‘வாரணம்’ மதிப்புரை – சுமி ஹரி

                                                                                   

 

ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு “திருக்கார்த்தியல்” பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. அத்தனை விருதுகளை அள்ளியிருக்கிறது புத்தகம். சமீபத்தில் சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதையும் வென்றிருக்கிறது. இப்படி அறிமுகமான ஆசிரியரின் எழுத்தில் வந்த ராஜ வனத்தையும் வாசித்தேன்.  அதன் தொடர்ச்சிதான் வாரணம் என்ற போது இந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஆவல் கூடியது. வனத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை ராஜவனம். அதில் முக்கிய கதாபாத்திரம் வனக்காவலராக இருந்த ராஜசேகர். அவரைப் பற்றிய பகுதிகள் அத்தனை நெகிழ்வாகச் சொல்லப்பட்டிருக்கும். அவருக்கு வனத்தின் மீதான காதல், காணிகளைத் தொந்தரவு செய்யாத, அவர்களுக்கு உதவும் குணம், இதனால் காணிகள் அவர் மேல் காட்டும் அன்பு,விலங்குகளின் மீதான நேசம் இப்படி நிறைய. இதுபோல வனத்தை நேசிக்கும் ஒருவரோடு, யாரும் செல்ல முடியாத அடர்ந்த வனத்திற்குள் பயணித்தால் எப்படி இருக்கும். நம்மை அப்படித்தான் வனத்திற்குள் அழைத்துச் செல்கிறது வாரணம்.

நாகர்கோவிலின் ஒரு பேருந்துப் பயணத்தைச் சொல்லித்தான் நாவல் தொடங்குகிறது. அதில் பயணிக்கும் மன்றோ கீரிப்பாறைக்குச் செல்கிறான் என்று அறிந்தவுடன் நமக்கு வனத்தின் மீதான ஆர்வம் தொடங்கிவிடும். அவனுக்கோ முன்பொரு முறை சென்ற இந்தப் பயணத்தில் கிடைத்த வன அனுபவம் நினைவில் நிறைகிறது. அவன் மாமா வேலை பார்க்கும் சில மரப் பண்ணைத்தோட்டம் அவன் செல்ல வேண்டிய இடம். அங்குச் சென்றதிலிருந்து விவரிக்கப்படும் ஒவ்வொரு காட்சிகளும் நாமும் அந்தக் குளுமையை அனுபவித்து, பசுமை நிறைந்த காட்சிகளைக்  கண் நிறையக் கண்டு ரசிக்கத் தொடங்கி விடுவோம். மன்றோ அங்குச் சென்ற சமயத்தில் வனக்காவலராக பணியாற்றிக் கொண்டிருந்தார் ராஜசேகர்.

வனத்தைக் காண வேண்டும் என்ற அவனின் ஆசையை அவனின் மாமா நிறைவேற்றுகிறார். தகுந்த துணையாக ராஜசேகர் இருக்கும்போது, எந்தப் பயமும் இல்லாமல் அனுப்பலாம் என்ற தைரியம் அவருக்கு. அவர்களின் பயணம் தொடங்கியதிலிருந்து, முடிகிற வரை ஒவ்வொரு பக்கங்களிலும்,வனத்தைப் பற்றிய பல விஷயங்கள் நம் முன் விரிந்து கொண்டேயிருக்கிறது. இருட்டும், வெளிச்சமும், குளிரும், பயமும், மகிழ்வும், பரவசமும் நிறைந்த அந்தப் பயணத்தில் மன்றோ அடைந்த மகிழ்ச்சியைவிட, வாசித்த நமக்குத்தான் பெரு மகிழ்ச்சி.

வனத்திற்குள் அவர்கள் நுழைந்த கணத்திலிருந்து மன்றோ அனுபவிக்கிற அதன் பிரம்மாண்டம், அழகு, ஆச்சரியம் இவை எதையும் பதிவுக்குள் அடக்கி விட முடியாது. வாசித்து அனுபவித்தால் மட்டுமே அந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். பயத்தை மீறிய ஆசை அனைவருக்குமே வனங்களின் மீது உண்டு.

அந்த ஆசையை இந்தப் பகுதிகளை வாசிப்பதன் மூலம் நிவர்த்தி செய்யலாம். யானைகளின் வலசைப் பாதையை ஆக்கிரமித்த சுயநலம் மிக்க மனிதர்கள், அவைகளைப் பாதுகாக்கப் போராடும் சில நல்ல மனம் படைத்த மனிதர்கள் என இயற்கைப் பாதுகாக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களையும் சொல்லிச் சொல்கிறது நாவல். வனம் தன்னை ஒளித்துக் கொள்ளும் ரகசியம், ஆசை தீர அவர்கள் குளித்த ஆனை அருவி, இதிலிருந்து வெளிவர முடியாமல் மன்றோ தவிப்பதைப் போலவே நம்மையும் ஆட்கொண்டு விடும் அந்தச் சூழலும் அமைதியும்.

ராஜசேகர் சொல்வதைப் போல “வனத்திற்குள் செல்ல வேண்டுமென்றால் முதலில் வனம் உனக்குள் வர வேண்டும்” உண்மைதான்  நினைத்தவுடன் யாராலும் உள்ளே சென்று விட முடியாதே. இது அனைத்தையும் விட முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியதை  ராஜசேகர் இயல்பாக, அவர் நடந்து கொள்ளும் விதத்தில்  நமக்குச் சொல்லிச் செல்வார். வனத்தில் இருக்கும் ஒரு காய்ந்த இலை கூட நமக்குச் சொந்தமில்லை என்பதை.

சூழலியல் சார்ந்த விஷயங்களைப் பற்றி மட்டுமா இந்த நாவல் சொல்கிறது என்றால், மிக முக்கியமான வேறொரு வரலாற்றையும் பேசுகிறது. மன்றோவின் மாமா தன் முன்னோர்களைப் பற்றிச் சொல்லும் ஒரு முன் கதை தென் திருவிதாங்கூர் வரலாறு. அன்றைக்கு நாடார் இன மக்களின் மீதான ஆதிக்க சாதியினரின் அடக்குமுறை, மிஷனரிகளின் தோற்றம், கல்வியின் முக்கியத்துவத்தை மக்கள் அறியத் தொடங்கியது. அதற்காகவே மக்கள் கிறிஸ்துவத்தைப் பின்பற்றத் தொடங்கியது. அதற்காகப் பாடுபட்ட பலரின் அறிமுகம். இப்படி அன்றைக்கு வரலாற்றில் நடந்த பெரும் சமூக மாற்றத்தைப் பற்றியும் நாவல் பதிவு செய்திருக்கிறது.

முக்கியமாக யானைகள் பற்றி ஆசிரியர் சொல்லியிருக்கும் விஷயங்கள் நமைப் பல வகையில் யோசிக்க வைக்கிறது. அவற்றின் கம்பீரமும், பார்க்கப் பார்க்கத் தீராத  அழகும், அன்பான, நன்றி நிறைந்த குணமும். இவற்றைப் பற்றி எல்லாம் வாசிக்க வாசிக்க, யானைகளைக் காக்க மறந்து மனிதனின் சுயநலம் எப்படியெல்லாம் அவற்றிற்குத் தீங்கிழைக்கிறது என்பதே பெரும் வேதனை தருகிறது. அவற்றின் இடத்தை ஆக்கிரமித்தது மட்டுமில்லாமல், குடிக்க நீரும். உண்ண உணவும் இல்லாமல் தவிக்க விட்டிருக்கும் இப்போதைய நிலை என்றாவது மாறட்டும் என்ற ஆதங்கமே தோன்றுகிறது நமக்கு. சூழல் சார்ந்த, சமூக அக்கறை  ஆசிரியரின் எழுத்தில் நாவலாக விரிந்திருக்கிறது. அவசியம் வாசிக்கலாம்.

வாரணம்

ஆசிரியர்- ராம் தங்கம்

பதிப்பகம்- வம்சி

பக்கங்கள்-312

விலை- 350

About the author

ramthangam

Add comment

By ramthangam