ராஜவனம் கதை நமை பெரிதும் ஈர்க்கும் விஷயங்கள் இரண்டு,
1 . வட்டார மொழி
2 . வனத்தில் உள்ள பறவைகள் பூச்சிகள் , விலங்குகள் , செடி , கொடிகள் ,மரங்கள் .
கிராமங்கள் தோறும் வெயிலையும் , மழையையும் , தன்மேல் வழிய வழிய விடுவதும் , பூஜிக்கும் முறைகள் அற்று இருகை எடுத்தாலே (கும்பிட்டாலே) இருள் நீக்கும் நாட்டாரு தெய்வங்கள், மற்றும் வட்டார மொழி இவ்விரண்டும் அடிப்படையாக கொண்ட கதை இது.
மூன்று இளைஞர்கள் நதியின் பிறப்பிடம் பார்க்கும் ஆர்வத்தின் காரணமாக முகளியடி மலையை நோக்கி செல்கின்றனர். இக்கதை பயண வழி நூலாக மற்றொரு முகத்தை அமிழ்த்திக் கொண்டுள்ளது . பயணம் முழுவதும் செடி ,கொடி ,மரம் ,பூ , பூச்சிகள் ,விலங்குகள் என தகவல்கள் நிறைந்து உள்ளன. அவற்றைப் படித்து கொண்டிருக்கும் போதே படமாக்க நம் விழிகளின் முன்னே விரிகிறது வனம்.
பழங்குடி மக்களின் வாழ்வியல், அவர்கள் இருப்பிடத்தை மந்திர வேலி வைத்து காக்கும் முறை. பழங்குடி மக்கள் ரூபாய் என ஒன்று இருப்பதை அறிதல், அவர்களிடம் இருந்து சிறிது சிறிதாக பறிபோகும் வாழ்வியல் உரிமை மற்றும் அவர்களின் வனம் ஆகியவை வலி ஏற்படும் இடங்கள். உருண்டு திரண்ட மூங்கில்களில் வண்டுகள் துளைத்த இடத்தின் வழியே காற்று புகுந்து இயற்கையே புல்லாங்குழல் வாசிக்கும் இடம். கல்லால் ஆன இருக்கை மன்னர்களுக்கும் ஆதிவாசி மக்களுக்கும் இடையேயான புரிதலை அன்பை விளக்குகிறது.
விலங்குகள் பசிக்கு மட்டுமே வேட்டையாடும் ஆனால் மனிதர்கள் தன் எல்லையற்ற ஆசைக்கு சக மனிதனான ராஜசேகரை சுட்டு வீழ்த்தும் முறை மின்வேலி அமைத்து விலங்குகளை கொல்லும் இடம் மனிதனின் மிருக குணத்தை காட்டுகிறது. திரும்பிய திசையெங்கும் மூங்கில்களை கொண்ட காடு ஒருபோதும் நிசப்தமாக இருக்காது அது போல இக்கதை ராஜவனம் முழுவதும் வனத்தை ,மொழியை, மக்களை பற்றி பயணிக்க வைத்து மனதில் நிரம்புகிறது.
நன்றி
#உஷாகனகு
ராஜவனம்
(குறுநாவல்)
ஆசிரியர் : ராம் தங்கம்
வெளியீடு : வம்சி புக்ஸ்
விலை : ₹70