ராஜவனம்- மதிப்புரை- ராதா.சி

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ராம் தங்கம் அவர்களுக்கு…
   வணக்கம்!
   தங்களுடைய ராஜவனம் நாவலை படித்து விட்டு ஃபோனில் பேசினால் முழுமையாக சொல்லி விட முடியாது என்பதால் இந்த கடிதம்.  நாங்கள் வசிக்கும் பகுதியில் தினந்தோறும் கண்களில் படும் குரங்குகள் மற்றும் காட்டெருமைகள் பற்றி பெருமை பேசும் எங்களை பேசமுடியாமல்  செய்து விட்டது ராஜவனம்.
உண்மையில் காடறிதல் என்றால் என்ன? என்று ராஜவனத்தை முழுவதும் வாசிக்கும் போதுதான் அறிந்து கொண்டேன். வேள்பாரியில் பறம்பின் ஆசான் தேக்கன் சிறுவர்களை காடறிவதற்காக வனத்துக்குள் கூட்டி செல்வார். அத்தகைய சிறார்களை போன்று நாங்களும் உங்கள் விரல் பிடித்து முகளியடி மலை அடிவாரத்தில் இருந்து நந்தியாறு வரை நடந்து வந்து விட்டோம் திரும்பி வர மனமில்லை.
   ராம் உங்களுடைய கதைகளின் தனிச்சிறப்பு என்ன தெரியுமா? அந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் ஒருவர் நீங்களாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அப்படித்தான் ராஜவனம் கோபாலும்.
  பாரஸ்ட் ரேஞ்சர் ராஜசேகர் மனதை விட்டு அகல மறுக்கிறார். அவர் கைகளில் இருந்த நாலு அடி நீள கல் மூங்கில் கழி எப்படி இருக்கும் என்று பார்க்க தோன்றுகிறது. ‘ஆன ராஜசேகர்’ என்று அவருக்கு பெயர் எப்படி வந்தது என்பதை சொல்லுமிடம் சிறப்பு.
நந்தி ஓடையின் ஓரத்தில் நிற்கும்  நீர் மருது மரங்களின் பக்கவாட்டு வேர்கள் நெளிந்து கிடக்கும் கட்டு விரியன் பாம்பு குட்டிகள் போல வளைந்து கிடந்தன.  இதைப்போன்று எண்ணற்ற வர்ணனைகள் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இந்த கதையின் தனிச்சிறப்பு என்னவென்றால் உங்கள் வட்டார வழக்கில் எழுதியதுதான்.
திருக்கார்த்தியல் எழுதிய ராம் தான் ராஜவனம் எழுதியவர் என்றால் நம்புவது கொஞ்சம் கடினம்தான். கோபாலை போலவே எங்கள் மனமும் நிறைந்து இருக்கிறது. வனதெய்வத்திடம் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம். ராம் தங்கம் மென்மேலும் பல நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் பல விருதுகளை  பெறவேண்டுமென்றும்.
      வாழ்க வளமுடன்!
                  இப்படிக்கு
                   ராதா.சி
                  28/12/20
                 கோத்தகிரி

About the author

ramthangam

Add comment

By ramthangam