மனதின் ஆழ் உறக்கம் கலைக்கும் பயணம்.
நான் கடலோரவாசி. எனக்கு கடலும் கடலோரமுமே பிடித்தமான இயற்கைச் சூழல்கள். பயணங்களில் வனங்களைக் கடந்திருந்தாலும் நடை பயணமாய் வனத்தைக் கடக்கும் வாய்ப்பு இன்று வரை கிட்டவேயில்லை. அந்தக் குறையை எழுத்தாளர் ராம் தங்கத்தின் ‘ராஜவனம்’ என்ற இந்தப் பதிவு தீர்த்து வைத்திருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.
வாழ்வின் சுவாஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும், புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலையோடு விலங்குகள், மரம், செடி கொடிகள், பறவை, பட்சிகள் எனத் தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து, அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது.
பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலான சொற்கள், நாஞ்சிலின் புழங்குமொழிச் சொற்கள். மற்றொரு பகுதியைச் சேர்ந்த தமிழ் வாசகருக்கு இந்தப் புழங்கு மொழிச் சொற்கள் நெருடலை ஏற்படுத்தலாம், ஆனால் ராம் தங்கம் என்ற அடித்தள மக்களின் கதை சொல்லிக்கு தனது மேதாவிலாசத்தை விடவும் மக்களின் வாழ்வியலும், அவர்தம் புழங்கு மொழியும் அதன் தொடர் பயன்பாடும் முக்கியம் என்று பட்டிருக்கிறது.
கதையின் ஆரம்ப வரிகளில் வரும், ‘பேருந்துகள் நிறைமாத கர்ப்பிணியாய் நெளிகின்றன’ என்ற உவமானத்திலிருந்தே ஆசிரியரின் சுற்றுச் சூழல் குறித்த அவதானிப்பும், அதை அவர் வாசகருக்கு அக்கறையோடு கடத்தும் பாங்கும் வெளிப்பட்டு விடுகிறது. அக்கறையற்ற அரசின் செயல்பாடுகளை, சீர்கெட்டுப் போன சமூக பழக்க வழக்கங்களைச் சாட, மக்களின் புழங்கு மொழியே எப்போதும் துணை நிற்கும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. வனப் பயணத்தை விவரிக்கும் காட்சிகள், நவீன கேமிராக்களில் பதிவானது போல அத்தனை துலக்கம்.
சமீபத்தில் எழுத்தாளர் சோ.தர்மனின் கூகை நாவல் படித்து முடித்திருந்தேன். பறவைகளின் நிர்வாணமே அழகு என்றிருப்பார். ராஜவனத்தில் ஆசிரியரின் கானுயிர் பற்றிய வர்ணனைகள் எனக்கு இந்த வரியையே ஞாபகப்படுத்தியது. இப்பிரபஞ்ச வாழ்வை, அணு அணுவாய் தொடர்ந்து ரசிப்பவனால்தான் இப்படியான வர்ணனைகளைச் செய்ய முடியும் என்பது என் கருத்து.
கடலில் பயணிக்கும் போது கரையின் வெகுதூரங்களில் மேலெழுந்து நிற்கும் மலை முகடுகளே பின்னிலக்காய் மாறி, கடக்கும் பாதை சொல்லும். ஆனால் கானகப் பயணத்தில் பின்னிலக்குகள் மறைந்து முன்னிலக்குகளே பிரமிப்பாய் மிளிர்கின்றன. அனுபவமற்ற துணிச்சலே வனப் பயணத்தின் ஆரம்பப் புள்ளி என்றாலும் ராஜவனத்தில் கதாநாயகனுக்கு, வனக் காவலராய் சுற்றுச்சூழல் மேல் அக்கறையாய் இருந்து மறைந்த தந்தையாரின் ஆத்மார்த்த வழிநடத்தல் எப்போதும் துணை நிற்கிறது.
வரலாற்றில் வாழ்ந்த நமது மன்னர்களுக்கு, பழங்குடி மக்களோடு தொடர்ச்சியான உறவு இருந்திருக்கிறது. பழங்குடிகளின் இயற்கை வளம் பேணும் வாழ்வியலை அதன் முக்கியத்துவத்தை அவர்கள் மதித்திருக்கிறார்கள். அதனால் நாடும், நாட்டின் இயற்கை வளமும் பாதுகாப்பாய் தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டன. அதுவே நிர்வாக அமைப்பை, காலனியவாதிகளிடமிருந்து சுவீகரித்துக் கொண்ட இன்றைய ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதையும், நவீன காலனியவாதிகளாகிப் போன அரசியல்வாதிகளையும் மக்களுக்கு எதிரான அவர்களின் தொடர் செயல்பாட்டையும் ராஜவனம் அக்கறையோடு பதிவு செய்கிறது.
ஆசிரியருக்கும், பதிப்பகத்தாருக்கும் என் அன்பின் வாழ்த்துகள்.
ஆர். என். ஜோ டி குருஸ்
சாந்தோம்,
சென்னை – 600 004