“வாரணம்” என்ற இந்த நூலின் ஆசிரியர் ராம் தங்கம் சமீபத்திய சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது (2023) தன்னுடைய “திருக்கார்த்தியல்” என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக பெற்றவர். ஊர்சுற்றிப் பறவை, ராஜவனம், புலிக்குத்தி போன்ற நூல்களும் சிறப்பானவை. இவர் எழுதிய ராஜவனம் என்ற நூலின் தொடர்ச்சியாக “வாரணம்” தோற்றம் கொண்டுள்ளது.
வாரணம் என்றால் யானை என்றொரு பொருளுண்டு. யானை என்றால் பிரம்மாண்டம், காடென்றால் பிரம்மாண்டம். அதுபோல இந்த நூல் வாரணமும் காட்டின் பிரம்மாண்டத்தை எதிரொலிக்கிறது! சிறுவர்களுக்குக் கதை சொல்லுவதைப் போல இவர் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளையும், பெயர்க் காரணங்களையும் சொல்லியிருக்கிறார்.
கதையின் துவக்கமே ஒரு மழைக்கால இரவொன்றில் துவங்குகிறது. குடை பிடித்துக் கொண்டும், பாலித்தீன் பைகளைத் தலைக்கு மேல் பிடித்துக் கொண்டும் சற்று வேகமாக மக்கள் செல்லும் காட்சியோடு தொடங்குகிறது. மழை வந்தால் ஒழுகும் ஒரு பேருந்து பயணத்தில் பயணிகளுக்கும் நடத்துநருக்கும் நடக்கும் சம்பாவனைகளுக்குப் புன்முறுவல் பூத்தவாறு மன்றோவுடன் கீரிப்பாறைக்கு நம்முடைய பயணம் தொடங்குகிறது. அங்குள்ள சில்மர் எஸ்டேட்டில் வேலை செய்யும் மாமாவை எதிர்நோக்கி பயணிக்கிறான். முன்பே ஒருமுறை அவன் பயணம் செய்த சில்மர் எஸ்டேட்டின் வனம் பற்றிய அனுபவம் அவன் நினைவுகளில் நிறைந்துவிடுகிறது.
ஜான் கிராண்ட் என்ற ஸ்காட்லாந்துகாரர் உருவாக்கிய சில்மர் எஸ்டேட்டின் கதையையும் சொல்லுகிறார். அந்த எஸ்டேட்டின் மலைவளம் பற்றியும் அந்த இரவை பற்றியும் சொல்லச் சொல்ல நாமும் அங்கே மன்றோவுடன் படுத்துக்கொண்டு யானையை நகர்வை உணர்வோம். அங்கே வனக்காவலர் ராஜசேகர் அறிமுகமாகிறார். இயற்கையின் மீதும் நேசமும் வனவிலங்குகள் மீது குறிப்பாக யானைகளின் மீது காதலும் கொண்டவர். அவைகளின் உணவிற்காக வாழை மரங்களை நட்டு வளர்க்கிறார். வனத்தின் வளங்களையும், பழைய திருவிதாங்கூர் சமஸ்தான வரலாற்றையும், கிறிஸ்தவ மிஷனரிகள் சேவைகள் பற்றியும் கதை சொல்லலின் ஊடே கடத்துகிறார்.
காட்டு மைனா, கிளி, கொம்பன் ஆந்தை, சோலை மந்திகள், சோலைக்கிளி, கதிர் குருவிகள், நாகணவாய் (ஒரு வகை மைனா), நீலான்(மான் இனம்), சருகுமான், சிங்கவால் குரங்குகள், மலைமொங்கான், வால் காக்கை போன்ற புதிய உயிர்களின் பெயர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
மனிதனின் காலடி படாமல், கண்ணடி படாமல் இருக்கும் வரை எல்லாமே இயற்கையாய் தானிருக்கிறது. நீருக்கு ஆதாரமாக விளங்கும் மலைகளையும் வனங்களையும் வெட்டி எடுக்கக் குத்தகைக்கு விட்டுவிட்டு மழைநீர் சேகரிப்பு தொட்டி வைக்கச் சொல்லி பிரசாரம் செய்து பிரயோஜனமில்லை என்ற சமூக அக்கறை சார்ந்த கருத்தையும் முன் வைக்கிறார். மரங்கள் நட்டு மனிதனால் வனங்களை உருவாக்கிவிட முடியாது. வனம் என்பது காட்டுயிர்களும், பறவைகளும், உருவாக்குவது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவி வந்த சாதிய ஏற்ற தாழ்வுகளை கொடுமைகளையும், வரிச்சுமைகளையும் மேலோட்டமாக காட்சிப்படுத்துகிறார். திருவிதாங்கூர் திவான் வேலுத்தம்பிக்கும் கர்னல் மெக்காலேவுடன் இருந்த நட்பு பற்றியும், பின்னாட்களில் எவ்வாறு எதிரியாகி அவரோட வீழ்ச்சி நடந்தது போன்ற வரலாறுகள் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது.
ரெவரண்ட் மீட் மற்றும் அவரது மனைவி ஜோகன்னாவின் கல்விச் சேவையும், தோள் சீலை போராட்டம் பற்றியும் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பையும் எழுதியுள்ளார். அதோடு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வழக்கத்தில் இருந்து வந்த பிடாகைகளைப் பற்றியும் சிறு குறிப்பு கொடுத்துள்ளார். மக்களிடம் இருந்து வரிவசூல் செய்யும் அதிகாரமும், வழக்குகளை விசாரித்து தண்டனைக் கொடுக்கும் அதிகாரமும் கொண்ட பிடாகையை திருவிதாங்கூர் மன்னர்கள் ஆதரித்து வந்திருக்கிறார்கள். இத்தகைய பிடாகைகளை ஒழித்து நீதிமன்றங்களை நிறுவிய கர்னல் மன்றோ பற்றியும், பின்னாட்களில் பிடாகை தலைவர்களைக் கோவில் அறநிலையத் தலைவர்களாக மட்டும் செய்து அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார்.
மலை பயணத்தின் போது மலைக்காட்டினை பிரம்மாண்டமாகவும், வரலாற்றைக் கூறும்போது சமூக நீதியையும் சொல்லிக் கொண்டு வருகிறார். இயற்கை சார்ந்த தன்னுடைய ஆதங்கங்களையும் கூறுகிறார். வாசிக்கலாம்.