முகளியடி மலையில் நந்தி ஆறு உற்பத்தியாகும் இடத்தைப் பார்க்க களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயமாக மாறப் போகும் வனத்தில்,கோபால் நண்பர்களுடன் மேற்கொள்ளும் ஆபத்தான பயண அனுபவங்கள் குறுநாவலாக விரிந்திருக்கிறது.
காட்டு மாடு, சிறுத்தை, யானை, புலி, செந்நாய், கட மான், வரையாடு, கொண்டை பாம்புண்ணிக் கழுகு,செம்பருந்து,வெட்டுக் கிளி, முதுகில் குட்டிகளைச் சுமந்து செல்லும் தேள், மூங்கில் அரிசி,சோலை மந்தி,மழையை உள்வாங்கி சிற்றோடைகளாக மாற்றித் தரும் சோலைக் காடுகள், தேன் சிட்டு, நாகணவாய், கள்ளிப் புறா, காட்டுக் குயில், தீஞ்சிட்டு, மரவட்டை, மலை மொங்கான் (இருவாட்சி?) மூங்கில் விரியன் பாம்பு, மலைப் பாம்பு, நீலக் குறிஞ்சி மலர், வால் காக்கை, மயில்கள் என அத்தனை வனவுயிர்களும் துல்லியமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கூட்டு குடிநீர்த் திட்டத்திற்காக தோண்டப்பட்டு மண் மூடிய குழிகள் நிறைந்த சாலைகளில் வழுக்கி விழுபவர்கள், கர்ப்பிணிப் பெண்ணைப் போல்அசைந்து செல்லும் பேருந்துகள் நிறைந்த நகரத்தின் அவலங்களை, காடுகளின் ஆதிகுடிகளை காட்டிலிருந்து வேரோடு பிடுங்கி வீசியெறியும் கொடுமைகளை, அதிகார வர்க்கம் காடுகளின் பெருஞ் செல்வங்களை சூறையாடுவதை, அவற்றை நேர்மையான அதிகாரியொருவர் தன்னந் தனியாக எதிர்ப்பதைப் பற்றியும் பேசுகிறது ராம் தங்கத்தின் எழுத்து.
வரையாடுகளுடன் ஸெல்பி எடுத்து பேஸ்புக்ல போட்டா வனத்துறை அரெஸ்ட் பண்ணிரும், மார்த்தாண்டவர்மா ஆண்டுக்கொரு முறை வனப் பகுதிக்கு வந்து காணி மக்களை சந்தித்துச் செல்வார் போன்ற தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆதிப் பழங்குடிகளான காணிகளின் மீது பொறாமையும் ஆச்சர்யமும் கொள்ள வைக்கும் எளிய அழகிய வாழ்வை அவர்களது மொழியிலேயே நேர்த்தியாக விவரிக்கிறார்.
நந்தியாற்றின் மூலத்தைப் பார்க்கப் போன கோபாலுக்கு அவனது அப்பா ஆனை ராஜசேகரின் மீதான காணிகளின் மரியாதையும், அன்பும் அதற்குக் காரணமான அவரது நேர்மையையும் கேட்கவும் வாய்க்கிறது. காணிகளுக்கு மட்டுமல்ல,கோபாலின் தலையைக் கால்களால் அழுத்திய புலிக்கும் அது தெரிந்திருக்கிறது. நம் அருகில் இருப்பவர்களை, இருந்தவர்களைப் பற்றி இப்படி அடுத்தவர்கள் சொல்லித்தானே நாம் அறிந்து கொள்கிறோம்.
வனப் பித்தன் நான். கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகி விட்டது வனமொன்றைப் பார்த்து. இன்றைய மதுரை பழனி பேருந்துப் பயணத்தில், முகளியடி, அழகிய பாண்டியபுரம், வேளிமலை, களியல், குலசேகரம், பூதப்பாண்டி வனச் சரக அடர் வனங்களில் ஆரம்பத்தில் கோபால், ஆன்றோ, ராஜேசுடனும், பின் கோபாலுடனும் இருந்தேன்.
நன்றி ராம் தங்கம்.
– சிவகுமார் கணேசன்
ராஜ வனம்
ராம் தங்கம்
வம்சி புக்ஸ் வெளியீடு
விலை;70