காடு ஒருபோதும் நிசப்தமாக இருக்காது!
ஒரு காட்டுக்குள் நுழைந்து வெளியேறிய உணர்வு எனக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதை ஒரு நல்ல குறுநாவல் என்று ஒற்றை வரியில் எழுதி விட்டு கடந்து செல்ல முடியாதபடி எழுத்தாளர் இந்தக் குறுநாவலை வடிவமைத்து இருப்பதுதான் இந்தப் படைப்பின் இருப்பு.
காடுகளைப் பற்றிய புரிதல் காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியல் அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் அவர்கள் கையாளும் மருத்துவம் அவர்களுடைய உணவு முறைகள் வழித்தட குறியீடுகள் என ஆய்வு செய்து எழுதி இருப்பது கவனிக்கத்தக்க ஒன்று. குறிப்பாக யானைகளைப் பற்றி நிறைய எழுதி இருப்பது இந்த குறுநாவலில் சிறப்பம்சம்.
இந்த நாவலுக்குள் நிறையவே விலங்குகள் வந்துபோகின்றன. சில நமக்கு தெரிந்தவை. சில நமக்கு தெரியாதவை. சில நாம் பார்க்காதவை அல்லது கேள்விப்படாதவைகளாக இருக்கின்றன. எங்கே இவர் காடுகளைப் பற்றி மட்டுமே ஏதாவது ஒரு படைப்பாக எழுதியிருக்கக்கூடும் என்பதை நினைத்துதான் வாசித்தேன். பாதிக்குமேல் செல்லும் போதுதான் அதற்குள் ஒரு உயிர்மைநேயம் உடைய ராஜசேகர் என்பவரது கதை இருப்பதை கண்டேன்.
எழுத்தாளர் வாழும் பகுதியின் வட்டாரவழக்கை பயன்படுத்தி எழுதியிருக்கிறார். உண்மையிலேயே இந்த நாவல் ஒரு சிறந்த படைப்பாக இருக்கிறது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. வாழ்த்துகள் ராம்.
- பிறைமதி