ராம் தங்கம் அவர்கள் நாகர்கோவிலை சேர்ந்தவர், இதுவரை 6 புத்தகங்கள் எழுதியுள்ளார் , இவருடைய ‘திருக்கார்த்தியல்’ சிறுகதை தொகுப்பு “அசோகமித்திரன் விருது (2018) சுஜாதா விருது (2019) வடசென்னைத் தமிழ்ச்சங்கம் விருது (2019) படைப்பு இலக்கிய விருது (2019) சௌமா இலக்கிய விருது (2019) அன்றில் இலக்கிய விருது (2019)” ஆகிய விருதுகளை வென்றுள்ளது.
ராஜவனம் 80 பக்கங்களை கொண்ட சிறிய புத்தகம் , புத்தகம் முழுவதுமே காலில் பசுமை ஒட்ட , மூங்கிலும் காற்றும் சண்டையிடும் ஓசைகளும் பறவைகள் பூச்சிகளின் ரீங்காரமும் காதில் ஒலிக்க அடர்ந்த வனங்களில் சுற்றித்திரிந்த அனுபவத்தை தருகிறது. கோபால் , ராஜேஷ் ,ஆன்றோ மூவரும் பலநாட்களாக திட்டமிட்டு தவறிபோன அடர்வனமாக இருக்கும் முகளியடி மலையை பார்த்துவிட வேண்டும் என்று கிளம்புகிறார்கள் .
இந்தப் பயணத்தில் வரும் நுண் தகவல்கள் மூலம் நாஞ்சில் நாட்டு காடுகள் கண்முன் வருகிறது. காட்டில் இருக்கும் பறவைகள் , மரங்கள் , விலங்குகள் , பாம்புகள் பெயர்கள் மட்டுமல்லாமல் பட்டாம்பூச்சிகளின் வகைகள் வரை எல்லாவற்றையும் அழகாக குறிப்பிடுகிறார் .
கோபால் வனக்காவலரான தன் தந்தை காட்டைப்பற்றி சொல்லியிருக்கும் அனைத்தையும் இந்த காட்டு பயணத்தில் கடைபிடிக்கிறான், காட்டில் இருக்கும் வன தேவதையை வங்கிவிட்டுத்தான் நந்தியாறு பிரசவிக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தந்தை சொல்லியிருந்தால் வன தேவதை இருக்கும் இடத்தை தேடுகிறான் கோபால் , இந்த இடத்தில் நடக்கும் ஒரு சுராவஸ்யமான நிகழ்வில் கோபால் தனியே காட்டுக்குள் செல்ல நேரிடுகிறது , காட்டுக்குள் இருக்கும் ஒரு குகைக்குள் செல்லும்போது திருவிதாங்கூரின் ஒரு அரசரின் தொன்மமும் மெல்லிய மாய எதார்த்தமும் கதையில் சேர்ந்துகொள்கிறது .
‘கோபாலுக்கு அப்பாவின் நினைவு மனதில் வரத் தொடங்கியது. வனக் காவலர் உடையில் அவன் அப்பா ராஜசேகர் நினைவுகளில் உருப்பெற்றார்’ -இந்த வரிகளிலிருந்து வனம் இன்னும் உயிர்ப்புள்ளதாகிறது. ராஜசேகர் என்னும் நேர்மையான வன காவலரின் காட்டின் மீதான நேசமும், அதற்காக அரசியல்வாதிகள் வரை எல்லோரையும் எதிர்கொண்டு அவர் கொடுக்கும் விலை தன்னுடைய உயிர்.
புத்தகத்தின் பிற்பாதியில் வரும் காணிக்கரர்கள் என்னும் பழங்குடியினரின் வாழ்க்கைமுறையும், அவர்களின் பிரச்னைகளும், ராஜசேகருக்கும் அவர்களுக்கும் இருந்த அற்புதமான பந்தமும் காட்டப்பட்டுள்ளது. காணிக்காரர்களைப் பற்றிய தகவல்கள் அருமையாக இருக்கிறது. கதையில் வரும் வனக்காவலர் ராஜசேகர் போன்றவர்கள் காவலில் இருக்கும் வனங்கள் எல்லாமே ராஜவனமாகவே இருக்கும் ! பசுமையான புத்தகம் .
– பாலசுப்பிரமணி மூர்த்தி
புத்தகம் : ராஜவனம்
எழுத்தாளர் : ராம் தங்கம்
வெளியீடு : வம்சி புக்ஸ்