2023-ல் சூழலியல் சார்ந்து தமிழில் வந்திருக்கும் புனைவுகள், அபுனைவுகளையே சென்னை புத்தகக் காட்சியில் அதிகம் வாங்கியிருந்தேன் என்பது இந்த வருடம் புத்தக அலமாரியை ஒதுக்கும்போது தெரிந்தது. போன மாதம் அடையார் ஒடிஸிக்குச் சென்றிருந்த போது ‘She leads – The Elephant matriarch’ படக்கதை புத்தகத்தை அங்கேயே புரட்டி பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தேன். இந்த ஞாயிறு இந்தியா- ஆஸ்திரேலியா நேரலையின்போது ஓர் ஆஸ்திரேலியா சிறுமி ஆட்டத்தை விடச் சுவாரஸ்யமாக The Elephant Tale என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.
உமையவன் தொகுத்த கொம்பன்-சிறார் யானைக் கதைகளுக்காகத் தொடர்ந்து யானைகளை பற்றி வாசித்து வந்ததாலோ என்னவோ 2024 சென்னை புத்தகக் காட்சியில் வாங்கியதில் முதலில் படித்து முடித்த புத்தகம் ‘வாரணம்’. யுவ புரஸ்கார் வாங்கிய கையோடு வந்து கையெழுத்திட்ட பிரதியைப் புத்தகக் காட்சியில் கொடுத்த ஆசிரியருக்கு நன்றி. அப்படியே அடுத்த வருடம் பால புரஸ்காரும் வாங்க வாழ்த்துகள். சிறாருக்காக இந்த வருடம் எழுதுகிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். உமையவன், ராம் இருவரில் யார் வென்றாலும் மகிழ்ச்சி.
ராம் தங்கத்தின், சிறுகதைகளை வாசித்திருக்கிறேன், பயணக் கட்டுரைகளைப் பதிப்பித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கும் முன் மனதில் எழுந்த முதல் கேள்வி இது ராஜவனத்தின் தொடர்ச்சியா? அதற்கு முதல் சில அத்தியாயங்களிலேயே பதில் சொல்லும்விதம் ஆம்! இது கீரிப்பாறை ராஜாவின் வனம் என்று ராம் நம் ஆர்வத்தைத் தூண்டுகிறார்.
ஏசி மாலில் எஸ்கலேட்டரிலேயே ஏறி, செபோராக் கடைகளின் வாசத்திற்காகவே உள் நுழைந்து, எதையாவது கொறித்துக்கொண்டே பளிங்குப் பாதையில் நடந்து பழகியவர்களைக்கூட ஒரு முறையேனும் அடர் வனத்தின் வாசத்தை நுகர்ந்தபடி செங்குத்தான மலைச்சரிவுகளில் ஏறி இறங்க உடல்\மனரீதியாக தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் எண்ணம் துளிர்க்கும் விதம் அவருடைய விவரணைகளும், காடு சார் பல்லுயிர்கள் பற்றிய புரிதலும் கட்டி இழுக்கிறது. இதற்காக எத்தனை முறை அவர் அனுமதி வாங்கி காட்டுப் பகுதிகளில் சுற்றிக் குறிப்பெடுத்திருப்பார் என்று யோசிக்க வைத்தது. வன இலாக்காவுக்குச் சில நல்ல யோசனைகளையும் அவர் கதைக்கு நடுவில் சொல்லியிருக்கிறார். உதாரணமாக காட்டுக்குள் யானை ராஜசேகர் வாழை நடுவதுபோல் ஒரு காட்சி வருகிறது. நிஜமாகவே யானைகள் ஊருக்குள் இறங்குவதைத் தடுக்க அது நல்ல யோசனையாகவே தோன்றியது.
ராஜவனத்தில் இன்னும் கொஞ்சம் கதை நீண்டிருக்கலாமே என்ற வாசகர் கோரிக்கையை கருத்தில்கொண்டு மன்றேவும், யானை ராஜசேகரும் ‘காட்டுக்குள் இருக்கும் கான்க்ரீட் கட்டிடங்களில் பறவைகள் கூடு கட்ட வேண்டிய அவசியமே இருக்காது’. ‘ஒரே நிறக்குடும்பமுடைய பட்டாம்பூச்சிகள் தான் ஒன்றாக வலசை போகும்’. ’பருந்துகள் காட்டில் வேட்டையாடி உண்ண வேண்டிய அவசியமே இல்லை’. ’சரிந்து விழுந்த மரங்களை கறையான்கள் அரித்துக்கொண்டிருந்தன’. ‘காட்டின் பாறைகளின் வடிவமும், திசைகாட்டி மரங்களும் எப்படி ஜிபிஸ், கூகிள் மேப் இல்லாத பயணத்திற்கு லேண்ட்மார்க்குகளாக உதவுகின்றன’. ’தண்ணீர் தேங்காத மலைப்பிரதேசங்களில், குளிரில் கொசுக்கள் பெருகாது. புற்கள், புதர் மண்டியிருக்கும் இடத்தில் அவை இருந்தாலும் பறவைகளுக்கு உணவாகும் இப்படிப் பக்கத்திற்குப் பக்கம் ஒரு சுவாரஸ்யமான தகவலை உதிர்த்துக்கொண்டே அந்தத் தடம் வழி கதையை நகர்த்திச் செல்கிறார்கள்.
இது தவிர்த்து சூப்பரிண்டண்ட் சாமெர்வேலின் 5 தலைமுறைக்கு முந்தைய வரலாறு ஒரு சரித்திர நாவலின் சுவாரஸ்யத்துடன் மிஷனரிகளின் பங்களிப்பை மிகவும் விறுவிறுப்பாகப் பதிவு செய்கிறது. அந்த காலத்துப் பேச்சுவழக்கில் மலையாளம் கலந்த தமிழ், அச்சு எந்திரங்களின் வருகை, தோள்ச்சீலை போராட்டம் என்று பல தரவுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
ஒரு காலத்தில் வானத்து மனிதர்கள் என்று இந்திரா சவுந்தரராஜன் எழுதி இயக்குநர் நாகாவின் மர்ம தேச வரிசையில் முடிவு பெறாத ஒரு தொடராக ‘எதுவும் நடக்கும்’ என்ற மர்மத்தொடரில் நடமாடும் கற்பக மரங்கள், காணாமல்போகும் காட்டு இலாக்கா அதிகாரிகள், அடிக்கடி காட்டில் வேறுவேறு உடைகளில் வரும் சித்தர்கள், ஓலைச் சுவடிகள், மூலிகைகள் என்று திகில் கிளப்பும் வகையில் வனங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராம் நம் அன்றாடத்தோடு கதையை பொருத்தி யானைகள்தான் நடமாடும் வனங்கள். யானைகளைக் காப்பதும் வனத்தைக் காப்பதும் ஒன்றுதான் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். வீரப்பனைப் பற்றிய ஆவணப்படங்களும் அதையேதான் சொல்கின்றன. எழுத்தாளர் முகில் எழுதியிருப்பதுபோல் ஆனை அருவியின் அடிவாரத்தில்தான் நானும் நனைந்துகொண்டிருக்கிறேன்!
வம்சி புக்ஸ் வெளியீடு
விலை ; 350