எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய “புலிக்குத்தி” சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். எழுத்தையே முழுநேரமாகக் கொண்ட ராமின் உழைப்பு ஒவ்வொரு கதையிலும் தெரிகிறது. தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் ,கையில் எடுத்ததும் தொடர்ந்து இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்தேன். துப்பறியும் மலினங்கள் எல்லாம் இல்லாத கலைத்துவக் கதைகள் தான். ஆனால் தொடர்ந்து ஈர்க்கும் தன்மை ராமின் தனித்துவம். திருக்கார்த்தியலில், வரும் ஓலைக் கொழுக்கட்டைக்கு ஆசைப்படும் செந்தமிழ் என்ற சிறுவனை இத்தொகுப்பின் பல கதைகளிலும் என்னால் பார்க்கமுடிந்தது.
வாசம் சிறுகதை இத்தொகுப்பின் ஆகச்சிறந்த நெகிழ்ச்சி தருகிறது என்றால்,”கம்யூனிஸ்ட்” கதை வியப்பைத்தந்தது. ராம்தங்கத்தை ஒரு இடதுசாரி சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவராக உறுதி செய்கிறது இக்கதை. நாகர்கோவில் மண்ணிலிருந்து சிவப்பு இலக்கியம் உறுதியோடு வருவதைக் காண்கையில் இனம் புரியாத ஒரு பரவசம் மேலிடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
புலிக்குத்தி, நாட்டார் மரபியலின் நவீன வடிவம். கிரா,நினைவிற்குவந்தார். இந்த
வகையில் இன்னும்இக்கதையை செழுமைப் படுத்தியிருக்கலாம். இத்தொகுப்பை ஓர் ஆவணமாக உயர்த்துவது, ‘பனங்காட்டு இசக்கி’ சிறுகதைதான். பனை மெல்ல மெல்ல அழிவை நோக்கிச் செல்வதை நேரடியான வார்த்தைகளில் சொல்லாமல் அதை வாசகனின் உணர்வுக்குள் கடத்தும் ராம் தங்கத்தின் ஆண்டுக்கணக்கான களப்பணியை இக் கதையில் சந்திக்கமுடிகிறது.
சர்ச் என்று அழைக்கும் மக்களுக்கும், வேதக்கோயில்,என்றழைக்கும் மக்களுக்கும்
உள்ள வேறுபாடு என்பது வெறும் பொருளாதாரத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. இது கலாச்சாரம் பண்பாடு சார்ந்து வரும் வேறுபாடு என்பதை அருமையாகக் காட்ட ராம் தங்கத்திற்கு முடிந்திருக்கிறது. எல்லாக்கதையிலும் இடங்களைப்பற்றிய விவரணைகளை,ஒரு கட்டிடப் பொறியாளரைப் போலவும்,ஒரு ஓவியர் போலவும் வாசகரின் மனதில் பதிவாக்கும் நேர்த்தி அற்புதம்.
யுவ புரஸ்கார் பட்டியலில், ராம் தங்கம் எழுதிய,”திருக்கார்த்தியல்” சிறுகதை,
தொடர்ந்து மூன்று ஆண்டுகளும் இடம் பெற்றதை அறியும்போது,தமிழ் இலக்கியச்சூழல் மீதும், சாகித்ய அகாதமியின் மீதும் மிகுந்த நம்பிக்கை வருகிறது. எழுத்து தரமாக இருந்தால்,அங்கீகாரம் தொடரும் என்பதற்கு ராம்தங்கம் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைகிறார்.
எழுத்தாளர் என்பதையே வாழ்வியலாகக் கொண்ட ராம் தங்கத்திற்கு மேலும் பல உயரங்கள் கிடைக்க வேண்டும். இவர் பெறும் உயரங்கள் , இலக்கிய உலகத்தின் அறம் பெறும் உயரங்கள். எழுத்தையே முழுநேரப் பணியாகக் கொண்ட பிரபஞ்சன், ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகள் போல ராம்தங்கமும், புலிக்குத்தியும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்.
அற்புதமாக இந்த நூலை வெளியிட்டிருக்கும் வம்சி பதிப்பகத்திற்கு என் வாழ்த்துகள்.
– மஞ்சுளா தேவி