சுமார் 80 பக்கங்களைக் கொண்ட 70 ரூபாய் நாவல். ஆக ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் கொடுக்கலாம் என்று உங்களுக்கு உடனே தோன்றினால் அது போன்ற மடத்தனம் வேறு இல்லை. படிக்கத் தொடங்கி 7-8 பக்கத்தில் என்ன இது “உங்கள் விடுமுறையைக் கழித்ததை மூன்று பக்கங்களுக்கு மிகாமல் எழுது” என்று பத்தாம் வகுப்பு கேள்விக்குப் பதில் போல் இருக்கிறதே என நினைத்தேன். ஆனால் தோண்டத்தோண்ட வரும் புதையல்கள் போலவும், பறிக்கப்பறிக்கத் தென்படும் காய்களைப் போலவும் விவரணைகளும் தகவல்களும் கொட்டிக்கொண்டேயிருக்கின்றன. இதுதான் படிப்பதற்கு ஆக்ஸிலேட்டராக இருக்கிறது.
வனத்தினூடே பயணிக்கும் கோபால், ராஜேஷ் மற்றும் ஆன்றோ என்னும் மூன்று நண்பர்களின் …. இல்லை; இல்லை… அப்படிச் செல்வது சரி இல்லை. இயற்கையோடு இயைந்துகொண்டிருக்கும் வனம் ஒன்று மூன்று நண்பர்களின் பயணத்தால் காட்சிப்படுத்தப்படுகிறது. வன வாழ் விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பற்றிய நுண் தகவல்களே நம் வாசிப்பை நிரைத்துவிடுகிறது. இத்தனை விவரிப்புகளைக் கற்பனை என்று எண்ணி விடாதபடி ஆசிரியரின் எழுத்து நடை லாவகமாக நகர்த்திச் சென்றுவிடுகிறது.
வனத்தில் காணப்படும் முழுப் பூச்சிகளிலிருந்து யானை புலி வரை ஒன்றுவிடாமல் விவரணைகள் மூலம் நம் காட்சிக்கு வைத்துவிடுகிறார் ஆசிரியர் ராம் தங்கம். நாவலின் நாயகனாக கோபாலின் தந்தை வனக்காவலர் ராஜசேகர் வாசிப்போரில் ஆழ்ந்த தடத்தை ஏற்படுத்திச் செல்வது உறுதி. மறக்கவியலாத கதாபாத்திரமாக உருவெடுத்திருக்கிறார் ராஜசேகர்.
80ஆவது பக்கத்தில் நாவல் முடிவடைந்ததும் ஒரு முப்பரிமாண நாவலோ என்ற வாசிப்பு மயக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் கடைசி பக்கத்தில் இருப்பினும் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் எந்த வரியிலும் இணைந்திருப்பதாகவே இருந்தது. வம்சியின் புத்தக வடிவமைப்பு நேர்த்தியாக இருப்பது வாசகரின் கவனத்தைச் சிதறடிக்காமல் இருப்பது சிறப்பு. எனவே ஒரு பக்கத்திற்குள் ஓராயிரம் தகவல்கள் ஒளிந்து கொண்டிருப்பதால் ரூபாய் கணக்கு பார்க்காமல் சீக்கிரம் வாங்கி படியுங்கள்.
நன்றி & வாழ்த்துக்கள்