புலிக்குத்தி: நாஞ்சில் நாட்டுக் கதைகள் -சுப்பிரமணி இரமேஷ்

தமிழ்ச் சிறுகதை தற்போது பல்வேறு உடைவுகளைச் சந்தித்திருக்கிறது. மனிதர்களின் அக நெருக்கடிகளுக்குப் பின்னே மறைந்திருக்கும் நவீன வாழ்க்கை குறித்த போதாமைகளும் தனிமைத் துயரங்களும் இரண்டாயிரத்திற்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைகளில் காத்திரமாக எதிரொலித்தன. நவீன கோட்பாடுகளின்மீது நம்பிக்கையிழந்த பலர் மீண்டும் யதார்த்தவாதத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். இதில் ராம் தங்கமும் ஒருவர். சிறுகதை, நாவல், வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு எனக் குறைந்த காலகட்டத்தில் நவீன இலக்கியத்தில் தீவிரத்துடன் பங்காற்றியிருக்கிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘திருக்கார்த்தியல்’ இவர்மீது கனத்தைக் குவித்தது. இதன் தொடர்ச்சியாக ‘புலிக்குத்தி’ சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.

ராம் தங்கத்தின் புனைவு உலகம் பதின்பருவ சிறுவர்கள் குறித்தானது. பல்வேறு காரணங்களால் அகப்புற நெருக்கடிக்குள்ளாகும் சிறுவர்கள் இவரது கதைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருக்கிறார்கள். எழுத்தாளரையும் மீறி அவர்கள் இவரது புனைவில் ஊடுருவதாகவே கருதுகிறேன். ராம் தங்கம் காட்டும் சிறுவர்களின் உலகம் விவரிக்க முடியாத புதிர்த்தன்மையும் துயரங்களும் நிரம்பியது. குறிப்பாக அம்மாவை இழந்த சிறுவர்களின் வாழ்க்கை இச்சமூகத்தின்மீது நிகழ்த்தும் ஊடாட்டத்தைக் கூர்ந்த அவதானிப்புடன் எழுதி வருகிறார். எதிர்பாராமல் நிகழும் இழப்புகளும் அதனூடாக அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் வறுமையும் படைப்பாளரை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. இளமையில் வறுமை மிகக் கொடியது என்பது ஔவையின் வாக்கு. எப்படிக் கொடியது என்பதை ஔவை விளக்கவில்லை. ராம் தங்கத்தின் பல கதைகள் இதனை ஊடறுத்துச் சென்றிருக்கின்றன.

பெற்றோரை இழந்த சிறுவர்களின் வாழ்க்கை பெரும் சூதாட்டக் களமாக இருக்கிறது. ‘பஞ்சுமிட்டாயும் பால்ராஜ் அண்ணனும்’ கதையின் ஜீவா அம்மாவை இழந்தவன். ‘அந்நியம்’ கதையின் செந்தில் அப்பாவை இழந்தவன். முதல் கதையில் வரும் அப்பா, அம்மாவிற்குரிய இடத்தையும் நிரப்ப முயற்சிக்கிறார்; ஆனால் முடியவில்லை. இரண்டாவது கதையில் வரும் அம்மா, அப்பாவின் இடத்தில் வேறொருவரைத் தேர்வு செய்துகொள்கிறார். முடிவு, செந்திலை மீளமுடியாத இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. இவ்விரு கதைகளிலும் வரும் பெண்கள், அவ்விரு சிறுவர்கள்மீதும் தனிப்பட்ட ஆதிக்கத்தைச் செலுத்துகிறார்கள். பெண்களின் இழப்பும் தடம் மாறலும் அக்குடும்பத்தைச் சார்ந்த சிறுவர்கள்மீது துயரத்தைப் போர்த்தி விடுகிறது. அப்போது ஆண்களின் இடம் என்ன என்ற கேள்வியைப் பிரதி மறைமுகமாக முன்வைக்கிறது. ‘அடைக்கலாபுரத்தில் இயேசு’ என்ற சிறுகதையில் வரும் சிறுவன் ராஜா; இவனது நடத்தை அந்த ஊரின் புறச்சூழலால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆனால் இக்கதையின் முடிவு வாசிப்பவர்களை வேறொரு இடத்திற்கு நகர்த்துகிறது. ஒரு காலகட்டத்தின் திரையங்கச் சூழலை நகைச்சுவையுடன் ராம் தங்கம் எழுத முயன்றிருக்கிறார். ஆனால் கதை ராஜாவின் தனிப்பட்ட குணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

‘புலிக்குத்தி’ என்ற சிறுகதை நாட்டுப்புற கதைகளுக்குரிய தன்மைகளுடன் எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் இடம்பெற்றுள்ள தேவையற்ற வருணனைகள் நாட்டார் கதைகளின் உருவத்தை அளித்துவிடுகின்றன. ‘சாதி வாக்கு’, ‘கம்யூனிஸ்ட்’ ஆகிய இரு கதைகளும் புதிய மோஸ்தரில் எழுதப்பட்ட அரசியல் கதைகள். தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் சாதி குறித்த பொதுப்புத்தி மனநிலையைச் ‘சாதி வாக்கு’ சிறுகதையினூடாகச் செறிவான புனைவாக்கியிருக்கிறார் ராம் தங்கம். உள்ளாட்சித் தேர்தலில் சாதிதான் அரசியல் செல்வாக்கைவிட பலம் காட்டுகின்றது. இருவேறு கட்சிகளில் இருந்தாலும் சாதியால் ஒன்றிணையும் வன்மத்தைத் தேர்தல் நேரங்களில் காணலாம். எந்தவொரு தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்துவதற்கு அப்பகுதியின் சாதிக் கணக்குப் பார்க்கும் நிலையை நாம் இன்னும் கடந்துவிடவில்லை. அந்தவகையில் இக்கதை தொகுப்பில் தனித்துத் தெரிகிறது.

‘அடைக்கலாபுரத்தில் இயேசு’, ‘அந்நியம்’ ஆகிய இரு கதைகளிலும் சிறுவர்களின் இடையீட்டைக் கடந்து, இதில் பேசப்படும் காமம் சார்ந்த கதையாடல்கள் முக்கியமானவை. ராம் தங்கம் இது குறித்து வெளிப்படையாகத் தம் புனைவுகளில் எழுதி வருகிறார். பாலியல் சார்ந்த வசைச் சொற்களை அதன் வீரியத்துடன் கதைகளுக்குள் பயன்படுத்துகிறார். ‘காத்திருப்பு’ என்ற சிறுகதை, புனைவையும் நிஜத்தையும் ஒன்றாக்கும் முயற்சியில் எழுதப்பட்டிருக்கின்றது.

ராம் தங்கத்தின் கதைகளில் உணவுப் பொருட்களும் சமையல் குறிப்புகளும் அதிகளவில் இடையீடு செய்திருக்கின்றன. புனைவிற்கு இது சுமை. அடுத்து, கதைசொல்லி பேசுவது போன்றே கதை எழுதுவதையும் தவிர்த்தல் நலம். கதாபாத்திரங்களின் உரையாடல் புனைவில் மிகக் குறைவாகவே இடம்பெற்றுள்ளது; இதனால் கதாபாத்திரங்களின் மோதல் கதைகளில் வலிமையாக இடம்பெறவில்லை. உரையாடலில்தான் வட்டாரமொழி காத்திரமாக வெளிப்படும். வளமான நாஞ்சில் நாட்டு மொழியை ராம் தங்கம் பெற்றிருக்கிறார். அதனை அவர் புனைவுகளில் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

About the author

ramthangam

Add comment

By ramthangam