“முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின் பரல் அவல் அடைய இரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்பு புறக் கொடுப்ப கருவி வானம் கதழ் உறை சிதறிகார் செய்தன்றே கவின் பெறு கானம்” (அகம். 4:1-7)
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் என்ற நம் பெரும்பாட்டானின் கூற்று நம்மால் செயல்படுத்தபடுகிறதோ இல்லையோ காடுகளால் நன்கு செயல்பட்டு வருகிறது. காடு பல்வேறு உயிரினங்களின் புகலிடம்; வாழ்விடம். காடுகளை மரங்களின் வகைமைகளைக் கொண்டே வகைப்படுத்தினும், காட்டுச் சூழல் மண்டிலம் என்பது விலங்குகள், பறவைகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும். பல்லுயிரின வளர்ச்சிக்கு அடித்தளமாக இக்காடுகள் விளங்குகின்றன. அதனால் தான் காடுகளுக்கு பல பெயர்களை தமிழ் இலக்கியம் வரையறுகிறது.
மரங்கள் அடர்ந்த மலைக்காடுகள் கானகம் என்றும், முல்லை நிலக் காடுகள் புறவு என்றும், அரசனது காவலில் உள்ள காடு மிளை, அரண் என்றும், சிறு மரங்கள் நிறைந்த காடு இறும்பு என்றும், மரங்கள் கரிந்து போன காடு சுரம், பாலை என்றும், வெயிலால் வாடிய காடு முளி என்றும், காவலையுடைய இளமரச் சோலை கடிகா என்றும், பாழிடமாகிய புறங்காடு பறந்தலை என்றும், முல்லையும் குறிஞ்சியும் சார்ந்த காடு வன்புலம், புன்புலம் என்றும், உயர்ந்தோங்கிய மரங்கள் செறிந்த காடு கடறு என்றும், நீர் ஏறாத மேட்டு நிலமாகிய புன்செய் காடு விளை என்றும் அழைக்கப்பட்டன. இவை தவிர கா, கான், அடவி, வனம், அரணம், முதை, பொதி, அரில் போன்றன காடுகளைக் குறிக்கும் பல்வேறு சொற்களாகும். இத்தனை பெயர்களில் இனி ராம் தங்கத்தின் ராஜ வனம் என்ற பெயரும் இடம் பெறும்
கதை குமரி மாவட்ட வனத்திற்குள் நம்மை அழைத்து செல்கிறது. கோபால், ராஜேஷ் மற்றும் ஆன்றோவுடன் . திருநந்திக்கரை வழியாக மலை ஏற தொடங்கும் மூவரும் நந்தி ஆற்றின் மூலத்தை காணும் ஆவலுடன் கிளம்புகிறார்கள்.அதன் பிறகு பொத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் புகைப்படமாக மாறுகிறது.ஒவ்வொரு எழுத்தும் அட்டைப்பூச்சியாக மாறி நம்மை உறிஞ்சுக் கொள்கிறது.காட்டுத் தேள், வெண்புள்ளி புதர் தவளைகள், கூகைகள், கடமான்கள், சோலை மந்திகள், சுருகு மான்கள், மரவட்டை, மலைமொங்கான், வால் காக்கைகள், இன்னும் பல வகை சிட்டுக்கள், பட்டாம்பூச்சிகள் என்று நீளும் பட்டியலில் செம்புகொத்தி பறவையும், மூங்கில் விரியன் பாம்பும் எனக்கு வியப்பை எற்படுத்தியது.
வனக்காவலராக வரும் கோபாலின் அப்பா ராஜசேகரன் காடுகள் அதில் வாழும் உயிரினங்களின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தி இவரை போல நாம் இல்லையே என்னும் ஏக்கத்தை உண்டாக்குகிறார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 50,989 சதுர ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ராஜசேகரின் கால் படாத இடங்களே கிடையாது.மலையில் பிறந்து வளர்ந்த பழங்குடிகளை விட ராஜசேகர் புலியைப் போல பாய்ந்தும், யானையைப் போல வேகமாகவும் ஓடுவார். குரங்கைவிட வேகமாக மரத்தில் ஏறுவார். இரவானாலும் பகலானாலும் வனத்திற்குள் அவரது கண்கள் வெளிச்சமாகவே இருக்கும். மேலும் இவரை பற்றி சொன்னால் ஸ்பாய்லரில் சேரும் என்பதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.
இந்த கதையில் வரும் காணி பழங்குடிங்களின் நெஞ்சத்தில் மட்டும் அல்லமால் நமது உள்ளத்திலும் ஆன ராஜசேகரனாக ராஜ வனமாக நாற்காலி போட்டு அமர்ந்து விடுகிறார். அரசங்கத்தாலும் பன்னாட்டு நிறுவங்களாலும், காட்டை விட்டு துரத்தப்பட்டு நகரகளுக்கு வந்த பழங்குடிகளின் துயரத்தையும் அவர்களை ஏமாற்றும் வணிக மிருங்களை பற்றியும் மிக அழுத்தமாக பதிவு செய்கிறது இந்த புத்தகம்.
தாவரமாக இருந்தால் தான் வெயிலின் ருசி தெரியும் என்பதை போல ராம் தங்கமாக இருந்தால் தான் காட்டின் ருசியே அறிந்துகொள்ள முடியும் என்பதை அவரின் இந்த புத்தகம் நமக்கு பறைமுரசு அடித்து பறைசாற்றுகிறது. கடைசியாக ஆன ராஜசேகரன் பழங்குடிகளுக்கு சொன்னதை சொல்லி முடிக்கிறேன்.”எப்பளும் உங்ககிட்ட வெளஞ்சத மட்டும் வெளியே கொண்டு கொடுங்க. வித்த எப்போளும் குடுத்துராதீங்க” இது விதைக்கு மட்டும் அல்ல நம் அடையாளத்திற்கும் பொருந்தும்.
வனம் செய்வோம்! வளம் மீட்போம்! உயிர் காப்போம்!
– கோடி