ராஜவனம்- மதிப்புரை-எஸ். ராமகிருஷ்ணன்

ராம் தங்கம் நம்பிகை தரும் இளம்படைப்பாளி. இவரது திருக்கார்த்தியல் நல்ல சிறுகதைத் தொகுப்பு. இவரது ராஜவனம் என்ற நாவலை வாசித்தேன். எண்பது பக்கங்கள் கொண்ட சிறிய நாவல். முகளியடி மலையிலுள்ள நந்தியாற்றின் மூலம் காணச் செல்லும் பயணத்தின் கதை.
காடு நூறாயிரம் உயிர்களின் வாழ்விடம். காட்டின் பிரம்மாண்டம் அதன் மரங்கள். காட்டில் எப்போது இருள் மிச்சமிருக்கிறது. பாதைகளை அழிப்பது தான் காட்டின் இயல்பு. மழைக்காலத்தில் காடு கொள்ளும் ரூபம் விசித்திரமானது.
கோபாலும் அவன் நண்பர்களும் முகளியடி மலையை நோக்கி செல்கிறார்கள். அவர்களின் பயணம் மெல்ல காட்டின் இயல்புகளை அறியத் துவங்குவதாக அமைகிறது. பயமும் வசீகரமும் ஒன்று கலந்த அந்தப் பயணத்தின் ஊடாக காட்டில் வாழும் விலங்குகள் பறவைகளை அவதானித்தபடியே நடக்கிறார்கள். காட்டின் சங்கீதத்தைக் கேட்கிறார்கள. காணிகளின் குடியிருப்பிற்குச் செல்லும் வரை காட்டின் மீது மயங்கியவர்களாகவே நடக்கிறார்கள். புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
காணிகளின் குடியிருப்பினை அடைந்த போது கோபால் தனது தந்தை வனக்காவலர் ராஜசேகர் என மூட்டுக்காணியிடம் சொல்கிறான். ஆன ராஜசேகரா என்று மூட்டுக்காணி கேட்கிறார். அந்த இடத்திலிருந்து கதை தன் உச்சத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கிறது. காணிகளின் நினைவில் ராஜசேகர் என்றும் நிலைத்திருக்கிறார். அவன் ராஜசேகரின் மகன் என்பதை அறிந்து கொண்ட காணிகள் அவனிடம் நெருக்கம் கொள்கிறார்கள். அன்பு காட்டுகிறார்கள். காணிகளுக்கு ராஜசேகர் செய்த உதவிகளும், காட்டுயானைகளை பாதுகாக்க அவர் எடுத்த முயற்சிகளும் அழகாக எழுதப்பட்டுள்ளன
உண்மையில் இந்தப் பயணம் நினைவுகளின் வழியே கோபால் தன்னைக் கண்டறியும் பயணமாகவே அமைகிறது. காணிகளின் உலகை ராம் தங்கம் மிக நன்றாக எழுதியிருக்கிறார்.
எளிய மொழியில் நேரடியான கதை சொல்லுதலின் வழியே நம்மையும் காட்டிற்குள் கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.
வாழ்த்துகள் ராம் தங்கம்

About the author

ramthangam

Add comment

By ramthangam