ராஜவனம் – வீரசோழன் க.சோ. திருமாவளவன்

கண்களுக்குத் தரிசனம் தரும் ஆரண்யம்
———————————————————————–
எழுத்தாளர் ராம் தங்கம் அவர்கள் நாஞ்சில் நாடான நாகர்கோவிலைச் சேர்ந்தவர். நாகர்கோவிலில் இருந்து ஏராளமான எழுத்தாளுமைகள்  சுந்தரராமசாமி, பொன்னீலன், தோப்பில் முகமது மீரான், நீலா பத்மநாபன், நாஞ்சில் நாடன் என தமிழகத்திற்கு கொடையாக கிடைத்து இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து, எழுத்தாளர் ராம் தங்கமும் தனது படைப்புகளை செவ்வனேத் தந்து இருக்கிறார்.
எழுத்தாளர் ராம் தங்கத்தின் மற்ற நூல்கள்
1. காந்தி ராமன்
2. ஊர் சுற்றிப் பறவை
3. மீனவனுக்கு ஒரு கோவில்
4. திருக்கார்த்தியல்
5. பொன்னீலன் – 80
6.சூரியனை எட்ட ஏழு படிகள்
7.கடவுளின் தேசத்தில்
“காந்தி ராமன்” ஒரு வரலாற்று நூல், “மீனவனுக்கு ஒரு கோவில்” நாட்டார் வழக்காற்றியல் நூல், “திருக்கார்த்தியல்” சிறுகதைகள், பொன்னீலன் – 80கட்டுரைத் தொகுப்பு நூல், சூரியனை எட்ட ஏழு படிகள் சிறுவர்களுக்காக ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயர்ப்பு, “கடவுளின் தேசத்தில் ” பயணக்கட்டுரை, என எல்லா தளத்திலும் தன் முத்திரையைப் பதித்தவர். நாவலாக “ராஜவனம்”எனும் நூல் தந்திருக்கிறார். “ராஜவனம்”  எழுத்தாளர் ராம் தங்கத்தின் எட்டாவது புத்தகம்.
இவருடைய ‘திருக்கார்த்தியல்’ சிறுகதை தொகுப்பு தமிழ் இலக்கிய உலகின் அத்தனை விருதுகளையும் வென்ற நூல். “அசோகமித்திரன் விருது (2018) சுஜாதா விருது (2019) வடசென்னைத் தமிழ்ச்சங்கம் விருது (2019) படைப்பு இலக்கிய விருது (2019) சௌமா இலக்கிய விருது (2019) அன்றில் இலக்கிய விருது (2019)” ஆகிய விருதுகளை வென்றுள்ளது.
ராஜவனம் – நாவல்
——————————
புத்தகம் முழுவதும் வனத்தைப் பேசுகிறது. அதன் பசுமையைப் பாடுகிறது. தார்ச்சாலையில் நடக்கும் வெப்பத்தின் கால்கள் வனத்தில் நடந்தால் அதன் குளிர்மையும், பசுமையும் அணிகலனாகக் காலில் சூடிக்கொள்ளும். காலில் பசுமையும், காதுகளுக்கு மூங்கிலும் அதிலிருந்து வெளிவரும் ஓசையும்,பறவைகள், அடர் காட்டின் விலங்குகள் மற்றும் பூச்சிகளின் ரீங்காரமும் வாசிக்கத் தொடங்கியதில் இருந்தே ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது. கண்கள் வாசிக்க வாசிக்க அடர்ந்த வனங்களில் சுற்றித்திரிந்த அனுபவத்தோடு, வனம் பற்றிய நிறைய புரிதல்களையும், விழிப்புணர்வையும் தருகிறது .
நண்பர்களான கோபால்,ராஜேஷ் ,ஆன்றோ மூவரும் அடர் வனத்துக்குள் சென்று, அங்கு இருக்கும் முகளியடி மலையை பார்ப்பதற்காக  பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தப் பயணத்தில் காடு அச்சமூட்டுவதாக இருந்தாலும், அந்தக் காடு எப்போதும் அழகு தான் அதோடு, எப்போதும் அமைதிதான். எழுத்தாளர் காட்டை வைத்து சொல்லும் நுண் தகவல்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன. ஒரு தேளை, காட்டுத்தேள் ஒன்று அவர்கள் முன்னால் போய்க்கொண்டிருந்தது. உள்ளங்கை அளவு இருந்தது. அதன் கொடுக்கு ஜே.சி.பியின் ராட்சச கை போல இருந்தது. இப்படி உருவகம் செய்கிறார். அந்தத் தேள் அப்படியே நம் முன் நகர்கிறது.
செல்பி எடுப்பதற்காக வனத்திலிருந்து எடுக்கையில் பின்னால் புலி வந்து கோபாலின் தோளை அழுத்த, ஆன்ரோவும், ராஜேஷ்ம் ஓடி விடுகிறார்கள். கோபால் வன தெய்வத்தை வணங்கியதும், புலி அவனை விட்டு நகர்கிறது. அதன் பிறகு நாவலின் மாந்தர்களும், வனமும் “விறு விறு”வென நம்மிடம் பேசிக் கொண்டேயிருக்கின்றன.
காட்டில் இருக்கும் பறவைகள் , மரங்கள் , விலங்குகள் , பாம்புகள் பெயர்கள் மட்டுமல்லாமல் பட்டாம்பூச்சிகளின் வகைகள், நீலன், அழகி, வரியன், சிறகன் வரை என எல்லாவற்றையும் அழகாக குறிப்பிடுகிறார்.
குகைக்குள் செல்லும் கோபால் செய்தியைக் காண்கிறான். மார்த்தாண்ட வர்மா காணிப் பழங்குடி மக்களை வருடம் ஒரு முறை சந்தித்து விட்டுப் போவார் என்பதே அதன் வரலாறு. கோபாலுக்கு அப்பாவின் நினைவு மனதில் வரத் தொடங்கியது. வனக் காவலர்  உடையில் அவன் அப்பா ராஜசேகர் நினைவுகளில் உருப்பெற்றார்.
கோபாலின் அப்பா வனக்காவலராக பணி புரிந்தவர். அவர் தன்னிடம்  கதையாக சொல்லிய காட்டைப்பற்றி சொல்லியிருக்கும் அனைத்தையும் தந்தையின் சொல்படி, வனமெங்கும் பயணத்தில் கடைபிடிக்கிறான். காட்டில் இருக்கும் வன தேவதையை வணங்கி விட்டுத்தான் நந்தியாறு பிரசவிக்கும் இடத்திற்கு செல்ல வேண்டுமென என்று தந்தை எப்போதோ  சொல்லியிருந்ததை நினைவில் கொண்டு வன தேவதை இருக்கும் இடத்தை தேடுகிறான் கோபால். வனப்பகுதிக்குள் அவருக்கு யானை ராஜசேகர் என்ற பெயருண்டு. அதைப் பற்றி எழுத்தாளர் விவரிக்கும் எழுத்தில் வனமும், யானைகளும் கண் முன் வந்து நிற்கும்.
அந்த யானைக் குட்டியைப் புதைத்தனர். ஒரு சிறு குழந்தையை புதைப்பது போன்ற உணர்வு மேலிட ராஜசேகரும், வனக்காவலரும் அழுதார்கள் எனும் வரியில் எழுத்தாளரின் கருணையும், அன்பும் மிளிர்கிறது. இதனால் மட்டுமல்ல யானைத் தந்தம் கடத்த வருபவருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ராஜசேகர் யானை ராஜசேகராக பெயர் மாறுகிறது. அவரின் நேர்மையும், பழங்குடியின மக்கள் மேல் அவர் காட்டும் கனிவும், காட்டுக்குள் நுழையும் புல்லருவிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததைப் பற்றியும் விவரிக்கையில் கண் முன் யானைகளும், ராஜசேகரும் வந்து செல்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக காட்டுக்குள் வாழ்ந்த வன அலுவலர் ஆரல்வாய்மொழிக்கு சோதனைச் சாவடிக்கு மாற்றப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்.
கோபாலுக்கு அப்பாவின் நினைவு மனதில் வரத் தொடங்கியது. வனக் காவலர்  உடையில் அவன் அப்பா ராஜசேகர் நினைவுகளில் உருப்பெற்றார். எழுத்தாளர் இந்த இடத்தில் சொல்லும் வரிகளிலிருந்து வனமானவை கூடுதலாய் உயிர் பெற்று விடுகிறது. அதோடு மட்டுமல்லாது, ஒரு வனக்காவலர் தனது பணியை விருப்பத்தோடும், காட்டின் மீது அளவில்லா நேசமும் கொண்டு ஈடுபாட்டுடன் அரசின் பொக்கிசங்களை பத்திரமாக மீட்கும் மீட்பவராகவும் இருப்பதால், அதற்காக ராஜசேகர் எனும் மனிதர் இறந்தகாலமாகி விடுகிறார்.
புத்தகத்தின் பிற்பாதியில் வரும் காணிக்கரர்கள் என்னும் பழங்குடியினரின் வாழ்க்கை முறையும் , அவர்களை அச்சுறுத்தும் பிரச்னைகளும், மானிடப் பண்பாளராய் வனக்காவலராக வரும் ராஜசேகருக்கும் அவர்களுக்கும் இருந்த அற்புதமான உறவும், தந்தம் கடத்த வரும் கொள்ளையர்களைப் பிடிக்க பழங்குடியின மக்கள் இவருக்கு உயரமாக ஏறுமாடம் அமைத்துத் தந்து பெரும் உதவியாக இருந்ததும், என தொடரோட்டமாக வெளிச்சம் பரப்பி, காட்டுகிறார். அதுவும் பழங்குட மக்கள் மற்றும் காணிக்காரர்கள் பற்றியும் அவர் சொல்லும் தகவல்கள் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அவர்களைப் பற்றிய செய்திகளும் வாசிக்கையில் அவர்களோடு பேசிய உணர்வும் கிடைத்து விடுகிறது.
நாவலில் வரும் நேர்மையான வனக்காவலர் ராஜசேகர் போன்றவர்களால் பாதுகாக்கப்படும் பெரும் வனங்கள் பொக்கிசங்கள்தான். அப்படியான பொக்கிசமான வனங்கள் மற்றும் நேர்மையை, உண்மையைப் பேசும் “ராஜவனமும்” ராஜகிரீடத்தை சூடிக்கொள்கின்றன.
வீரசோழன் க.சோ. திருமாவளவன்

About the author

ramthangam

Add comment

By ramthangam