்கமறச் செய்கிறது!
ஆர். என். ஜோ டி குருஸ்