‘ராஜவனம்’ மதிப்புரை- விமலா தேவி

சமீபத்தில் யுவபுரஸ்கார் விருதை பெற்ற திருக்கார்த்தியியல் படைப்பின் ஆசிரியர் ராம் தங்கமே ராஜவனம் எனும் இப்புத்தகத்தின் ஆசிரியர். மிக நீண்ட நாட்களாக எனக்கு வனங்களுக்குள் ட்ரெக்கிங் செல்ல வேண்டும் என்ற ஆசை. அதனை இப்புத்தகம் வாசிப்பதன் மூலமாக ஆசிரியர் நிறைவு செய்து இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பாக குரங்கணி மலைகளுக்கு ட்ரெக்கிங் சென்ற சிலர் அங்கு ஏற்பட்ட காட்டு தீயில் கருகி பிணமானதை பத்திரிகை செய்திகளில் பார்த்ததும் எனக்கு இருந்த அந்த வனங்களுக்குள் செல்லும் ஆசை சற்று தளர்வு கொண்டது.  இருப்பினும் செல்லும் எல்லோருக்குமா இந்த மாதிரி நிகழப் போகிறது?. வாழ்வில் ஒருமுறையாவது மக்கள் சஞ்சாரம் இல்லாத, தொழில்நுட்ப சாதனங்களின் தொல்லைகள் இல்லாமல் இயற்கைக்குள் என்னை தொலைத்து, வன உயிர்களுள் ஒன்றாக நானும் ஒரு நாளாவது உலாவ வேண்டும் என்று மிகப்பெரிய ஆவா இருக்கிறது.

தென் தமிழகத்தின் நாஞ்சில் காடுகளுக்குள் இருக்கும் வன உயிர்களையும், மரங்கள் காடுகளையும் என் வீட்டு அறையில் இருந்து பார்த்து களிக்க வைத்து விட்டார். முக்கியமாக இந்த புத்தகத்தில் சொல்ல வேண்டும் என்றால் அந்த வட்டார வழக்கு மொழியை அப்படியே பயன்படுத்து இருப்பது தான் அழகே. சொற்கள் புதிதாக இருந்தாலும் பொருளை மட்டும் உணர்த்த தவறவில்லை.
நாவலின் தொடக்கத்தில் அரசியல் பேசும் விதமாக மழைக்காலங்களில் ஏற்படும் பள்ளங்களை நாகரீகத்தின் உச்சம் என காட்டி, நாகரிகமே இல்லாத வனங்களுக்குள் வாழும் மக்கள் நவீனமயமாக்கல் மாதிரி கழிவறை கட்டிக்கொண்டு இயற்கையோடு இணைந்த இயல்பான வாழ்க்கையை இயைந்து வாழ்வதில் யார் நாகரீகமானவர்கள்? என்று நம்மை சிந்திக்க வைக்கிறார்.

முகளியடி மலையுச்சியை காண்பதற்காகவும், நந்தியாற்று மூலத்தை பார்ப்பதற்காகவும் வனம் புகும் மூன்று தோழர்கள் வழியாக நானும் அந்த நாஞ்சில் நாட்டு காடுகளுக்குள் புகுந்தேன் . பலப்பல பெயர் தெரியாத பறவைகளையும் அதன் ஒலிகளையும், நெளிய முடியாமல் கிடந்த பாம்புகளையும்,  நீரோடையும்,  பூக்களையும் அருவிகளையும், குட்டிகளோடு உலாவித் திரியும் தையல் போடப்பட்ட புலியையும் ஒவ்வொரு இடத்திலும் இருக்கக்கூடிய வன தெய்வங்களையும் வணங்கி நாஞ்சில் காடுகளை தரிசித்து விட்டு வந்து விட்டேன்.
உண்மையில் இந்த காடு ராஜவனம்தான். ராஜசேகர் என்பவரின் வனமாகவே திகழ்ந்த இந்த நாஞ்சில் காடுகள், அந்த காடுகளுக்குள்ளே தன் உயிர் மூச்சும் போக வேண்டும் என்று ஏங்கியவரின் உயிர் மூச்சை, அவ்வேலையை விட்டு தூக்கி நெடுஞ்சாலை ஓரத்தில் செக்கிங் போஸ்டராக மாற்றி அபத்தமான கொலை செய்வது வனங்களை பாதுகாத்தவருக்கு அளிக்கும் மாபெரும் வெகுமதியாகவே இந்த பாவப்பட்ட உலகில் நான் காண்கின்றேன்.

தன் தந்தையோடு செலவழிக்காத காலங்களை எல்லாம் வனத்துக்குள் புகுந்த பின்னர் பழங்குடி மக்களோடு தங்கும் ஓர் நாள் தன் தந்தையின் அற்புதமான வாழ்வை கண்டு கோபால் ஆச்சரியப்படுகிறான். மூட்டுக்காணியிடமும் பிலாத்துக்காணியிடமும் அவன் தன் தந்தை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து, வனங்களை தன் தந்தை எந்த அளவுக்கு நேசித்தார் என்பதை புரிந்து கொண்டு, இறுதியில் அவர்களின் உதவியோடு அந்த வனத்தை முழுவதும் சுற்றிப் பார்த்து நிறைவு கொள்வதும் வன தேவதையும் கன்று ஈன்ற புலியும் அளித்த ஆசீர்வாதமாகவே எனக்குப்பட்டது.
 
வாழ்வின் சுவாரசியமே தெரியாததை தெரிந்து கொள்வதும் புரியாததை புரிந்து கொள்வதும் தான். அந்த வகையில் ராஜவனம் தென் தமிழகத்தில் நாஞ்சில் காட்டுக்குள் நம்மை கை பிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம். வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர் பிரபஞ்ச வாழ்வை அணுஅணுவாய் தொடர்ந்து ரசிக்க வைக்கின்றார். 
பழங்குடியினருக்கு கழிப்பறையை கட்டுவதற்கு வழி செய்த விதத்திலும் சரி, ரூபாய் இல்லாத பட்சத்தில் அதற்கு மாற்று ஏற்பாடு செய்த பட்சத்திலும் ராஜசேகர் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

 நன்றி ராம் தங்கம் அவர்களே! இக்காட்டுக்குள் எந்த வன அதிகாரியின் உத்தரவு இன்றியும் என்னை கைப்பிடித்து அழைத்து சென்று ஓர் நாள் பழங்குடி மக்களோடு கலந்து பேசி, பழங்குடி வாழ்வியலை கண்டு, படுத்துறங்கி, வனம் பார்க்க வைத்து அழைத்து வந்ததற்கு.
கடைசியில் வந்த வன காவலர்களோடு ராஜேஷும் ஆன்றோவும் வந்து கலந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

About the author

ramthangam

Add comment

By ramthangam